அன்றுதொட்டு இன்றுவரை கிழக்கு மக்கள் தமிழ் தலைமைகளினால் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வந்த சரித்திரங்கள் இருக்கின்றன. இவ்வாறு கிழக்கு மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வருவதற்கு கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பல அரசியல்வாதிகள் பக்க பலமாக இருந்து வருகின்றனர். அந்தக் காரியத்தைத்தான் இன்று கிழக்கிலே இருக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் அவர்களுக்கு வால் பிடிப்பவர்களும் செய்துகொண்டிருக்கின்றனர்.
இன்று மட்டக்களப்பிலே இருந்து தெரிவான மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் கிழக்கு மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வருவதற்கு உறுதுணையாக இருப்பது கவலைப்படவேண்டிய விடயம். கிழக்கு மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வருகின்றனர் என்பதனையும் தமது தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தொடர்ந்தும் தம்மையும், கிழக்கு மக்களையும் ஏமாற்றி வருகின்றது என்பதனை இந்த மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் அறியாமலோ அல்லது உணராமலும்இல்லை. ஆனாலும் தாம் அரசியல் இலாபம் தேடவும், சொத்துச் சேர்க்கவும் பொம்மைகள் போன்று சம்பந்தனோ அல்லது அவரைச் சார்ந்தவர்கள் சொல்வதற்கெல்லாம் தலையசைத்துக் கொண்டிருக்கின்றனர்.
உண்மை நிலைமைகளைச் சொன்னால் வெளிநாடுகளிலே இருக்கின்ற புலம்பெயர் தமிழர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் கொடுக்கின்ற பல மில்லியன் கணக்கான பணங்களை தாம் இழந்துவிடுவோம். தாம் அரசியல் நடாத்த மூடியாது அரசியலில் இருந்து ஓரங்கட்டப்படுவார்கள் என்பதனை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரும் நன்கு அறிந்து வைத்துள்ளனர். இதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப்பீடம் தமிழ் மக்களை எவ்வாறெல்லாம் குழப்பமடையச் செய்து மீண்டும் மக்களை உசுப்பேற்றி யுத்தத்தை நோக்கி திசைதிருப்பி தமிழர்களின் பிரச்சினையில் குளிர்காய நினைக்கின்றதோ அவற்றுக்கெல்லாம்பக்கப்பாட்டுப் பாடிக்கொண்டிருக்கின்றனர் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரும்.
யுத்தத்தின் பின்னர் கிழக்கு மாகாணசபை உருவாக்கத்தின் பின்னர் கிழக்கு மாகாணம் துரிதமாக வளர்ச்சி அடைந்து வருகின்றது. இந்த அபிவிருத்திகளை சம்பந்தன் போன்றவர்கள் இல்லாமல் செய்யவேண்டும் என்பதில் அக்கறையாக இருக்கின்றனர். கிழக்கின் அபிவிருத்தி என்பது அவர்களுக்கு பிடிக்காத விடயம். கிழக்கு மாகாண முதலமைச்சர் எதைச் செய்தாலும் பிழை பிடித்துக் கொண்டிருக்கின்ற மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவருக்கும் எந்த அருகதையும் இல்லை. கிழக்கு மாகாண முதலமைச்சர் பல அபிவிருத்தித் திட்டங்களை துரிதமாக முன்னெடுத்து கிழக்கு மாகாணத்தை அபிவிருத்திப்பாதை நோக்கி கொண்டு செல்கின்றார்.
இந்த மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களாகப் பதவியேற்று மக்களுக்காக எதனைச் செய்திருக்கின்றனர். மக்களைக் குழப்பமடையச் செய்ததைத் தவிர? பிரதேச அபிவிருத்திக்காக பாராளுமன்ற உறு;பினர்களுக்கு ஐம்பது இலட்சம் ரூபாய் ஒதுக்கப்படுகின்றது. இந்த ஐம்பது இலட்சம் ரூபாவை இந்த மூவரும் என்ன செய்தனர்? ஏதாவது அபிவிருத்தி செய்திருக்கின்றனரா? யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்காக புலம்பெயர்ந்து வெளிநாடுகளிலே இருக்கின்ற தமிழர்களும், தமிழர் அமைப்புக்களும் இந்தப் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பெருந்தொகைப் பணத்தினை கொடுக்கின்றனர். அத்தனை கோடிக்கணக்கான பணத்தினையும் தமது குடும்பத்தின் அபிவிருத்திக்காக கொள்ளையடிக்கின்றனர். கடந்த வருடம் கிழக்கிலே ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்திலே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக வெளிநாட்டிலிருப்பவர்களினால் பாரிய தொகைப்பணம் ஒரு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரிடம் வழங்கப்பட்டிருந்தது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒருவருக்காவது இதுவரை வழங்கப்படவில்லை.
மட்டக்களப்பிலே இருக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் மக்களுக்காக என்ன செய்துகொண்டிருக்கின்றனர்? ஒருவர் அறிக்கை மன்னனாக எதற்கெடுத்தாலும் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கின்றார். இவர் அறிக்கை விட்டு இதுவரை எதனைச் சாதித்திருக்கின்றார்? அறிக்கை விடுவதற்காகவா அரசியலுக்கு வந்தார்? கிழக்கு மக்களின் பிரச்சினைகளைப்பற்றி இவருக்குத் தெரியுமா? இவர் அறிக்கை விடுவதற்கும் கிழக்கு மாகாண முதலமைச்சரை பிழை பிடிப்பதற்கும் எந்த விதத்திலும் அருகதையற்றவரே. இவர் எவ்வாறு அரசியலுக்கு வந்தவர் என்பதனை அவர் மறந்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் மக்கள் மறந்திருக்கலாம். இவர் எப்படி அரசியலுக்கு வந்தார். இவரின் கடந்தகாலப் பக்கங்களைப் புரட்டப்போனால் பக்கம், பக்கமாக எழுதிக்கொண்டே போகலாம். பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உயிரைப் பறித்துவிட்டு அரசியலுக்கு வந்தவர்தன் இந்த அறிக்கை மன்னன் என்பதைமட்டும் குறிப்பிட விரும்புகின்றேன்.
இன்னொரு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோவில், கோவிலாக பூசை முடித்துத் திரிகின்றார். இவரின் பதவி பாராளுமன்ற உறுப்பினரா? அல்லது பூசாரியா? தான் எந்தக் கோவிலுக்குப் போணாலும் அந்தக் கோவிலில் தான் பூசை செய்கின்றார். மக்கள் இவரை பாராளுமன்றம் அனுப்பியது கோவில்களில் பூசை செய்யவா? அல்லது மக்களுக்காகச் சேவை செய்யவா? இவர் இந்துக்களிடையே குழப்பங்களையும் ஏற்படுத்தி வருகின்றார். இவருக்கு தன் கட்சியின் கொள்கையோ தன் கொள்கையோ இதுவரை தெரியாது. இவருக்கு கட்சியில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் இருக்கும் அப்படிப்பட்டவர்தான் இந்த ஆசாமி.
மற்றுமொருவர் அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர் என்பதனைவிட கிழக்கு மக்களைத் தின்ன வந்தவர் என்று சொல்லலாம். கிழக்கு மக்களை தமக்குக்கீழ் வைத்துக்கொண்டு கிழக்கு மக்களை பல்வேறு வழிகளிலும் ஏமாற்ற நினைத்த வடக்குத் தலைமைகளின் சூழ்ச்சிகளுக்கெல்லாம் பக்க பலமாக நின்று கிழக்கு மாகாணத்துக்கும், கிழக்கு மக்களுக்கும் துரோகம் செய்தவர். இன்றும் அதனைத்தான் செய்து வருகின்றார்.
கிழக்கு மக்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மக்களை ஏமாற்றவில்லை என்று இந்த மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது மனதைத்திறந்து மனசாட்சிக்கு விரோதமில்லாமல் சொல்லட்டும் பார்க்கலாம். சொல்லமாட்டார்கள் இது ஒருபுறமிருக்க இந்து சமயத்தை வழிநடத்தவதாகச் சொல்லும் ஆசாமியே வாய் நிறையப் பொய்களைக் கட்டிக் கொண்டு மக்களையும், இந்து சமயத்தையும் குழப்பமடையச் செய்வதுதான் வேடிக்கை.
தொடரும்....
0 commentaires :
Post a Comment