கொழும்பில் ஆவணங்கள் பரிமாற்றம்
500 மில்லியன் அமெ. டொலர் செலவு
500 மெகாவாற்ஸ் மின்சாரம் உற்பத்தி
500 மெகா வாற்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்யும் திருகோணமலை சம்பூர் அனல் மின் நிலையத்திற்கான கூட்டு ஒப்பந்தம் நேற்று இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் கைச்சாத்திடப்பட்டது.
இலங்கை சார்பாக மின்சார சபை தலைவர் பேராசிரியர் விமலதர்ம அபேவிக்ரமவும் இந்தியா சார்பாக இந்திய என்.ரீ.பீ.சி. கம்பனி தலைவர் அருப்ரோய் செளத்ரியும் கைச்சாத்திட்ட னர்.
மின்சார சபையும் என்.ரீ.பீ.சி. கம்பனியும் இணைந்து ஆரம்பிக்கும் முதலீட்டு சபையின் அனுமதியுள்ள கூட்டுக் கம்பனியினூடாக அனல் மின் நிலையம் நிர்மாணிக்கப்படவுள்ளது.
இந்தத் திட்டத்திற்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட உள்ளதோடு இதற்கான செலவை இரு நாடுகளும் சரி பாதியாக ஏற்க உள்ளன.
இதற்கு இந்தியா 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனுதவி வழங்க உள்ளதோடு மின் உற்பத்தி நிலையத்திற்கான 500 ஏக்கர் காணி, உட்கட்டமைப்பு வசதி அபிவிருத்தி என்பவற்றை இலங்கை வழங்குகிறது. அனல் மின் நிலையத்திற்கான உபகரணங்களை இந்தியா வழங்கும் 25 வருடங்களுக்கு குறித்த ஒப்பந்தம் அமுலில் இருக்கும்.
இரு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தம் கைச்சாத்திடும் வைபவம் நேற்று கலதாரி ஹோட்டலில் நடைபெற்றது. இந்த வைபவத்தில் மின்சக்தி எரிசக்தி அமைச்சர் சம்பிக ரணவக்க அமைச்சின் செயலாளர் பொ எம்.எம்.சி. பேர்டிணன்டஸ், இந்திய மின்சக்தி அமைச்சின் செயலாளர் உமா சங்கர், மின்சார சபை தலைவர் விமலதர்ம உட்பட பல உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சின் செயலாளர் பேர்டிணன்டஸ்; இலங்கையின் மின்சாரத் தேவை வருடாந்தம் 8- 9 வீதத்தினால் அதிகரித்து வருகிறது. 1985 களிலும் அனல் மின் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்ட போதும் பல காரணங்களினால் அது தடைப்பட்டது.
சம்பூர் அனல் மின்நிலையத்திற்கான ஆரம்ப ஒப்பந்தம் 2006 இல் கைச்சாத்திடப்பட்டது. இதற்கு 500 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்திய மின்சக்தி அமைச்சின் செயலாளர் உமா சங்கர் கூறியதாவது;
இரு பிரதான மின்சார நிறுவனங்கள் இணைந்து சம்பூர் அனல் மின் நிலைய பணிகளை முன்னெடுக்க உள்ளன. இதற்காக பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட உள்ளன. இதனை 2016 நடுப்பகுதிக்குள் துரிதமாக பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதனை உயர் மட்ட குழு கண்காணிக்கும் இலங்கையின் மின்சாரத் தேவையை இந்த திட்டம் நிறைவு செய்யும் என்றார்.
மின்சார சபைத் தலைவர் வி. அபேவிக்ரம கூறியதாவது;
2005 இல் ஜனாதிபதி இந்தியாவுக்கு விஜயம் செய்ததையடுத்தே இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. முதற்தடவையாக மின்சார சபை வேறு நாட்டுடன் கூட்டிணைந்து இத்தகைய திட்டமொன்றை முன்னெடுக்கிறது என்றார்.
இந்திய உயர் ஸ்தானிகர் அசோக்கே காந்தா கூறியதாவது;
இந்த கூட்டுத்திட்டத்துக்கு இரு நாடுகளும் முழு ஒத்துழைப்பு வழங்குகிறது. இது இரு நாடுகளுக்குமிடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும். பொருளாதார ரீதியான ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்தும் இதற்கான பணிகள் துரிதமாக ஆரம்பிக்கப்படும். இதற்கு இந்தியா 200 மில்லியன் கடனுதவி வழங்குகிறது என்றார்.
0 commentaires :
Post a Comment