10/13/2011

பாரத லக்ஷ்மன் கொலை: 'பக்கச் சார்பற்ற விசாரணை தேவை'

முல்லேரியாவில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் இறுதி நிகழ்வு கொலன்னாவையிலுள்ள பொது மைதானமொன்றில் இன்று புதன்கிழமை நடைபெற்றுள்ளது.
முன்னதாக, சில தினங்களுக்கு முன்னர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் இல்லத்துக்குச் சென்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
பிரதமர், அமைச்சர்கள், எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் என பெருமளவிலானோரின் இறுதி அஞ்சலியுடன் பிரேமச்சந்திரவின் பூதவுடன் தகனம் செய்யப்பட்டது.
இல்லத்துக்குச் சென்று இறுதி அஞ்சலி செலுத்தியிருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் அனுதாபச் செய்தியும் இறுதி நிகழ்வின் போது வாசிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஆளுங்கட்சி அரசியல் மோதல்

துமிந்த சில்வா
துமிந்த சில்வா
கடந்த சனிக்கிழமை தேர்தல் தினத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா மற்றும் பாரத லக்ஷ்மன் ஆகிய ஆளும் மகிந்த அரசில் செல்வாக்குடன் இருந்த, இரண்டு அரசியல் பிரமுகர்களுக்கிடையிலான நேரடி மோதலிலே கொலையில் முடிந்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் வாக்குமூலம் அளித்திருக்கின்றனர்.
இந்த சம்பத்தில் துப்பாக்கிச் சூட்டுக்காயத்துக்கு இலக்கானவர்களில் நான்கு பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
இதன்போது தலையில் படுகாயமடைந்த துமிந்த சில்வா இன்னும் ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
அரச பிரமுகர் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த இருவர் அடங்கலாக மேலும் மூன்று பேரும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
பாரத லக்ஷ்மன் கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு கூறுகின்றது.
இவர்களில் ஒருவர் 12 கைத்துப்பாக்கிகள் அடங்கலாக 16 ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, ஜனாதிபதி ஆலோசகர் பாரத லக்ஷ்மனை சுட்டவர் என்று குற்றஞ்சாட்டப்படும், துமிந்த சில்வாவின் மெய்ப் பாதுகாவலர் ஒருவர் வரும் 18ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பக்கச்சார்பற்ற விசாரணை தேவை

'பக்கச் சார்பற்ற விசாரணை தேவை'- திஸ்ஸ விதாரண
'பக்கச் சார்பற்ற விசாரணை தேவை'- திஸ்ஸ விதாரண
தேர்தல் தினத்தன்று இந்த ஆளுங்கூட்டணிக் கட்சிப் பிரமுகர்கள் இருவரும் தமது ஆதரவாளர்களுடன் இரண்டு வாகனத் தொடரணிகளில் வந்த போது நேருக்கு நேர் சந்திக்க நேர்ந்ததாகவும், இருவரும் காரை விட்டு இறங்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அதன்போது இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்திலேயே இந்த ஆட்சேதங்கள் நேர்ந்துள்ளதாகவும் உள்ளூர் செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன.
சந்திரிகாவின் கணவரான விஜே குமாரதுங்கவுக்கு 1980களில் மிகவும் நெருக்கமானவராக இருந்த பாரத லக்ஷ்மன், அவருக்குப் பின்னர் சந்திரிகா அரசில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார், உயிரிழக்கும் போது ஜனாதிபதி மகிந்தவின் ஆலோசகர் என்ற நிலையில் இருந்தார்.
இளம் நாடாளுமன்ற உறுப்பினரான துமிந்த சில்வா, ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பின்னர் மகிந்தவின் ஆளும் சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டவர். கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் பாதுகாப்பு விவகாரங்களுடன் தொடர்புடையவராக இருக்கும் இவர், நாமல் ராஜபக்ஷ தலைமை வகிக்கும் ஆளுங்கட்சியின் இளைஞர் பிரிவிலும் செல்வாக்கு மிக்கவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே பிபிசிக்கு கருத்து தெரிவித்த இலங்கை அரசின் மூத்த அமைச்சர்களில் ஒருவரான திஸ்ஸ வித்தாரண, செல்வாக்கு மிக்க அரசியல் பிரமுகர்கள் சம்பந்தப் பட்டுள்ள முல்லேரியா சம்பவம் தொடர்பில் பக்கச் சார்பற்ற விசாரணையை அரசாங்கம் நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்

0 commentaires :

Post a Comment