கருணாவோ அல்லது பிள்ளையானோ புதலில் புலிகளுக்கு எதிராக செயற்பட்டவர்கள் அல்ல. தமிழ் இயக்கங்களின் தோற்றத்திலிருந்து இன்றுவரை பலர் அல்லது பல இயக்கங்கள் புலிகளுக்கு எதிராக செயற்பட்டனர்.
பல தமிழ் இயக்கங்கள் தோற்றம்பெற்றபோதிலும் அவை நிலைத்து புலிகள் இயக்கத்தைப்போல் வலுப்பெற முடியாமைக்கு பல காரணங்கள் இருக்கின்ற போதிலும் தமிழ் இயக்கங்களிடையே இருந்த போட்டியும் முக்கிய காரணமாகும். மாற்றுக் கருத்துடையோரை "மண்டையில் போடும் "கலாசாரத்திலே மாற்றுக் கருத்துள்ள பல தமிழ் தலைவர்களின் உயிர்கள் பறிக்கப்பட்டிருக்கின்றன.
இருந்தபோதும் அன்று தொட்டு இன்றுவரை பல தமிழ் தலைமைகள் புலிகளுக்கு எதிராக குரல் கொடுத்து வந்திருக்கின்றனர். அவர்கள் அனைவரும் வடக்கைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
புலிகள் இயக்கத்தை உலகமே வியக்கும்படி உலகையே புலிகள் பக்கம் திரும்பிப் பார்க வைத்த வீரச் சமர்கள் பல புரிந்து பல வெற்றிகளை பெற்றுத்தந்த பெருமை கிழக்கு மாகாண போராளிகளையே சாரும். வெற்றிச் சமர்களில் சரித்திரம் படைத்த கிழக்குப் போராளிகளை வழிநடாத்தியவர் கருணா அம்மான்.
வெற்றிச் சமர்கள் பல புரிந்து புலிகளை எவராலும் அசைக்க முடியாது எனும் நிலைக்கு கொண்டு சென்ற கிழக்கு போராளிகளும் அவர்களை வழிநடாத்திய கருணாவும் புலிகள் இயக்கத்தை விட்டு வெளியேறியதன் காரணமாகத்தான் இன்று புலிகள் அழித்தொழிக்கப்பட்டனர் என்பது உண்மைதான்.
புலிகள் அமைப்பிலே கிழக்குப் போராளிகள் வெற்றிச் சமர்கள் பல புரிந்து சரித்திர வெற்றிகள் பலவற்றைக் கண்டவர்கள். விடுதலைப்புலிகளின் படைப்பிரிவுகளிலே அசைக்க முடியாத படைபலத்தின் தூண்களாக களமாடியவர்கள் கிழக்கு மாகாணப் போராளிகள். புலிகள் இயக்கத்தின் படைப்பிரிவுகளின் அசைக்க முடியாத தூண்களான கிழக்குப் போராளிகளை புலிகள் இயக்கம் இழந்தமை புலிகளின் அழிவுக்கு காரணமாகிவிட்டது.
புலிகள் இயக்கம் உலகமே வியக்கும் அளவுக்கு ஒரு விடுதலை இராணுவமாக கட்டி எழுப்பப்பட்டிருந்தாலும். புலிகளின் உயர் தலைமைப்பீடங்கள் அவ்வப்போது பல வரலாற்றுத் தவறுகளை செய்திருப்பதுடன். சில விடயங்களுக்கு தீர்வு காண்கின்ற வேளைகளிலே தமது இயக்கத்தின் எதிர்காலம் பற்றி சிந்தித்து முடிவெடுக்க தவறிவிட்டனர்.
அதன் ஒரு அங்கம்தான் கிழக்கு போராளிகள் புலிகள் இயக்கத்தைவிட்டு பிரிந்து சென்றமை. அன்று கருணாவால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் உண்மையானவை. காலங்காலமாக கிழக்கு மக்கள் தமிழ் தலைமைகளால் ஏமாற்றப்பட்டு வந்தமை மறுக்க முடியாத உண்மை. கருணா பிரிந்து வருவதற்கு முன்னர் கிழக்கு மக்கள் ஏமாற்றப்பட்டு வருவதை பலரும் உணர்திருந்தபோதும் அவற்றை வெளிப்படுத்தத் தயங்கினர்.
மாற்றுக் கருத்துள்ள பலர் அழித்தொழிக்கப்பட்ட வரலாறுகள் அவர்களின் உணர்வுகளை சிறைப்படுத்தியிருந்தன. எது எப்படி இருப்பினும் கிழக்கு மக்கள் கிழக்கின் உரிமைகள், கிழக்கு மக்கள் ஏமாற்றப்படுகின்ற துரோகங்களை சுட்டிக்காட்டிய போதெல்லாம் மட்டக்களப்பான் பிரதேசவாதம் பேசுகின்றான் என்றும் துரோகி என்றும் பட்டம் சூட்டிய வரலாறுகள் பலவுண்டு.
கிழக்குப் போராளிகள் பிரிந்து வந்தபோது கிழக்குக்கான சுயநிரணயமும் ,கிழக்குக்கான தலைமைத்துவத்தின் தேவையும், கிழக்கு மாகாணத்துக்கு தனித்துவமான கட்சியின் அவசியமும் உணரப்பட்டது. அதன் வெளிப்பாடுதான் தமிழ் மக்கள் விடுதபை் புலிகள் கட்சியும் கிழக்கு மாகாணசபை உருவாக்கமும், கிழக்கின் துரித அபிவிருத்தியும்.
அன்று கிழக்குப் போராளிகள் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து வந்தபோது புலிகளின் தலைமைப்பீடம் சரியான தீர்க்க தரிசனமான முடிவுகளை எடுக்கவில்லை. கருணாவால் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராய்ந்து தீர்வுகளை காண முற்பட்டிருக்க வேண்டும். அதை விடுத்து கருணாவை பிடிப்பதிலும் தண்டனை வழங்குவதிலுமே அதிக கவனம் செலுத்தினர். அன்று அவர்கள் கனவிலும்கூட நினைத்துப் பார்க்கவில்லை கிழக்குப் போராளிகள் இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது என்பதனை.
கிழக்குப் போராளிகள் கருணாவினாலேயே வழி நடத்தப்பட்டனர். அவர்கள் கருணாவின் கட்டளைகளின் பெயரிலே செயற்பட்டு வந்தவர்கள். கருணா கிழக்குப் போராளிகள் புலிகளிலிருந்து பிரிந்து செல்ல வேண்டும் என்றதும் கருணாவின் பின்னால் வந்துவிட்டனர். அவர்கள் அப்போது உண்மைகளை, நிஜங்களை உணர்ந்து கொண்டனர்.
கிழக்குப் போராளிகள் பிரிந்து வரும் கால கட்டத்தில்தான் வீட்டுக்கொரு போராளி எனும் திட்டத்தின் மூலம் கிழக்கு மக்கள் புலிகளுக்கு எதிராக குரல்கொடுக்க ஆரம்பித்தனர். அந்தக்கால கட்டத்தில்தான் கிழக்கு மக்கள் தாம் ஏதோ ஒரு வகையில் ஏமாற்றப்பட்டு வருகின்றோம் என்பதனை உணர்ந்துகொள்ள ஆரம்பித்தனர்.
கிழக்குப் போராளிகளின் பிரிவிற்கான காரணத்தையும் அதற்கான தீர்வுகள் பற்றியும் புலிகளின் தலைமைப்பீடம் ஆராய்ந்திருக்க வேண்டும். அன்று அவர்கள் எடுத்த திடிர் முடிவுகளின் பிரதிபலிப்பு துரித கதியில் தாங்களே அழிய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
கிழக்குப் போராளிகள் பிரிந்து வந்தபோது கிழக்குப் போராளிகளின் பிரிவைத் தடுப்பதனை விடுத்து சகோதரப் படுகொலைகளை நோக்கி புலிகள் இயக்கம் சென்றது. அதன் ஒரு கட்டமாக வெருகலில் பல நூற்றுக்கணக்கான அப்பாவி கிழக்குப் போராளிகள் கொன்று குவிக்கப்பட்ட வெருகல் படுகொலை கிழக்கு மக்களின் சரித்திரத்தில் மாறாத வடுக்கள். இவ் வெருகல் படுகொலையில் பல பெண் போராளிகள் நிராயுதபாணியாக சொல்லமுடியாத சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டனர். பல களமாடி வெற்றிச் சமர்களை பெற்று வீர சரித்திரங்களை படைத்தமைக்காக விடுதலைப்புலிகள் கொடுக்கும் கைமாறு இதுதானா? விடுதலைப் புலிகளின் சகோதரப் படுகொலைகள் கிழக்குப் போராளிகள் என்று மட்டுமல்லாமல் கிழக்கு புத்திஜீவிகள் நோக்கியும் புலிகளின் துப்பாக்கிகள் திரும்பின. பல புத்திஜீவிகள் புலிகளின் துப்பாக்கி தோட்டாக்களுக்கு இரையாகினர்.
கிழக்குப் போராளிகளும், கிழக்குப் புத்திஜீவிகளும் படுகொலை செய்யப்படும்போது புலிகளின் அரசியல் சக்தியாக விழங்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும், வெளிநாடுகளிலே இருந்து தமிழன், தமிழீழம் என்றெல்லாம் வீர வசனம்பேசி வீராப்பு காட்டிக் கொண்டிருப்பவர்களும் மெளனம் சாதித்தமை வேதனைக்குரிய விடயமே. இவர்கள் மெளனம் சாதித்தது சாவது கிழக்கு தமிழன்தானே என்பதனாலா?
அப்போதைய கால கட்டத்தில் கிழக்கிலே அரசியல் நீரோட்டத்தின் மூலமே கிழக்கு மக்கள் தமது தலைவிதியை தாமே தீர்மானிக்க முடியும், கிழக்கில் ஒரு அரசியல் சக்தி உருவாக்கப்படுவதன் மூலமே கிழக்கு மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கவும், கிழக்கின் சுயநிர்ணயத்துக்கான ஒரு அரசியல் சக்தியின் தேவைப்பாடு உணரப்பட்டது.
அதன் பிரதிபலிப்பாக தற்போது கிழக்கு மாகாண சபையையும், மட்டக்களப்பின் பல உள்ளுராட்சி சபைகளையும் ஆட்சி செய்தகொண்டிருக்கின்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பல சவால்களுக்கும், பெறுமதிமிக்க உயிர்பலிகளுக்கு மத்தியிலும் தோற்றம் பெற்றது.
கிழக்கிலே ஒரு கட்சி தோற்றம் பெறுவதனையும் கிழக்கிலே ஒரு தலைமைத்துவம் தோற்றம் பெறுவதனையும் சகித்துக் கொள்ள முடியாத தீய சக்திகள் பல சதித் திட்டங்களை அவ்வப்போது மேற்கொண்டனர். அவ்வாறான சதித்திட்டங்களிலே கிழக்கு மக்களால் எதிர்பார்க்கப்படாத துயரம் நிறைந்த ஒரு நிகழ்வு இடம் பெறுகின்றது.
தொடரும்....
0 commentaires :
Post a Comment