9/10/2011

ஏ.ஜீ.எம். ஸதக்காவின் கவிதைகள் எப்பொழுதும் அலைகளை எழுப்பிக் கொண்டிருக்கும் கடல்


“எனக்கென்று ஏவப்பட்ட
ஒரு துப்பாக்கிக் குண்டு
என் பிடறிக்குப் பின்னால்
பின் தொடர்கிறது
அது இறப்பின் சேதியை எப்போதும்
ஏந்தி வரலாம்
அப்போது-அம்மா
எனக்காகத் தாலாட்டுப் பாடியவளே
ஒப்பாரி பாடாதே!”
-கவிஞர் ஏஜீஎம். ஸதக்கா

(முதலாம் பாகம்)
ஏ.ஜீ.எம். ஸதக்கா மிக முக்கிய முஸ்லிம் தேசக் கவிஞர்களுள் ஒருவர். அவர் எழுத்துத்துறையில் ஒருவித மௌனத்துடன் இருந்து வந்த நிலையிலேயே அவரது மரணமும் சம்பவித்துள்ளது. ஆனால் அவரது படைப்புகள் அவரை எப்போதும் ஒரு பரபரப்பான படைப்பாளியாகவே காண்பித்துக்கொண்டிருக்கின்றன. வீச்சும் கருத்தாழமுமிக்க கவிதைகளுக்கே உரித்தான உணர்வூட்டும் மொழியில் எழுதிய ஸதக்காவின் இந்த மௌனத்தவம் கலைந்து மீண்டும் அவரது எழுத்தியக்கம் தொடங்க வேண்டும் என்ற அவாவில் இருந்த நமக்கு கடைசியில் பெரும் ஏமாற்றம்தான் மிஞ்சியது. மரணம் அவரது எழுத்துகளுக்கு நிரந்தரமாகவே முற்றுப் புள்ளி வைத்துவிட்டது. அவரது கடந்த காலக் கவிதைகள் குறித்து ஒரு முழுமையான வாசிப்பை நாம் மேற்கொள்கிறோம்.
2.
“இமைக்குள் ஓர் இதயம்”, “போர்க்காலப் பாடல்” ஆகிய இரு கவிதைத் தொகுதிகளையும் தொகுதி வடிவம் பெறாத இன்னும் சில கவிதைகளையும் தந்தவர் ஏ.ஜீ.எம். ஸதக்கா. கடந்த மூன்று தசாப்தங்களாக இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் இலங்கையின் இலக்கியப் போக்கிலும் பல மாறுதல்களை ஏற்படுத்தி இருந்தது. சிறந்த பல படைப்புகளும் படைப்பாளிகளும் உருவாக இது காரணமாக அமைந்தது. யுத்த காலத்தின் போதான ஒரு காத்திரமான இலக்கிய எழுச்சி 1990 களிலேயே இடம்பெற்றது. இக்காலப்பகுதியில் கிழக்கில் பல முஸ்லிம் படைப்பாளிகள் தோன்றி இந்த இலக்கிய எழுச்சியை முன்னெடுப்பதில் முனைப்புடன் செயற்பட்டனர். இதில் கல்குடாத் தொகுதி படைப்பாளிகளுக்கு ஒரு கணிசமான பங்கிருக்கிறது.

ஈழத்து மண்ணின் அவலத்தில் எண்பதுகளுக்குப் பின்னர் விளைந்த காத்திரமான படைப்பாளியாக ஏ. ஜீ. எம் ஸதக்காவை நாம் கொள்ளலாம். இவரது கவிதைகள் அவரைப் போலவே வாழ்ந்து கொண்டிருந்த அந்த மக்களின் வாழ்வியலை வௌ;வேறு கோணங்களில் பேசுபவை.
ஸதக்காவின் கவிதைகள் வௌ;வெறு காலகட்டங்களைச் சேர்ந்தவை. ஆனால் ஒரேவகையான மொழியும் பாடுபொருளையும் கொண்டவை. எந்தப் புள்ளியில் அவர் எழுதத் தொடங்கினாரோ புகையிரதப் பாதைபோல முடிவுறாத நீட்சியாய் அந்தப் புள்ளியிலேயே அவரது எழுத்துக்கள் பயணிக்கின்றன.
1988ல் வெளிவந்த அவரது ‘இமைக்குள் ஓர் இதயம்’ கவிதைகள் எடுத்துரைப்பு முறையில் ஒரு பயில்நிலைத் தன்மையை காட்டினாலும், மொழிப் பிரயோகத்தில் ஒரு முதிர்ச்சியை வேண்டி நின்றாலும் கவிதைகளின் பேசுபொருள் அன்றைய காலத்தோடு மட்டுமல்லாது நமது நிகழ்காலத்தோடும் ஒத்து ஒலிக்கின்றன. அந்தவகையில் அவரது கவிதைகள் காலத்துக்குரிய கவிதைகளாக கொள்ளலாம்.
இமைக்குள் ஓர் இதயம்’ தொகுப்பில் இருக்கும் கவிதைகள் ஒருமுகப்பார்வையில் விரிவன. வாழ்வை, மக்களை, அவர்களின் கனவுகளை சதாவும் கோரிக்கொண்டு நிற்பவை. பொதுவாக ஸதக்காவின் கவிதைகள் எப்போதும் மக்களை எழுச்சியுறச்செய்ய முனைபவை. அவரது கவிதைகள் மட்டுமல்ல, அவரது வாழ்வையே மக்களின் எழுச்சிக்காகவே அர்ப்பணித்தவர் அவர்.

எல்லாவிதமான போராட்டங்களோடும் அவரது கவிதைகள் சமரசம் செய்பவை. புரட்சித் தன்மை வாய்ந்த சமூக எழுச்சியை தூண்டவல்ல எல்லா நிகழ்வுகளுடனும் அவரது கவிதை மனம் பொருந்திப்போகிறது. மே தின நிகழ்வையும் அவர் பாடினார். ‘அழைப்பொலி கேட்கிறது’ என்ற கவிதையில் மே தின நிகழ்வை தனது உணர்வுகளுடன் பொருத்திப் பார்க்கிறார் அவர்,
உதிரத்தில் உயிர்ப்படம் தீட்டிய
செங்கொடி உயரப் பறக்கிறது- புதிய
உணர்வில் கலக்கிறது-வானம்
அதிரக் கொடுமைகள் சிதறக் காதில்
அழைப்பொலி கேட்கிறது- மே தின
உழைப்பொலி கேட்கிறது!’

ஸதக்காவின் ஆரம்பகாலக் கவிதைகள் எப்போதும் ஒரு கோட்பாட்டு விசாரணையை முன்வைப்பவை. ‘இமைக்குள் ஓர் இதயம்’ தொகுப்பிலுள்ள கவிதைகளை அவர் எழுதிய காலப்பகுதியில் சோ~லிசக் கோட்பாட்டின் தாக்கம் இங்கும் காணப்பட்டது. ஆனால் அவர் அதில் முழுமையாக ஈடுபாடு கொள்ளவில்லை. சோ~லிசம், யதார்த்தவாதம், முதலாளித்துவம் போன்ற கோட்பாடுகள் மீது தீவிரமான கோட்பாட்டு விசாரணையை அவரது கவிதைகள் முன்வைக்கின்றன.
அவர் எழுதினார்-
திறந்த பொருளாதாரமாம்
அதுதான் திறந்த வீடு மாதிரி
நாய்கள் மட்டுமல்ல
நரிகளும் புகுந்துகொண்டு…”

என்று முதலாளித்துவப் பொருளாதாரக் கொள்கை மீது தனது விமர்சனப் பார்வையைப் பதிவுசெய்தார்.
ஸதக்கா தனது கவிதைகளில் அவரது தேடல்கள் பற்றியும் பதிவு செய்தார். அவரது தேடல்கள் ஞாபகம் பற்றிய தேடல், நாம் தொட்டுணர முடியாத தேடல். வாழ்வு பற்றியதும் அதன் மீதான கனவுகள் நம்பிக்கைகள் பற்றியதுமான தேடல். எப்போதும் நாம் தொலைத்தவிட முடியாத தேடல் அது.
எரிகின்ற திருநாடும் உனதல்ல என்றொருவன்
பிரிகின்ற சிறுநாடும் எனதல்ல என்றொருவன்
ஆயின்,என் நாடு எங்குண்டு நான் தேட?’

தேடலின் முடிவில் அவரால் எதையும் கண்டுகொள்ள முடியாத வெறுமை சூழ்கிறது. சுற்றி இருக்கும் எல்லாவற்றின் மீதும் ஒரு தகிப்பு அவருக்கு ஏற்படுகிறது. அவரது கவிதை மனம் குறுகுறுக்கிறது. உடையக் காத்திருக்கும் ஒரு நீர்க் குமிழி சற்றைக்கெல்லாம் உடைந்து விடுவதைப்போல உடைகிறது அவர் மனம்,
சுதந்திரம், போராட்டம் என்றெல்லாம்
என்னைச் சிரமப்படுத்தாதே!
சப்தங்களால் காயப்பட்டிருக்கிறது
என்னிதயம்’ என்கிறார்
‘எல்லோரது மொழியாகவும்
இனி மௌனமே இருக்கட்டும்’ என்கிறார்.

ஸதக்காவின் பெரும்பாலான கவிதைகள் போரின் இரைச்சலையும் மக்களின் மௌனத்தையும் பேசுபவை. போர் ஏற்படுத்திய அதிர்ச்சியையும் அதன் பக்க விளைவுகளையும் நேர்மையாகப் பதிவு செய்பவை. போரின் காலத்திலும் அதன் பின்னரும் மக்கள் கொண்டிருந்த ரணத்தின் சோகங்களையும் ஓலங்களையும் சுமந்துகோண்டு அவரது கவிதைகள் நகர்கின்றன. அவர் கவிதை எழுதத்தொடங்கிய நாட்களிலும் மக்களின் வாழ்வென்பது இப்போதும் உள்ளது போல் நிபந்தனைகளுக்குட்பட்டதாகவோ அல்லது முழுச் சுதந்திரங்களையும் இழப்பதாகவோதான் இருந்தது. அதைத்தான் ஸதக்கா பல்வேறு சந்தர்ப்பங்களிலும் தனது கவிதைகளில் பதிவு செய்தார்.
துப்பாக்கிகளால் வரையறுக்கப்பட்ட
என் வாழ்க்கை
ஒரு கைதியின் ஆடைபோல கறைபடிந்தே உள்ளது’ என்று எழுதும் அதேநேரம்

‘பேச்சும் மூச்சும்
கேள்வியும் என்னுள்
தொலைந்துதான் போயிற்று’ என எழுதுகிறார்.
ஆதிக்க சக்திகளின் அதிகாரத்தை அவர்களின் அடக்குமுறைகளை அவர் உறுதியாக எதிர்த்த போதிலும் மனித உறவுகளையும், மனிதநேயங்களையும் அவர் எழுதினார்.
அன்பின் கண்ணம்மாவுக்கு’ என்ற அவரது கவிதை இதற்கு நல்ல எடுத்துக்காட்டாகும்.
தமிழ்-முஸ்லிம் கலவரங்களின் போது ஒரு தமிழ்ப் பெண்ணால் ஒரு முஸ்லிம் காப்பாற்றப்பட்டதை கவிஞர் இப்படிப் பதிவுசெய்கிறார்
கலவரமூட்டும் காலைப்பொழுது
இறுகப்பற்றிய என் கையை
இராணுவ முகாமில் விடுவித்தாய்
அவர்கள் அதிர்ந்தனர்-
கண்ணீரால் கைகூப்பினேன் நான்!’

வாழ்வென்பது அர்த்தங்களை இழந்த மண்ணிலும் அதன் மீது சிறு நம்பிக்கையை ஏற்படுத்தியவர் அவர். ‘எந்த நம்பிக்கையும் இல்லாவிட்டாலும் கூட, நம்பிக்கைகளை உருவாக்குவதும் படைப்பதும் நமது கடமையாக இருக்க வேண்டும்’ என்று மஹ்மூத் தர்வீ~; சொன்னதைப் போல நமக்கு நம்பிக்கையூட்டிய கவிஞன் அவர்.
‘எனக்கே நம்பிக்கையில்லாத இப்பிரதேசத்தை
நமது பிரதேசம் என நம்பிக்கையூட்டியவளே’
என நமக்கும் நம்பிக்கையூட்டியவர் அவர்.

நம்பிக்கையின் வரிகளை அவரது கவிதைகளில் நெடுகிலும் எங்களால் காண முடியும். ஒரு காரிருளை விரட்ட குறைந்தபட்சம் மின்மினிப் பூச்சியையேனும் நமக்கு கொண்டுவர அவர் எத்தனித்தார்;. இயலாமையை, அவநம்பிக்கையை, தோற்றுவிடுவோம் என்ற உணர்வை ஒரு போதும் அவரது கவிதைகள் தருவதில்லை. சமூகம் தூங்கிக்கிடப்பதை ஒருபோதும் ஏற்பவரல்ல அவர்,
‘தூங்கியது போதும்
துடித்தெழுங்கள் என்று தட்டி எழுப்பினால்
நின்றுகொண்டே தூங்குகிறீர்கள்’ என்று தூங்கிக் கிடக்கும் சமூகத்தை ஒரு பாரதியைப் போல தட்டியெழுப்பியவர் அவர்.
‘சமூக நிர்வாணங்களை
போராட்டப் போர்வைகொண்டுதான்
போர்த்த வேண்டியுள்ளது’ என்றவர் அவர். அதற்கான போராட்டத்தையே தனது வாழ்வின் அர்த்தமாகவும் பார்த்தவர்.

அவர் நமது சமூகத்தில் ஒதுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட எல்லாத்தரப்பாரையும் பற்றி எழுதினார். அடக்குமுறைக்குள்ளானோரின் அழுகுரலையும், அவலத்தையும் அவர் பதிவுசெய்தார். பெண்கள், சிறுவர்கள் புறக்கணிப்புக்குள்ளான சமூகத்தின் எல்லாத் தரப்பாரையும் அவர் எழுதினார்.பருவம் வந்தும் சீதனம் போன்ற சமூகக் கொடுமைகளால் திருமணம் முடிக்க முடியாமல் போன பெண்களின் இதயத்து உணர்வுகளையும், பெண்கள் மீதான இன்னபிற அடக்குமுறைகளையும் தத்ரூபமாகச் சித்திரிப்பவை அவரது கவிதைகள்,
புளுதியில் புரளும் உன் புல்லாங் குழலின்
ஜீவித நாதம் செல்வச் செவிகளை
தட்டவில்லையே ஏன்?’

என புறக்கணிக்கப்பட்ட ஏழைப் பெண்களின் கண்ணீருக்கான பதிலை உரத்துக் கேட்டவர்.எனினும் எந்தவொரு அடக்குமுறைக்குள்ளும் வரையறுத்த வாழ்வை அவர் எப்போதும் எதிர்த்துக்கொண்டே இருந்தார்.
அடக்கம் என்பது என்ன பெண்ணே,
உன் அபிலாi~களையெல்லாம்
உனக்குள்ளேயே அடக்கிக்கொள்வதா?’
என அவர்களை எழுச்சியூட்டியவர் அவர்.

நிச்சயமான விடுதலை ஒன்றை நோக்கிய பயணத்தில் மிகக் கடினமான பாதையை கடந்து வந்த ஒரு கவிஞனது மட்டுமல்ல சமூகத்தின் அனுபவங்களையே இவை கூறுகின்றன. இவரது கவிதைகளுக்குள் பயணிப்பது என்பது சிரமமானதொன்றல்ல, ஓர் அழகிய மஞ்சல் அந்தியில் வாசனை பரப்பும் பூக்களை உதிரும் ஒரு சாலையில் நடைபயில்வதுபோல் ஓர் அனுபவம். ஆனால் நம் மனங்களில் அவர் கவிதைகள் துயர அலைகளை, நம்பிக்கையின் கீற்றுகளை, வாழ்வின் உன்னதங்களை, நாம் எப்போதும் கையகப்படுத்த முனையும் வாழ்வின் மகிழ்ச்சி நிறைந்ததும், சோகம் மண்டியதுமான பொழுதுகளை மனமெங்கும் நிறைப்பவை.
எந்தவிதமான நளினங்களுமற்ற ஆனால் கவிதைக்கேயுரித்தான வீச்சான மொழியும், தேவையான அலங்காரங்களும் இவரது கவிதைகளிலுள்ளன.
வாழ்க்கை நம் கன்னத்தில் அறையும்போதெல்லாம் அதை அப்படியே ஏற்றுக் கொண்டுவிடும் படி நாம் விதிக்கப்பட்டிருந்தோம். நமது துயரைப் பிறருடன் பகிர்ந்துகொள்வதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியாத ஒரு மாபெரும் வரலாற்றுத் தருணமொன்றில் நாங்கள் தடுமாறினோம். பிரகடனம் செய்யப்படாத தடையொன்று நமது வாழ்வு மீது இருந்தது. அந்த இறுக்கத்தை நாம் தளர்த்த விரும்பினோம். அந்தத் தடையை நாம் அகற்ற விரும்பினோம். ஸதக்கா தனது எழுத்துக்களால் அதை நிறைவேற்றப் புறப்பட்டார்.

ஸதக்காவின் எழுத்துக்கள் சத்தியமானவை. விடயதானமில்லாத வெறும் புலம்பல்களல்ல அவை. ஓர் உண்மையான செய்தியை, ஓர் யுக சந்தியில் அநாமதேயப் பறவைகளாய் நிர்க்கதியற்றிருந்த ஓர் மக்கள் திரளின் வரலாற்றுத் தருணங்களை இயல்பாகப் பேசும் வரிகள் அவை. நமது இதயங்களில் ஆழமாக ஊடுறுவி சிந்தனையைக் கோருபவை அவை. இரைச்சல்கள், இடர்களை நிராகரித்த ஓர் நேர்கோட்டுப் பயணம் அது. பக்கவிளைவுகளோ பின் விளைவுகளோ அற்ற ஒரு மருந்துப் பொருள்போல கவிதைகள் இருக்கக்கூடாது. ஸதக்காவின் கவிதைகள் எப்போதும் பக்கவிளைவுகளையும் பின் விளைவுகளையும் ஏற்படுத்திக் கொண்டிருப்பவை

-ஜிஃப்றி ஹாஸன்-

0 commentaires :

Post a Comment