10/05/2011

கிழக்கை அச்சமற்ற சூழலாக மாற்றிய அரசை ஆதரிக்க வேண்டும்

கல்முனை வாக்காளர்களிடம் அமைச்சர் சுசில்

நடைபெறப்போகும் கல்முனை மாநகர சபைத் தேர்தலில் வெற்றிலை சின்னத்தில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான சுசில் பிரேம ஜயந்த வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எதிர்வரும் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலானது பிரதேசத்தின் அபிவிருத்திகளையும், மக்களின் எதிர்பார்ப்புக்களையும் பெற்றுத்தரும் தேர்தலாக கல்முனை மாநகர மக்கள் கருதவேண்டும்.
கடந்த 30 வருட பயங்கரவாத செயற்பாடுகளால் அழிந்து போன கிழக்கு மாகாணம் இன்று பாரிய அபிவிருத்திகளை கிழக்கின் உதயம் மூலம் அடைந்து வருகின்றது. அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் மஹிந்த சிந்தனை இன்று நாட்டில் பாரிய அபிவிருத்திகளை கொண்டு வந்துள்ளது.
இதன் மூலம் கிழக்கு மாகாண மக்கள் பல்துறைகளில் அபிவிருத்தி கண்டு வருகின்றனர். அதனது பங்காளிகளாக கல்முனை மாநகர மக்களும் உள்வாங்கப்பட வேண்டும் என்பது எமது ஆசையாகும். இன்று நாட்டில் வாழும் மக்கள் அச்சமற்ற சூழலில் வாழ்வதற்கான வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுத்தது இந்த அரசாங்கமே. தாம் பெற்றுள்ள சமாதானத்தைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதற்கு ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டும்.
அதன் மூலம்தான் எமது பிரதேசம் அபிவிருத்தியை அடையும் என்பது கண்கூடு. மாறாக எமது வெற்றிலை சின்னத்திற்கு எதிராக போட்டியிடும் அணிகளினால் அபிவிருத்திக்கு எவ்வித பங்களிப்பினையும் செய்ய முடியாது. இவர்கள் எம்மால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களுக்கு எதிராகவே செயற்படுபவர்கள் என்பதை கல்முனை வாக்காள பெருமக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
நாட்டில் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் அதிகப் படியான சபைகளின் அதிகாரங்களை எமது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே பெற்றுள்ளது.
இதன் மூலம் மாநகர, நகர, பிரதேச சபை எல்லைகளுக்குள் வாழும் மக்கள் நன்மையடைந்துள்ளதுடன் உட்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருவதை நினைவுபடுத்த விரும்புகின்றேன்.
கல்முனை மாநகர சபை ஏனைய சபைகளை போன்று பாரிய அபிவிருத்திகளை காண வேண்டுமெனில் எமது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலை சின்னத்தில் போட்டியிடும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் உட்பட வெற்றிலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்து கல்முனை மாநகர சபையின் அதிகாரத்தை எமது ஆட்சியின் கீழ் தருவீர்களெனில் குறுகிய காலத்தில் பாரிய அபிவிருத்திகளை கல்முனை மாநகரம் பெறும் என்றும் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம ஜயந்த தெரிவித்ததுடன், போலிப் பிரசாரங்களை மக்கள் நம்ப வேண்டாம் எனவும் கல்முனை மக்களை கேட்டுள்ளார்.

0 commentaires :

Post a Comment