10/06/2011

நியாயமான தீர்வை முன்வைப்பதன் மூலமே பேரினவாத கடும்போக்காளர்களைக் கட்டுப்படுத்த முடியும்-புளொட் தலைவர் சித்தார்த்தன்

 ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமிழ்மக்களின் பிரச்சினைக்கு நியாயமான அரசியல்தீர்வை முன்வைப்பதன்மூலமே பேரினவாத கடும் போக்காளர்களை கட்டுப்படுத்த முடியும் என்று புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். தமிழர் பிரச்சினைத் தீர்வு தொடர்பாக அரசாங்கம் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனேயே பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டுமென்றும் அவர் கூறியுள்ளார். தமிழ்மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்காக ஜனாதிபதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றார். இவ்வாறானதோர் தருணத்தில் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடைசெய்ய வேண்டுமென்று தெரிவித்துள்ளது. இன்னொரு அமைச்சர் பயங்கரவாதத்திற்கு துணை போனவர்களுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை வேண்டுமென தெரிவித்துள்ளார். இவ்வாறான கருத்துக்கள் சுமூகமான தீர்வை காண்பதற்கு முட்டுக்கட்டையாக அமையும். பெரும்பான்மையான சிங்களமக்கள் மத்தியில் இனவாதம் கிடையாது. இவ்வாறான கருத்துக்களால் இனவாதம் ஊக்குவிக்கப்படும். பழைய பிரச்சினைகளை மீண்டும், மீண்டும் கிளறிக் கொண்டிருப்பதால் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப்போவதில்லை. இவ்வாறான நடவடிக்கைகள் இருதரப்பு கடும் போக்காளர்களுக்கு சாதகமாக அமையும். யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதுதான் யதார்த்தம். அத்தோடு இவ்வாறான கருத்துக்கள் தமிழ்மக்கள் மத்தியிலும் சர்வதேசத்திலும் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தும். எனவே ஜனாதிபதி தமிழ்மக்களுக்கான அரசியல்தீர்வை முன்வைக்க வேண்டும். இதன்மூலமே கடும் போக்காளர்களை கட்டுப்படுத்த முடியும். தமிழ்மக்களுக்கு தீர்வை வழங்க முடியும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 commentaires :

Post a Comment