9/22/2011

உலகத் தலைவர்களுடன் ஜனாதிபதி இரு தரப்பு பேச்சு

  ஐக்கிய நாடுகள் சபையின் 66வது பொதுச் சபை கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சர்வதேச நாடுகள் சிலவற்றின் அரச தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இச்சந்திப்பு நேற்று முன்தினம் பிற்பகலில் இடம்பெற்றுள்ளது. நைஜீரியா, ஸ்லோவேனியா, ஆகிய நாடுகளின் அரச தலைவர்களையே ஜனாதிபதி சந்தித்துள்ளதுடன் இச்சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உட்பட முக்கியஸ்தர்கள் சிலரும் கலந்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.
இச்சந்திப்புக்களின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பயங்கரவாதத்தை தோல்வியுறச் செய்ததன் பின்னர் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீளக்குடியமர்த்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் நெருக்கடிகளுக்கு பிற்பட்ட முகாமைத்துவ பணிகள் மற்றும் நிலக் கண்ணிவெடிகளை அகற்றுதல் ஆகியவற்றில் கண்டுள்ள முன்னேற்றம் தொடர்பாகவும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாகவும் விடயங்களை விளக்கிக் கூறினார். மேலும் நாட்டில் செயற்படுத்தப்படும் பாரிய அபிவிருத்தி கருத்திட்டங்கள் தொடர்பாகவும் பொருளாதாரத்தின் தற்போதைய முன்னேற்றம் தொடர்பாகவும் ஜனாதிபதி அவர்கள் அரச தலைவர்களுக்கு விளக்கியுள்ளார்.
கிரிகிஸ்தான் ஜனாதிபதி திருமதி ரோசா ஒட்டுன்பயேவா இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை தொடர்பில் உயர்வாக வர்ணித்தார். இலங்கையின் தேயிலை தொடர்பாக கற்றறிவதற்கு வர்த்தக தூதுக் குழுவொன்றை அனுப்பும்படி இதன் போது ஜனாதிபதி அவரிடம் கேட்டுக்கொண்டார்.
ஸ்லோவேனியா ஜனாதிபதி கலாநிதி டெனிலோ டர்க் அவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது இலங்கையில் ஏற்பட்டுள்ள அமைதி நிலை உலகத்திற்கு ஒரு முன்மாதிரியாகும் என திரு. மர்க் தெரிவித்தார். இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வேகத்தையும் மோதல்களின் பின்னர் குறுகிய காலத்தில் அடைந்துள்ள அபிவிருத்தியையும் ஸ்லோவேனியா ஜனாதிபதி பாராட்டினார்.
நைஜிரியா ஜனாதிபதி குட்லக் ஜொனத்தன் அவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பொருளாதாரம், வர்த்தகம் உள்ளிட்ட துறைகள் பற்றி கலந்துரையாடப்பட்டது. இரு நாடுகளுக்குமிடையிலான நட்புறவை மேலும் வளர்த்துக்கொள்ளக்கூடிய முறை பற்றியும் இரு நாட்டுத் தலைவர்களும் கலந்துரையாடினர்.
இதற்கிடையில் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்கள் தொடர்பான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் ரொபட் ஓ. பிளேக் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.
இக் கலந்துரையாடல்களில் ஐக்கிய நாடுகளுக்கான நிரந்தர பிரதிநிதி கலாநிதி பாலித்த கொஹன பிரதி நிரந்தர பிரதிநிதி சவேந்திர சில்வா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் 66வது பொதுச் சபை கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கிளிண்டன் மன்றத்தின் பூகோள முன்னெடுப்பு அமர்வில் கலந்து கொண்டுள்ளார். 20, 21 ஆம் திகதிகளில் நடைபெற்ற இந்த அமர்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, தென் ஆபிரிக்க ஜனாதிபதி உட்பட அரச தலைவர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில்கிளிண்டன் 2005 ஆம் ஆண்டில் கிளின்டன் மன்றத்தை ஆரம்பித்துள்ளார். இம்மன்றத்தினூடாக 180 நாடுகளைச் சேர்ந்த 800 மில்லியன் மக்கள் நன்மையடைந்துள்ளனர்.
தற்போதைய மற்றும் முன்னாள் அரச தலைவர்கள், செல்வந்தர்கள், சர்வதேச நாடுகளிலுள்ள நிறுவனங்களின் பிரதானிகள், நலன்புரி அமைப்புக்கள் ஆகியோரின் பங்கேற்புடன் இவ்வமர்வுகள் நடைபெற்றன. உலகம் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிகள், கல்வி, சூழல் மற்றும் மின்சக்தி, சுகாதாரம் உள்ளிட்ட விடயங்கள் இவ்வமர்வில் விரிவாகக் கலந்துரையாடப் பட்டன எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துதது.

0 commentaires :

Post a Comment