காலங் காலமாக எமக்கு ஏதோ ஓர் மாயைக் காட்டி எம்மை மீளமுடியாத நிலைக்கு இட்டுச் சென்ற எம் தமிழ் மக்களுக்கான ஏகதலைவர்கள் என மார்தட்டிய தமிழ் பெரும் அரசியல் கட்சிகள் எல்லாம் தற்போது என்ன செய்வதென அறியாது தங்களுக்குள்ளே தாங்கள் அடித்துக்கொள்கின்ற ஓர் சூழல் உருவாகி இருக்கின்றது. என்று தமிழீழ பிரகடணம் கொண்டுவரப்பட்டதோ அன்றிலிருந்து இன்று வரை எமது தமிழ் மக்களுக்கான உன்மையான வழி எது என்பதனை இவர்களுக்கு காட்ட இயலாது போனது வேடிக்கையே!
அன்று முதல் இன்று வரை எம் மக்களுக்கான கொள்கை என்ன என்பதனை தெளிவுபட யாருமே சொல்லவில்லை. ஆனால் அடையமுடியாத இலட்சியங்களாக இருக்கின்ற தமிழீழக் கோரிக்கைக்குப் பின்னால் எம் மக்களை உணர்ச்சிவசப்படுத்தி அவர்களை இழுத்துச்சென்று தமிழ் மக்களுக்காய் எஞ்சி இருப்பவை;களையும் இழக்கச் செய்கின்ற செயலை தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்து வருகின்றது. இதன் பின்னால் மக்கள் இனிமேல் செல்ல மாட்டார்கள். அதுவும் விசேடமாக கிழக்கு மாகாண தமிழ் மக்கள் ஒருபோதும் செல்லக்கூடாது என கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் தெரிவித்தார்.
இன்று (20.10.2011) திருகோணமலை ஸ்ரீ சன்முகா இந்து மகளிர் கல்லூரியில் கல்லூரியின் அதிபர் திருமதி சுலோசனா ஜெயபாலன் தலைமையில் இடம்பெற்ற வருடார்ந்த பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து பேசுகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினரை நான் குற்றம் சாட்டுவதற்கு என்ன காரணம் என்றால் இவ்வளவு காலமும் அதாவது இலங்கையில் என்று தமிழ் மக்களுக்கான அரசியல் கட்சி உதயமானதோ அன்றிலிருந்து இன்றுவரை தாங்கள் தமிழ் மக்களுக்கான அடிநாதம், உயிர்மூச்சு என பேசிக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அவர்களால் எம்மக்களுக்கு எந்தப் பயனும் கிட்டியதில்லை. உண்மையில் மக்களுக்கான உண்மையான ஓர் அரசியல் கட்சி என்றால் அம்மக்களுக்கான தேவைகள், அபிவிருத்தி விடயங்கள், உரிமை மற்றும் அவர்கள் எதிர் கொள்கின்ற பிரச்சினைகள், முகங்கொடுக்கும் சவால்கள் என எல்லாவற்றையும் அறிந்து அதற்கேற்றாப்போல் செயற்பட வேண்டும்.
இன்றுவரை அவர்கள் 11சுற்றுப் பேச்சு அரசுடன் நடாத்தி இருக்கின்றார்கள். ஆனால் அதனால் என்ன பயன் வெறுமனே பத்திரிகைகளில் மாத்திரம் கொட்டெழுத்தில் செய்தி பிரசுரம் ஆகும். சரி இவர்கள் எதுபற்றித்தான் பேசுகின்றார்கள் என்றாவது இவர்கள் தெரிவிக்கின்றார்களா? அதுவும் இல்லை. இப்படித்தான் அவர்கள் எம்மை காலங்காலமாக ஏமாற்றி தமிழீழம், விடுதலை, உரிமை என்கின்ற வார்த்தை பிரையோகங்களை முன்நிறுத்தி எம்மை உணர்ச்சிவசப்படுத்தி போர்க்களம் அனுப்பி அங்கே கொலைக்களம் கண்டவர்கள்.
இவர்களோ அல்லது இவர்களது பிள்ளைகளோ அல்லது நெருங்கிய அதாவது அவர்களது சகோதரர்களோ போராட்டத்திற்கு நேரடி பங்களிப்பு செய்யவும் இல்லை. அதன் வலியை உணர்ந்ததும் இல்லை. இப்படி எம் இளைஞர் யுவதிகளின் குருதியில் குளிர்காய நினைத்து இன்றும் காய்ந்து கொண்டிருக்கின்றார்கள். இதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்க முடியாது. அவர்களால் அபிவிருத்திதான் செய்ய இயலாது, செய்கின்ற எங்களையாவது விட்டுவிடலாம் அல்லவா? இன்று கிழக்கு மாகாணத்தை பாருங்கள் என்ன குறை இருக்கின்றது. அனைத்து துறைகளும் அபிவிருத்தி கண்டுவருகின்றது. நெடுஞ்சாலைகள், மீன்பிடி, விவசாயம், கல்வி, சுகாதாரம், உல்லாசம், சுயதொழில், வாழ்வாதாரம் என அனைத்தும் எமது மாகாணத்தில் வளர்ச்சியடைந்து வருகின்றது. இவ்வாறான அபிவிருத்திகளை ஏன் இவர்களால் இவ்வளவு காலமும் செய்ய இயலாது போனது என நான் இவர்களிடம் கேட்கின்றேன். நான் தொடர்ந்தும் கிழக்கு மக்களுக்காய் உழைப்பேன் எனது கட்சியும் அதன்படியே செயற்படும் எனவும் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் திருகோணமலை நகரசபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் கௌரி முகுந்தன், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் என்.ஏ.பத்மகுமார, வலயக் கல்விப் பணிப்பாளர் கி.முருகுபிள்ளை மற்றும் பழைய மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள்.
0 commentaires :
Post a Comment