9/20/2011

இமாலய பூகம்பத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு


இடிபாடுகளிடையே தேடும் இராணுவ மீட்புப் பணியாளர்கள்இமாலய மலைத் தொடரில் ஞாயிறு இரவு ஏற்பட்ட பூகம்பத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐம்பதைத் தாண்டியுள்ளது. பல டஜன் கணக்கானோர் காயமும் அடைந்துள்ளனர்.
இந்த பூகம்பத்தில் மையம் இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் அமைந்திருந்தது. அங்கு குறைந்தது இருபத்து ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

நிவாரணப் பணிகள் பாதிப்பு



அடர்த்தியான மேகமூட்டமும், கடும் மழையும், நிலச்சரிவுகளும் மீட்புப் பணியாளர்கள் பாதிக்கப்பட்டவர்களைத் தேடி மீட்பதற்கு தடங்கல்களை ஏற்படுத்தியுள்ளளது.
இராணுவ ஹெலிகாப்டர்கள் பறக்க முடியாத அளவுக்கு வானிலை மோசமாக உள்ளது.
மிகவும் பாதிக்கப்பட்ட ஒதுக்குப் புறமான இடங்களுக்கு உதவிப் பணியாளர்களை கொண்டு சேர்க்க முடியாத நிலை இருந்துவருகிறது.
"உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சுகிறேன்."
ஐ.நா.வின் பேரிடர் கால உதவிப் பணிகள் அதிகாரி
தவிர நிலநடுக்கத்தினாலும் மழையாலும் மலைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள மண்சரிவினால் சாலைப் வழியாகச் செல்வதென்பதும் சாத்தியமில்லாமல் இருக்கிறது.
நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ள ஆயிரக்கணக்கான சிப்பாய்கள் உதவி தேவைப்படும் இடங்களுக்கு சேரவே செவ்வாய்க்கிழமை ஆகிவிடும் ஏனென்றால் மலை வழியாக செல்லும் சாலைகள் எல்லாம் அடைபட்டுப் போயுள்ளன என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
இவ்வாறான சூழ்நிலையில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என தான் அஞ்சுவதாக ஐ.நா. பேரிடர் கால உதவிகள் செயலணியின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் இன்னும் கலக்கத்துடனும் கவலையுடனும் காணப்படுகிறார்கள், பெரும்பாலானவர்கள் நேற்றைய இரவுப் பொழுதை வீடுகளுக்குள் செல்லாமல் வெட்டவெளியில் கழித்திருந்ததாகக் கூறப்படுகிறது.
தவிர சிக்கிமில் நான்கு நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்துவருகிறது.
கேங்டாக் நகரத்தில் கடைகளும் அலுவலகங்களும் மூடப்பட்டே இருக்கின்றன.
இப்பகுதியில் தொலைபேசி இணைப்புகளிலும் நிறைய பிரச்சினைகள் இருந்துவருகின்றன.

மற்ற இடங்கள்

சிக்கிம்மை உலுக்கியெடுத்துள்ள இந்த பூகம்பத்தின் அதிர்வுகள் வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், மேகாலயா, திரிபுராவிலும் மேற்கு வங்கம் பிஹார், ஜார்கண்ட், உத்திரபிரதேசம் தில்லி, ராஜஸ்தான் ஏன் மேற்கில் சந்திகர் வரையிலும் கிழக்கில் பூட்டான் வங்கதேசத்திலும் உணரப்பட்டிருந்தன.
சிக்கிமுக்கு அடுத்தபடியாக பூகம்ப பாதிப்புகளைச் சந்தித்துள்ள நேபாளத்தில் எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். நூறு பேர் வரையில் காயம் அடைந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
தலைநகர் காட்மாண்டுவிலுள்ள்ள பிரிட்டிஷ் தூதரகச் சுவர் ஒன்று இடிந்ததில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் வரவுசெலவு விவாதத்தில் ஈடுபட்டிருந்த உறுப்பினர்கள் கட்டிடம் குலுங்கியதை அடுத்து அவையை விட்டு வெளியே ஓடியிருந்தனர்.
சிக்கிமுக்கு வடக்கிலுள்ள திபெத்திலும் இந்த பூகம்பத்தினால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
பல இடங்களில் நிலச்சரிவுகள் காரணமாய் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதாகவும், மின்சார, குடிநீர் இணைப்புகள் சேதமானதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

0 commentaires :

Post a Comment