9/22/2011

தமிழ்க் கூட்டமைப்பின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை அரசாங்கம் மறுப்பு

 அரசின் திட்டமிட்ட இன ஒழிப்பு, நில அபகரிப்பு பற்றி சர்வதேச சமூகத்திடம் முறையிடுவோம். தேவைப்படின் நீதிமன்றமும் செல்வோம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்த கருத்துக்கள் ஆதாரமற்றவை என்று அரசாங்கம் மறுத்துள்ளது.
சர்வதேச ரீதியில் இலங்கைக்கு அவப்பெயரை ஏற்படுத்தி அநாவசியமான அழுத்தங்களை கொண்டுவந்து நாட்டில் நல்லாட்சி நடைபெற வில்லை என்ற பொய்யான தகவல்களை வெளிநாடுகளுக்கு எடுத்துக்காட்டுவதற்கு சுரேஸ் பிரேமச்சந்திரன் எடுத்துவரும் முயற்சிகள் தேசத்திற்கு ஏற்படுத்தும் பாதகமான செயல்கள் என்றும் அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. எங்கள் நாட்டில் இரண்டு இனங்களே இருக்கின்றன. ஒன்று நாட்டை நேசிப்பவர்கள், மற்றவர்கள் நாட்டிற்கு துரோகம் இழைப்பவர்கள் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முன்னர் ஒரு தடவை தெரிவித்த யதார்த்தபூர்வமான கருத்துக்கு போலி அர்த்தத்தைக் கொடுத்து தமிழ் தேசிய கூட்டணியைச் சேர்ந்த சிலர் இவ்விதம் தவறான தகவல்களை எடுத்துரைப்பது மன்னிக்கமுடியாத குற்றமென்று அரசாங்க வட்டாரங்கள் கூறுகின்றன.
தமிழினம் என்றொன்று இலங்கைத்தீவில் இருக்கக்கூடாது என்று இலங்கை அரசாங்கம் சிங்களக் குடியேற்றங்களை தமிழர் தாயகங்களில் அரங்கேற்றி வருகிறதென்றும், சுரேஸ் பிரேமச்சந்திரன் அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டியிருக்கிறார்.
முல்லைத்தீவு, கொக்கிளாய் பகுதியில் புதிதாக சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்படுகின்றன. இந்தக் குடும்பங்களுக்கு புதிதாக காணிகளும் வழங்கப்படுகின்றன. இலங்கையில் எங்கும் எவரும் வாழலாம் என்று அரசாங்கம் பகிரங்கமாக அறிவித்து இந்த இன ஒழிப்பு நடவடிக்கைகளையும் தமிழர் காணிகளையும் அபகரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறதென்றும் அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் இதுபற்றி கருத்து தெரிவிக்கையில் இல்லாத பிரச்சினைகளை போலியாக ஜோடித்து சுரேஸ் பிரேமச்சந்திரன் இவ்விதம் பிரசாரங்களை செய்து வருவதை அரசாங்கம் கண்டிக்கிறதென்றும், இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு அரசாங்கம் உரிய காலத்தில் சரியான பதிலை கொடுக்குமென்றும் கூறினார்.

0 commentaires :

Post a Comment