9/24/2011

தர்க்கா தகர்ப்பும் தர்க்கங்களும் -அனுராதபுர அட்டகாசம் ( பகுதி ஒன்று எஸ்.எம்.எம்.பஷீர் )

 
 அனுராதபுரத்தில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய பிரதேசமாக பிரகடனப்படுத்திய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் உள்ளதாக குறிப்பிடப்படும் முஸ்லிம் மக்களின் சமயத்துடனும் கலாச்சாரத்துடனும் அடையாளம் காணப்படும் சியாரம் ஒன்றினை சிங்கள பெளத்த பிக்குகள் சிலரும் சிங்கள பெளத்த இளைஞர்கள் சிலரும் சேர்ந்து தரைமட்டமாக்கியிருக்கிரார்கள். அதுவும் இலங்கையின் காவற்துறையினர் கைகட்டி பார்த்து நிற்க இந்த மனித உரிமை மீறல், சட்ட விரோத சம்பவம் நடைபெற்றிருக்கிறது. இதனால் அப்பிரதேச முஸ்லிம் மக்கள் ஆத்திர முற்றிருக்கிரார்கள் அதனை தடுக்கச் சென்று காவல் துறையினரால் தடுக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை தடுக்க சட்டத்தை கையிலெடுத்த காவல் துறையினர் கட்டடத்தை -சியாரத்தை – உடைக்க சட்டத்தை தமது கையிலெடுத்தவர்களை சட்டத்தை மீறி நடக்க அனுமதி அளித்திருக்கிறார்கள்.
அச் சியாரத்தை உடைத்த பிக்குகளில் தலைமை தாங்கியவர் அந்த சியாரம் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு பெளத்தர்களுக்கு வழங்கப்பட்ட காணியில் கட்டப்பட்டிருந்ததென்றும் இன்னுமொருவர் அது துட்டகெமுனுவின் அஸ்தி இடப்பட்ட பிரதேசத்தில் கட்டப்பட்டிருந்த தென்றும் அச் சியாரத்தை முஸ்லிம்கள் ஒரு பள்ளிவாசலாக மாற்ற திட்டமிடுகிறார்கள் என்றும் இடிப்புக்கு காரணம் கூறினார். வழக்கம் போலவே ஊடகங்கள் இச் செய்தியின் பின்னணிச் செய்திகளில் தமது அரசியலையும் கருத்தியலையும் நாசூக்காக கையாண்டு கொண்டனர்.
இதையெல்லாம் இங்கு நோக்கும் போது உலகின் பெரும் புராதன கட்டடக் கலையை கண்டு கொள்ளும் நகராக மட்டுமல்ல சகல மதத்தினரும் மக்களும் அமைதியாகவும் வாழ்ந்த ஒரு பாரம்பரிய நகரில் இனவாத குழுவினரும் பெளத்த மதவாதிகளும் பிறிதொரு மதத்தினை பின்பற்றும் மக்களுடன் தொடர்புபடுத்தப்படும் ஒரு நிறுமானத்தை நிர்மூலமாக்குவதற்கு உண்மையான காரணம் என்ன என்ற கேள்வியும் எதிர்காலத்தில் வேறு என்னென்ன எங்கெங்கு நடக்கும் என்ற அச்சமும் நிலவுவதாக சில அரசியல் நோக்கர்கள் தமது கருத்தை விதைப்பதையும் காணக் கூடியதாகவுள்ளது.
இலங்கையின் பிரபல ஆங்கில பத்திரிகைகளில் ஒன்றான சண்டே லீடர் எனும் பத்திரிகை இந்த புண்ணியதலம் (சமாதி கட்டடம் ) தனி மனிதர் ஒருவரால் கட்டப்பட்டதென்றும் எந்த முஸ்லிம் பள்ளிவாசல்களின் ஆதரவு அந்த சமாதி கட்டடத்துக்கு இல்லை என்றும் பல முஸ்லிம் தலைவர்கள் அந்த சமாதி கட்டுமானத்துக்கு எதிர்ப்பு காட்டினார்கள் என்றும் சுற்றுப்புறசூழலாளர்கள் கூறியதாக செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால் அந்த செய்தியே முன்வந்த செய்திகளை குட்படுத்தியது.
(The shrine was built on land close to where the ashes of King Dutugemunu are believed to have been buried hundreds of years ago. The shrine was constructed on a UNESCO world heritage site. Environmentalists said that the shrine was built by an individual and did not have the backing of any Muslim mosque. Monks who were angry over the construction had razed it to the ground last week. Environmentalists say several Muslim leaders had also opposed the construction of the shrine adding that over 100 monks were involved in demolishing the Muslim shrine which took place last week.)
கரும்பு தின்ன கைகூலியா என்ற நிலையில் முஸ்லிம் அரசியல் வாதிகள் சுமார் இருவாரம் மெளனம் காத்தனர் ஆனால் தேர்தல் வேறு வந்து தொலைத்துவிட்டது. மேடையில் பேசித் தொலைக்க வேண்டும் இல்லாவிட்டால் மக்களிடம் எப்படி முகம் கொடுப்பது. சரி போகட்டும் வீர வசனங்களை வீசி இறைத்து விட்டால் என்ன சனங்கள் ஞாபகத்தில் வைத்திருக்கவா போகிறார்கள். என இப்போது சளைக்காமல் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். இது பற்றிய செய்திகள் பலவிதமாக வெளிவரத் தொடங்கின ; ஒரு செய்தி அறுபது பேர் அடங்கிய குழுவொன்றும் இன்னுமொன்று நூறு பேர் என்றும் இன்னுமொன்று சுமார் நானூறு பேர் என்றும் அந்த சியாரம் நூறு ஆண்டு பழமையானது என்றும் நானூறு வருடம் பழமையானது (பீ.பீ.சி) என்றும் யாரோ ஒருவர் எல்லாளனுக்கும் -துட்டகெமுனுவுக்கும் முன்பிருந்தது போல் மிகப் பழமையானது என்று வேறு குழம்பி போய் குழப்பினர்.
நீதி நிலவிய மண்ணில் அநீதி !
நீதிமிகு ஆட்சி பற்றி மகாவம்சத்தில் விதந்துரைக்கப்பட்டிருப்பதுடன் அவனது ஆட்சிக் காலத்தில் அவன் எவ்வாறு நடந்து கொண்டான் என்பது பற்றிய பல உப கதைகளில் ஒரு சம்பவமாக எல்லாளன் தனது தேரில் ஒருதடவை பெளத்த தாது கோபுர கட்டடம் ஒன்றின் அருகில் சென்ற போது தேர் அச்சத்திரத்தின் மீது மோதி கட்டடத்தின் ஒரு பகுதி சேதமடைந்தது கண்டு அத்தேரிலிருந்து குதித்த எல்லாளன் அவ்விபத்துக்கு காரணமான தனது பாகனை கொல்வதற்கு தனது அமைச்சர்களுக்கு பணிக்க அவனின் அமைச்சர்கள் அவ்வாறு கொன்றால் புத்தர் அவ்வாறான செயலை அனுமதிக்க மாட்டார் என்று கூறி அவனை தடுத்தனர். ஆனால் சமாதான மடையாத எல்லாளன் அமைச்சர்களிடம் அச்செயலுக்கு என்ன பரிகாரம் செய்யலாம் என்று கேட்ட போது அமைச்சர்கள் சேதமடைந்த கட்டடத்தை திருத்தி அமைத்தால் அதுவே போதுமானது என்று கூற அதனையே அவன் செய்ததாக சொல்லப்பட்டுள்ளது.
மறு பக்கத்தில் எல்லாளனை தோற்கடித்த துட்டகைமுனு அனுராதபுர நகர மக்களை அழைத்து எல்லாளனின் மரணச்சடங்கை நடத்தியதுடன் எல்லாளனின் சமாதியை தாண்டி செல்வோர் தமது பாதணிகளை கழற்றி விட்டும் தமது தொப்பிகளை, தலையனிகளை நீக்கி விட்டும் செல்லவேண்டும் எனவும் அரச கட்டளையிட்டான் என்ற சம்பவமும் அதன் பின்னர் அவன் போரில் நடந்த கொடுமைகளை நினைத்து துயருற்றான் என்ற சம்பவமும் அதனை ஞான திருஷ்டியால் உணர்ந்த பியங்கு தீவத்தில் ( பியங்கு தீவம் என்பது புங்குடுதீவு என்பது பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் ஆய்வு முடிவு) வாழ்ந்த தேரர்கள் அவனை சமாதானப் படுத்தியதாக கூறும் கதைகள் உண்மைச் சம்பவங்களா அல்லது புனை கதைகளா என்பவற்றுக்கு அப்பால் இலங்கையின் வரலாற்று நூலாக பெளத்த மக்களால் மதிக்கப்படும் மகாவம்ச பெளத்த திராவிட நாகரீக பாரம்பரியம் பெற்ற பூமியினை எதிரியினையும் போற்றும் நீதி நெறி நிலவிய ஆட்சி முறைகளையும் இந்த சம்பவங்கள் சுட்டிக் காட்டுகின்றன.
அசோகன் இந்தியாவை ஆண்ட காலத்தில் கலிங்க யுத்தத்தின் பின் பெளத்தனாக மாறி ஆட்சி செய்த காலகட்டத்தில்தான் தேவநம்பிய தீசன் இலங்கையில் அனுராபுரத்தில் ஆட்சி செய்ததுடன் சங்கமித்தை மூலம் வெள்ளரசுமரம் கொண்டுவரப்பட்டதும் வரலாறாக கூறப்படுகிறது. அந்த பெளத்தர்களின் அந்நிய ஆக்கிரமிப்புக்கு எதிரான இலங்கை இராச்சியத்தை ஓர் ஆட்சியின் கீழ் கொண்டு வந்த பெளத்த மதத்தை பராமரித்த துட்டகைமுனு இறந்ததும் அவனது உடல் பெளத்த மடாலயத்தின் எல்லைக் கப்பாலுள்ள மடாலயத்தின் கொல்லைப்புறத்தில் எரியூட்டப் பட்டது என்று அந்த இடத்தின் பெயரை ராஜமலகா என்று மகாவம்சம் கூறுகிறது. அவனது அஸ்தியும் அங்குதான் புதையுண்டது என்பது வரலாறு.
சியாரம் இபள்ளிவாசல் (மசூதி) தர்கா. படம்: காலி கடற்கரையில் இராணுவ பாதுகாப்பு நிலைக்கு அருகில் அமைந்துள்ள சியாரம் 

தர்க்கா என்பது முஸ்லிம் மகான்கள் அடக்கப்பட்ட இடம் என்று தமிழ் அகராதி பொருள் கூறும் ஆனால் தர்கா என்ற சொல் பார்சி மொழியில் போற்றப்படும் சூபி ( ஞானி ) அடக்கம் செய்யப்பட்ட இடம் என்றும் அதனை சுற்றி கட்டப்பட்ட புண்ணிய இடம் என்று சொல்லப்படும் . எனவே இஸ்லாத்தில் பாரசீக செல்வாகிநூடாக -சூபி எனும் ஞான வலி மத வழிகாட்டலூடாக ஏற்பட்ட தர்கா நிர்மாணமும் அதனையொட்டிய நம்பிக்கைகளும் இலகையிலும் பல தென்னாசிய நாடுகளிலும் உள்ளதால் அங்கெல்லாம் தர்காவும் அதனை அடியொற்றிய மதச் செயற்பாடுகளும் கிரமமாக அவ்வாறான நம்பிக்கைகள் அல்லது பாரம்பரிய ஒட்டுதல்களுடன் தங்களை அடையாள படுத்தும் சிறியளவிலான முஸ்லிம் மக்களால் நடத்தப் பட்டுவருகின்றன. குறிப்பாக வருடந்தோறும் அவ்வாறான தர்காக்களில் அடக்கம் செய்யப்பட்ட “மகான்கள்” எனப்படும் நபர்களின் நினைவு நாளில் பண்டிகை நிகழ்வுகள் அரங்கேற்றப்படும். இது பிரதான முஸ்லிம் அடிப்படை நம்பிக்கை வழிபாடு நடைமுறைகளிலிருந்து வேறுபட்டது.
தர்க்காவை -குறிப்பாக தர்க்கா மட்டுமே- அமைந்துள்ள இடத்தை உடைப்பதில் பிரதான போக்கினை கொண்ட முஸ்லிம்கள் தாங்களே முன்வந்து செய்வதனையும் அண்மைக்காலமாக கண்டு கொள்ளமுடிகிறது. ஏனெனில் தர்காக்கள் அமைந்திருப்பதும் அவற்றினை சுற்றிய நிகழ்வுகளும் இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைகளுக்கு மாற்றமானவை என்றும் . அவை மனிதர்களுக்குள் அமானுஷ்ய சக்திகள் கொண்டவர்களாக தங்களை முறையான சமய அனுஷ்டானங்களை பயிற்று விப்பவர்களாக ஈடேற்றம் பெற வழி காட்டுபவர்களாக கருதும் மகான்கள் இருப்பதாக நிறுவுவதனை இஸ்லாமிய அடிப்படை நம்பிக்கைகளுக்கு எதிரானவை என்றும் அவற்றினை போஷிக்கும் தர்காக்கள் தகர்க்கப்பட வேண்டும் என்றும் வாதிடுபர்கள்.
போர்த்துக்கேயர் இலங்கைக்கு வந்து இலங்கையின் ஹிந்து முஸ்லிம் மக்கள் மீது மட்டுமல்ல பெளத்தர்கள் மீதும் தமது மத விரோத அடக்கு முறைகளை கட்டவிழ்த்து விடும் வரை மூன்று மத வழிபாட்டு தளங்களும் அருகருகே அமைந்ததையும் மக்கள் பொதுவாக இன மத மோதலின்றி ஐக்கியமாக வாழ்ந்ததாகவும் பீ சீ. ராய் சவுத்தரி போன்றோர் குறிப்பிடுகின்றனர். அதிலும் குறிப்பாக அழகிய தர்காக்கள் புண்ணிய இடங்கள் பரவிக்கப்படுவதையும் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். அனுராதபுரம் பெளத்த மதம் காலூன்றிய நகராக பெளத்த அரசர்களின் ஆட்சிக்கும பெளத்த கலாச்சாரத்திற்கும் சான்றாக மிளிர்ந்தாலும் அனுராதபுரத்தில் இஸ்லாம் மதத்தை தழுவிய அராபியர்கள் வரு முன்னர் புராதன அனுராதபுரத்த்ன் அரசர்களுள் ஒருவனான பண்டுகாபயனுடன் அராபியர் வர்த்தகம் புரிந்த சான்றுகள் உள்ளதாக சரித்திராசிரியர்கள் எழுதியுள்ளார்கள்.
இதையும் மகாவம்சம் யவனர்கள் (சோனகர்கள்) பிரசன்னம் பற்றி குறிப்பிடுவதாக எம்.எச்.எம் மஹ்ரூப் தகுந்த சான்றுகளுடன் ஆராய்ந்துள்ளார். மேலும் அங்கு அனுராதபுரத்தில் துருக்கிய குளியல்கள் இருந்ததற்கான தடயங்கள் காணப்பட்டதையும் புதைபொருள் ஆய்வுகள் சுட்டிக் காட்டின. இதையெல்லாம் இங்கு நோக்கும் போது உலகின் பெரும் புராதன கட்டடக் கலையை கண்டு கொள்ளும் நகராக மட்டுமல்ல சகல மதத்தினரும் மக்களும் அமைதியாகவும் வாழ்ந்த ஒரு பாரம்பரிய நகரில் இனவாத குழுவினரும் பெளத்த மதவாதிகளும் பிறிதொரு மதத்தினை பின்பற்றும் மக்களுடன் தொடர்புபடுத்தப்படும் ஒரு நிறுமானத்தை நிர்மூலமாக்குவதற்கு உண்மையான காரணம் என்ன என்ற கேள்வியும் எதிர்காலத்தில் வேறு எங்கு என்னென்ன நடக்கும் என்ற அச்சமும் அலைமோதுகிறது.
ஆக மொத்தத்தில் சியாரம் எப்போது கட்டப்பட்டது, யாரால் கட்டப்பட்டது அங்கு அடக்கப்பட்டிருக்கின்ற மனிதரின் -”மகானின்”- பெயர் என்ன அந்த சியாரம் “ராஜாமலகா” எல்லைக்குள் அல்லது யுனெஸ்கோ உலக பாரம்பரிய பிரதேச எல்லைக்குள் கட்டப்பட்டுள்ளதா அப்படியானால் அது ஏன் இந்நாள் வரை ஒரு சட்ட அதிகாரமற்ற நிர்மாணமாக கண்டு கொள்ளப்படவில்லை அல்லது அதனை நீக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அச் சியாரத்தை இடித்து தரைமட்ட மாக்க முன்னின்ற ஒரு பிக்கு அச்சியாரம் ஒரு பள்ளியாக (மசூதி) மாற்ற முஸ்லிகள் திட்டமிட்டிருந்தார்கள் என்று பீ .பீ.சி க்கு கூறியதன் பின்னணி என்ன சியாரமாக -தர்காவாக – இருந்தால் பரவாயில்லையா அது பள்ளியாக மாற்றப்படக் கூடாது என்பதற்காக உடைக்கப் பட்டதா என்ற கேள்வியுடன் அப்படியானால் அது பற்றி எந்த அனுராதபுர முஸ்லிமும் கதைக்காமல் போனது ஏன் என்ற கேள்வியும் இணைந்தே கேட்கப்படல் வேண்டும். —-தொடரும்

0 commentaires :

Post a Comment