9/14/2011

கூடம்குளம் அணு உலையை எதிர்த்துப் போராட்டம்

கூடம் குளம் அணுஉலைகூடம் குளம் அணுஉலை. 
   தென் தமிழகத்தில் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுவரும் அணு உலை வரும் டிசம்பரில் முறையாக உற்பத்தியை ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தத் திட்டத்துக்கு எதிராக உள்ளூர் வாசிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்து உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள 127 பேர் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளதாகவும், மேலும் பல ஆயிரம் பேர் தினந்தோறும் போராட்டம் நடக்கும் இடத்துக்கு வந்து தமது ஆதரவை தெரிவித்துச் செல்வதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவாக அந்தப் பகுதியில் உள்ள மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லாமல் உள்ளனர். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தமது வகுப்புக்களை புறக்கணிக்கின்றனர்.
இந்த எதிர்ப்பைக் கைவிடுமாறு மாவட்ட நிர்வாகம் அவர்களை இணங்க வைக்க பேச்சு வார்த்தைகளுக்கு வருமாறு கோரியது. ஆனால் பேச்சு வார்த்தைகள் நடைபெறவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன. போராட்டத்தில் உள்ளூர் தேவாலயத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார்களும், கன்னியாஸ்திரிகளும் பங்கேற்றுள்ளனர்.
ஜப்பானில் சமீபத்தில் புக்கோஷிமா உலையில் ஏற்பட்ட விபத்துக்குப் பிறகு புதிய உலையை அமைப்பதில்லை என்று அந்நாடு முடிவு செய்துள்ளதையும், வேறு சில மேற்கத்திய நாடுகளும் அதே போல முடிவெடுத்துள்ளதையும் சுட்டிக் காட்டும் திருநெல்வேலி மாவட்ட கவுன்சிலில், கூடங்குளம் பஞ்சாயத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் உறுப்பினர் முத்துராஜ் இந்த அணு உலைகள் மூடப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
போராட்டத்தில் இருக்கும் பெண்கள்
கூடம் குளம் போராட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டுள்ளனர்
ரஷ்யாவின் செர்னோபில்லில் ஏற்பட்ட மோசமான அணு விபத்து சம்வத்தைச் சுட்டிக் காட்டிய அவர் அதே போன்றதொரு விபத்து இங்கு நடக்காமல் தடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
கடந்த 1986 ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் அன்றைய சோவியத் ஒன்றியத்துக்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி பதினைந்தாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான பொருட் செலவில் தலா ஆயிரம் மெகா வாட் திறன் கொண்ட இரு உலைகள் கூடம்குளத்தில் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பகுதியில் இதே போன்ற ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட மேலும் நான்கு உலைகளை அமைக்க இந்திய அணு சக்தித் துறை திட்டமிட்டுள்ளது.
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையை கைச்சாத்திடப்பட்ட இராணுவம் சாரா அணு ஒப்பந்தத்தின் கீழ் பல புதிய அணு உலைகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து நிறுவ மத்திய அரசு விரும்புகிறது. ஆனால் சர்வதேச அளவில் அணு உலைகளை தருவிப்பதில் உள்ள தாமதங்கள் மற்றும் அணு உலைகளுக்கு எதிராக நாட்டில் நடக்கும் போராட்டங்கள் காரணமாக இந்தத் திட்டங்கள் தாமதமாகி வருகின்றன.
அதே நேரம் கூடம்குளத்தில் இருக்கும் அணு உலைகள் மிகவும் பாதுகாப்பானவை என்றும் புக்கோஷிமா போன்ற விபத்துக்கள் இங்கு ஏற்பட வாய்பில்லை என்று இந்த அணு மின் திட்டத்துக்குப் பொறுப்பான அதிகாரி பாலாஜி தமிழோசையிடம் தெரிவித்தார்.
இந்த உலைகள் மூன்றாவது தலைமுறையைத் தாண்டிய முன்னேறிய தொழில் நுட்பம் கொண்ட அணு உலைகள் என்றும் இந்த உலைகளின் செயல்பாடுகள் குறிது தாம் அந்தப் பகுதி மக்களுக்குத் தொடர்ந்து தெரியப்படுத்தி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 commentaires :

Post a Comment