10/07/2011

கட்சிகளின் பலத்தை மீண்டும் பரீட்சிக்க நாளை வாக்கெடுப்பு

நாட்டிலுள்ள 23 உள்ளூராட்சி சபைகளுக்கான வாக்களிப்பு நாளை 8 ஆம் திகதி காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெற இருக்கிறது. இந்த உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை நீதியாகவும் அமைதியாகவும் நடத்துவதற்கு தேவையான சகல ஏற்பாடுகளையும் தேர்தல் செயலகம் மேற்கொண்டிருக்கிறது.
இந்த 23 உள்ளூராட்சி சபைகளில் 17 மாநகர சபைகளும், 5 பிரதேச சபைகளும் ஒரு நகரசபையும் அடங்கியுள்ளன. கொழும்பு, தெஹிவளை - கல்கிஸ்ஸ, சிறி ஜெயவர்தனபுர கோட்டை, மொரட்டுவை, நீர்கொழும்பு, கம்பஹா, கண்டி, மாத்தளை, நுவரெலியா, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கல்முனை, அனுராதபுரம், பதுளை, இரத்தினபுரி, குருநாகல் ஆகிய 17 மாநகர சபைக்கும், கொலன்னாவ நகர சபைக்கும், கொட்டிகாவத்தை - முல்லேரியா, குண்டசாலை, கங்கவட்ட கோரளை, ஹம்பாந்தோட்டை, சூரியவெவ ஆகிய 5 பிரதேச சபைக்கும் தேர்தல் நடைபெறுகின்றது.
2010 ஆம் ஆண்டின் வாக்காளர் இடாப்பு படி நடைபெற இருக்கும் இத்தேர்தலில் 1,589,622 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
இந்த 23 உள்ளூராட்சி சபைகளுக்கும் 420 பேர் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படவுள்ளனர். என்றா லும் 26 அரசியல் கட்சிகளும் 104 சுயேச்சைக் குழுக்களும் சார்பாக 5,488 பேர் அபேட்சகர்களாக போட்டியிடுகின்றனர்.
நாட்டில் 335 உள்ளூராட்சி சபைகள் உள்ளன. இவற்றில் கடந்த மார்ச் மாதம் முதற்கட்டமாக 245 உள்ளூராட்சி சபை களுக்கும் இரண்டாம் கட்டமாக 65 உள்ளூ ராட்சி சபைகளுக்கும் தேர்தல் நடத்தப் பட்டன.
உலகக் கிண்ணப் கிரிக்கட் போட்டி நடைபெற்றதால் ஒத்திவைக்கப்பட்ட 23 உள்ளூராட்சி சபைகளுக்காக நாளை வாக்களிப்பு நடைபெற இருக்கிறது.
இந்த 23 உள்ளூராட்சி சபைகளுக்கும் வாக்களிப்பு முடிவுற்றதும் இரண்டு உள்ளூராட்சி சபைகள் மாத்திரமே தேர்தல் நடத்துவதற்கு எஞ்சியிருக்குமென்று தேர்தல் செயலக அதிகாரியொருவர் கூறினார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துரைப்பற்று ஆகிய இரு உள்ளூராட்சி சபை பிரதேசங்களிலும் கண்ணிவெடி அகற்றும் பணிகள் பூர்த்தியடையாததாலே தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

0 commentaires :

Post a Comment