10/23/2011

ரி.எம்.வி.பி போட்டியிட்டு இருந்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலை என்ன? **மட்டு நரசிம்மன்

கடந்த 8ம் திகதி நடைபெற்று முடிந்த 23 உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலிலே 21 உள்ளுராட்சி மன்றங்களை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கைப்பற்றி அமோக வெற்றியீட்டி உள்ளது.
விசேடமாக கல்முனை மாநகர சபைத்தேர்தலை எடுத்துக்கொண்டால் 68198 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தும் 46580 பேர் மாத்திரமே வாக்களித்திருந்தார்கள். இதிலும் 948 வாக்குகள் செல்லுபடியற்றுப் போனமை குறிப்பிடத்தக்கது. இம்முறை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 22356 வாக்குகளைப்பெற்று 11 ஆசனங்களையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு 9911 வாக்குகளைப் பெற்று 04 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 8524 வாக்குகளைப் பெற்று 03 ஆசனங்களையும் பெற்றிருக்கின்றது.
சுமார் 42000 முஸ்லிம் வாக்காளர்களையும் 26000 தமிழ் வாக்காளர்களையும் கொண்ட ஓர் பிரதேசம் கல்முனை மாநகராகும். இதிலே முஸ்லிம்கள் 11 ஆசனங்களைப் பெற்றிருக்கின்றார்கள். அதன்படி பார்த்தால் த.தே.கூட்டமைப்பினர் குறைந்தது 06 ஆசனங்களைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் இம்முறை அது நடக்கவில்லை காரணம் தமிழ் தேசிய கூட்டமைப்பில் வைத்திருக்கின்ற நம்பிக்கையை இழந்து விட்டார்கள். எந்தவொரு பலமான தமிழ் கட்சியினாலும் போட்டியின்றி போட்டியிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினால் வெறுமனே 04 ஆசனங்களை மாத்திரம்தான் பெற முடிந்திருக்கின்றது. இதனூடாக என்ன புலப்படுகின்றது என்றால் மக்கள் மீண்டும்  மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பசப்பு வார்த்தைகளை நம்பத் தயார் இல்லை என்பது தென்படுகின்றது.
சிலவேளை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி கல்முனை மாநகர சபைத் தேர்தலிலே போட்டியிட்டிருந்தால் அக்கட்சியும் ஆகக் குறைந்தது 2000 வாக்குகளையாவது பெற்றிருந்தால் உண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலை என்னவாகி இருக்கும். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் ஒரு ஆசனத்திற்கு உள்ள வாக்குகள் வித்தியாசம் சுமார் 1388 ஆகும் எனவே முதலமைச்சர் சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி 2000 வாக்குகளைப் பெற்றிருந்தால் அவர்களுக்கு ஆகக் குறைந்தது ஓர் ஆசனம் கிடைத்திருக்க வாய்ப்புக்கள் அதிகம். இவ்வாறாக அவர்களக்கு கிடைத்திருக்க வேண்டிய வாக்குகள் நிச்சயமாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பெற்றிருக்கின்ற வாக்குகளில் இருந்துதான் கிடைத்திருக்கும் ஆகவே தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கான வாக்குகள் குறைவடைந்திருக்கும். ஆசனங்களும் நிச்சயம் 2 தான் கிட்டியிருக்கும்.
இவ்வாறான நிலை ஒன்று ஏற்பட்டிருப்பின் கல்முனை மாநகர சபையின் எதிர் கட்சியாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அமைந்திருக்கும். இல்லாவிடின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினது ஆதரவினை பெற்றாவது எதிர் கட்சியாக இருந்திருக்கும். அப்போது த.தே.கூட்டமைப்பு செல்லாக்காசாக மாறி இருக்கும் எனவே த.தே.கூட்டமைப்பின் ஆசனங்கள் பாதுகாக்கப்பட்டமைக்கு பிரதான காரணம் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி போட்டி இடாமையே ஆகும். கிழக்கு மாகாணத்திலே முதலமைச்சராக இருந்து கொண்டு பல்வேறு அபிவிருத்திகளை செய்து கொண்டிருக்கும் முதலமைச்சர் தலைமையிலான கட்சிக்கு 2000 வாக்குகள் பெறுவது என்பது இயலாத காரியமல்ல. அதே வேளை அம்பாறை மாவட்டத்திலே கல்முனையை அண்டிய நாவிதன்வெளி பிரதேசத்தை சேர்ந்த ஒரு மாகாண சபை உறுப்பினரும் இருக்கின்றார் எனவே நிச்சயம் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஒரு ஆசனம் பெற்றிருக்கும் என்பது யாவரும் அறிந்த உண்மை.இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டிருந்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உண்மை நிலை புரிந்திருக்கும்.
எனவே எது எவ்வாறாயினும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி போட்டியிடாததனால் ஓரளவு தப்பித்து விட்டது தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பதும் மட்டும் யாராலும் மறுக்க முடியாத உண்மை ஆகும் என்பதே வெளிப்படை. கடந்த 2006ம் ஆண்டு கல்முனை மாநகர சபைத் தேர்தலிலே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 10 ஆசனங்களையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு 06 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 02 ஆசனங்களையும் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு 01 ஆசனத்தையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பு:- கடந்த நாடாளுமன்ற தேர்தலிலே விசேடமாக மட்டக்களப்பு மாவட்டத்திலே தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தனித்துப் போட்டியிட்டு 16886 வாக்குகளைப் பெற்றிருந்தது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் சேர்ந்து போட்டியிட்டிருந்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட ஆசனம் குறைந்திருக்கும் அதே போன்று கல்முனை மாநகர சபைத் தேர்தலிலே தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி போட்டியிடாததனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆசனம் பாதுகாக்கப்பட்டிருக்கு.

0 commentaires :

Post a Comment