10/21/2011

லிபிய தலைவர் கடாபி சுட்டுக் கொலை

லிபியாவில் 42 ஆண்டு காலம் ஆட்சிபுரிந்த கேணல் முஅம்மர் கடாபி நேற்று புரட்சிப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.
கடாபி தன்னுடைய நெருக்கமான நண்பர்களுடன் நூற்றுக்கும் மேற்பட்ட கார்களில் தனது பிறந்த சொந்த ஊரான செற் நகரிலிருந்து தப்பியோட எத்தனித்த போது அந்த வாகனத் தொடரணி மீது மேற்கொள்ளப்பட்ட கடும் தாக்குதலில் அவர் படுகாயமடைந்ததாக செய்திகள் வெளிவந்துள்ள போதிலும், இப்போது அவர் மரணமடைந்திருப்பது ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது.

லிபியாவின் முன்னாள் தலைவர் கடாபி மனித குலத்திற்கு எதிராக மேற் கொண்ட குற்றச் செயல்கள் சம்பந்தமாக கைதுசெய்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் முன்னர் அறிவித்திருந்தது.
நேற்று நடந்த தாக்குதலின் போது கடாபியின் இரண்டு கால்களும் படுகாய மடைந்திருப்பதாக லிபியாவின் தேசிய இடைக்கால ஆட்சி மன்றத்தின் சிரேஷ்ட அதிகாரியான அப்டெல் மஜீத் ரொய்ட்டர் செய்தி ஸ்தாபனத்திற்கு அறிவித்தார்.
காயமடைந்த கடாபி ஒரு அம்பியூலன்ஸில் இனந்தெரியாத ஓரிடத்தில் வேகமாக எடுத்துச் செல்லப்பட்டதாக முன்னர் வந்த செய்திகள் கூறுகின்றன. கடாபியின் ஆட்சி முடிவுபெற்றதையடுத்து, லிபியாவின் புரட்சிப் படைகள் கடாபியின் தேசியக் கொடியை இறக்கிவிட்டு, தங்களின் புதிய தேசியக் கொடியை நாட்டின் பல நகரங் களில் பறக்கவிட்டுள்ளன.
வெளிநாடுகளிலுள்ள லிபியத் தூதரங்களிலும் பழைய லிபிய தேசியக் கொடிக்குப் பதிலாக புரட்சிப் படையினர் அறிமுகஞ் செய்துள்ள புதிய தேசியக்கொடி கம்பீரமாக பறக்க விடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
கடாபி படுகாயமடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் இன்னமும் இயந்திரங்களின் உதவியின்றி சுவாசித்துக் கொண்டிருப்பதாகவும் முன்னர் வந்த செய்திகள் தெரிவித்தன.
படுகாயமடைந்த கடாபி உயிர் துறந் துள்ளார் அல்லது கைதுசெய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி கிடைத்தவுடன் லிபியத் தலைநகரான திரிப்போலி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பல்கள் மற்றும் வீதிகளிலுள்ள வாகனங்கள்
ஹோன் ஒலியை எழுப்பி மகிழ்ச்சி ஆரவாரம் செய்ததாகவும், ஆயுதம் தாங்கிய விடுதலைப் படை வீரர்கள் ஆகாயத்தில் துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்ததாக பி. பி. சி. நிருபர் திரிப்போலியிலிருந்து அறிவித்ததாக இப்போது வந்துள்ள செய்திகள் கூறுகின்றன.
இதேவேளையில் லிபிய தொலைக்காட்சிச் சேவையில் கடாபி மரணம் அடைந்தார் என்ற செய்தி ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது.
லிபிய புரட்சிப் படையின் யுத்தகால தளபதியான ஜமால் அபூசாலா அல்ஜெkரா தொலைக்காட்சி சேவைக்கு அளித்த பேட்டியில் பதவியிலிருந்து இறக்கப்பட்டு ள்ள லிபியத் தலைவர் கைது செய்யப்பட்டிருக்கிற செய்தியை ஊர்ஜிதம் செய்த போதிலும் அவர் உயிரோடு இருக்கிறாரா என்ற செய்தியை தற்போது தனக்கு கூறமுடியாதிருக்கிறது என்று கூறினார்.
இதேவேளையில் கடாபியின் ஆயுதப் படைகளின் தலைவர் அபூபக்கர் யூனூஸ் பக்றி கடாபியை கைது செய்வதற்கு எடுத்த துப்பாக்கிச் சண்டையின் போது கொல்லப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது. திரிப்போலியை புரட்சிப் படையினர் கைப்பற்றிய தினம் முதல் அவர்களில் எவரும் கடாபியை காணவில்லை என்பதும் ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

0 commentaires :

Post a Comment