9/29/2011

இலங்கை கரையில் இறந்த டால்பின்கள்

இலங்கையின் கிழக்கு மகாணம் கல்முனை கடலோரத்தில் இயல்புக்கு மாறாக டால்பின்கள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்குவதாக உள்ளூர் மீனவர்கள் கூறுகிறார்கள்.
கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் இருபதுக்கும் மேற்பட்ட டால்பின்கள் உயிரிழந்த நிலையில், கரையொதுங்கியுள்ளதாக கல்முனைப் பகுதி மீனவர்களும், மீனவ அமைப்புகளும் தமிழோசையிடம் தெரிவித்தனர்.
ஆழ் கடலில் பயன்படுத்தப்படும் தூண்டில்கள் மற்றும் நைலான் வலைகளிலும் சிக்கியே இந்த டால்பின்கள் உயிரிழப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக   தெரிவித்தார் அம்ப்பாறை மாவட்ட ஆழ் கடல் மீனவர்கள் சங்கத்தின் தலைவர் எம் எஸ் நசீர்.
ஆழ் கடலில் தங்கியிருந்து மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள வெளி மாவட்ட மீனவர்கள் பயன்படுத்தும் மீன்பிடி உபகரணங்கள் காரணமாகவும் இந்த டால்பின்கள் உயிரிழந்திருக்கக் கூடும் எனவும் அவர் மேலும் கூறுகிறார்.
இறந்த நிலையில் கரையொதுங்கும் இந்த டால்பின்களில் காயங்கள் எதுவும் இல்லை என்றும், நைலான் வலைகளிலும், தூண்டில்களிலும் சிக்கிய நிலையில் மீண்டும் கடலில் வீசப்பட்டதற்கான தடயங்களே அதிகம் காணப்படுவதாகவும் நசீர் கூறுகிறார்.
இறந்த டால்பின் ஒன்று
இந்த ஆண்டு கூடுதல் இறப்புகள்
இந்தக் காலப்பகுதியில் வழக்கமாக அந்தக் கடலோரப் பகுதியில் டால்பின்கள் கரையொதுங்வது இயல்புதான் என்றாலும், இந்த ஆண்டு இறந்து கரையொதுங்கிய டால்பின்களின் எண்ணிக்கை மிக அதிகம் என அப்பகுதி கரவலை மீனவர்கள் சங்கத்தின் தலைவரான மொஹமத் அபுபக்கர் தெரிவிக்கிறார்.
கடலில் மீன்கள் அதிகரித்து இருப்பது போல டால்பின்களின் நடமாட்டமும் அதிகமாக இருப்பதாகக் கூறும் அபுபக்கர், உயிரிழந்த நிலையில் கரையொதுங்கும் டால்பின்களின் துர்நாற்றம் காரணமாக அவை உள்ளூர் மீனவர்களினால் குழி வெட்டி புதைக்கப்படுகின்றன அல்லது கடலுக்குள் மீண்டும் தள்ளப்படுகின்றன எனவும் கூறுகிறார்.
உயிரிழந்த நிலையில் டால்பின்கள் கரையொதுங்வது தொடர்பில், மீனவர்கள் அல்லது மீனவர் அமைப்புகளிடமிருந்தோ இதுவரை தமக்கு அறிவிக்கப்படவில்லை என்று கடற்தொழில் மற்றும் நீரியல் துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
இலங்கையில் டால்பின்களை பிடிப்பதோ அல்லது வைத்திருப்பதோ சட்டவிரோதம் என்பது குறிப்பிடத்தக்கது.

0 commentaires :

Post a Comment