புலிகளின் ஆயுத போராட்டம் தொடர்ந்திருந்தால், புலிகள் தோற்கடிக்கப்படாமல் இருந்திருந்தால் இனப்பிரச்சனைத் தீர்வுக்கான முயற்சி துரிதப்படுத்தப்பட்டு சில வேளை தீர்வு பெறப்பட்டு தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ்திருக்கலாம் என்ற கருத்தியல் முற்றிலும் தவறானது.
எம்.எம்.எம்.ஹன்ஸீர்
விடுதலைப்புலிகளின் இராணுவ ரீதியான தோல்வியின் பின்னர் தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு தீர்வு காணும் முயற்சிகளில் அரசாங்கம் பின்னடிப்புக்களை செய்து வருவதாகவும், அது தொடர்ச்சியாக தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றது என்ற கருத்தியலானது தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடாக தமிழ் மக்களிடம் பரவலாக காணப்படுகின்றது. இக்கருத்தியல் உண்மைக்கு புறம்பானது என்று ஓதுக்கி விடமுடியாது. அதே நேரம் புலிகளின் ஆயுத போராட்டம் தொடர்ந்திருந்தால், புலிகள் தோற்கடிக்கப்படாமல் இருந்திருந்தால் இனப்பிரச்சனைத் தீர்வுக்கான முயற்சி துரிதப்படுத்தப்பட்டு சில வேளை தீர்வு பெறப்பட்டு தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ்திருக்கலாம் என்ற கருத்தியல் முற்றிலும் தவறானது.
புலிகளின் ஆயுத ரீதியான தோல்வியின் பின்புதான் தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காணும் முயற்சிகள் காத்திரமாக முன் நோக்கி நகர்வதற்கான வாய்ப்புகள் உள்ளதையும், எடுக்கப்படும் முயற்சிகள், தீர்வுகளின் ஊடாக கடந்த காலங்களை போல புலிகளின் ஆயுத போராட்டத்தை காரணம் காட்டி காலம் கடத்துவதோ, இழுத்தடிப்பு செய்ய முடியாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். ஆயுத போராட்ட காலத்தில் அரசாங்கம் புலிகளையும், புலிகள் அரசாங்கத்தையும் காரணம் காட்டி மக்களையும் சர்வதேசத்தையும் ஏமாற்றமுடிந்தது. தமிழ் பேரினவாதத்திற்கு வலுவாக சிங்கள பேரினவாதமும் ஓங்கியிருந்தது. ஒரு முனை மௌனிக்கப்பட்ட பின் மறு முனையால் தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது. ஆனால் புலிகள் ஆயுதத்தின் ஊடாக கோரிய குறுந்தேசியம் மீண்டும் வேறு வழிகளில் முயற்சிக்கப்பட்டால் “பழைய குருடி கதவை திறடி” என்ற நிலைமைதான் ஏற்படும். புலிகளின் ஆயுதப்போராட்டத்தின் மூலம் கோரியதையோ, அதற்கு சமமானதையோ கேட்பது யதார்த்தத்திற்கு புறம்பானதும் நடைமுறை சாத்தியம் அற்றதும் கூட, புலிகளின் ஆயுதப்போராட்டம் தோற்கடிக்கப்பட்டமை தமிழ் மக்களின் விமோசனத்திற்கான முதற்படி. இதனை உணர்ந்து உரிய முறையில் பயன்படுத்துவதில்தான் மக்களின் விடிவு காலம் தங்கியுள்ளது.
புலிகளின் ஆயுத முனையில் மௌனிக்கப்பட்ட தமிழ் மக்களின் கருத்து சுதந்திரமானது புலிகள் தோற்கடிக்கப்பட்டபின் விசாலமாக மீண்டு எழவில்லை. பல விவாதப்பொருட்கள் இன்னும் பரவலாக விவாதிக்கப்படாமல், ஒரு சில கட்சிகளின் கருத்தாகமட்டுமே உள்ளது. தமிழ் மக்களின் இனப்பிரச்சனை தீர்வு என்பது ஒரு கட்சியின் கொள்கையோ, முடிவோ அல்ல. அது மக்களின் உரிமைப்பிரச்சனை. வாக்களித்தவர்களின் அதிகமானோர் வாக்களித்தனர் என்பதற்காக ஒட்டுமொத்த மக்களின் அடிப்படை உரிமைப்பிரச்சினையை தீர்மானிக்கும் சக்தி கிடைத்ததாக கூற முடியாது. வாக்களிப்பு வீதம், வாக்களித்தமக்களின் அப்போதைய மனோநிலமை, அக்காலப்பகுதிக்கான சூழல், எதிர்தரப்பு பலவீனங்கள் காரணமாக அமைந்தனவே தவிர வாக்களிப்பை மாத்திரம் கொண்டும் ஒரு சமூகத்தின் சார்பான தலைவிதியை தீர்மானிக்க முடியாது.
இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களை இனப்பிரச்சனை தீர்வில் ஏமாற்றுகின்றது, காலத்தை கடத்துகின்றது என்பது ஆச்சரியப்பட கூடிய விடயமல்ல. இத்தகைய அரசாங்கத்தின் இழுத்தடிப்புகளுக்கு தமிழர் தரப்பு எவ்வாறு ராஜதந்திரமாக காய்களை நகர்த்தி தொடர்ந்து இழுத்தடிக்காத வண்ணம் முட்டுக்கட்டை போட்டு தீர்வுகான வழிக்கு கொண்டு வருகின்றது என்பதுதான் நோக்கப்படவேண்டிய விடயமாகும். ஆனால் இன்றைய நிலையில் இனப்பிரச்சனை தீர்வுக்கான இழுத்தடிப்புகளுக்கும் ஏமாற்றங்களுக்கும் வழி ஏற்படுத்திகொடுப்பதே தமிழ் கட்சிகள்தான். இதில் பெரும் பங்கு தமிழ் தேசிய கூட்டமைப்பை சார்ந்தது.
ஓவ்வொரு கட்சிக்கும் இனப்பிரச்சனை தீர்வு விடயத்தில் மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் குறைந்தபட்ச அரசியல் தீர்வு விடயத்திலாவது அனைத்து தமிழ் கட்சிகளும் ஒருமித்த கருத்துக்கு வருவது முக்கியமானது. குறைந்தபட்ச அரசியல் தீர்வு விடயத்திலாவது இணக்கம் ஏற்படா விட்டால் அது பேரின வாதத்திற்கும் இழுத்தடிப்பு, ஏமாற்றங்களுக்கும் களம் அமைத்துவிடும்.
இலங்கை அரசுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை, சர்வதேச தடைகள் போன்ற கோசங்கள் எல்லாம் தமிழ் மக்களின் பிரச்சனை தீர்வுக்கான காத்திரமான பங்களிப்பை வழங்கப்போவது இல்லை. இலங்கை அரசுக்கெதிரான போர்குற்ற விசாரனை கோசத்தை பலவீனப்படுத்தியது தமிழ் தேசிய கூட்டமைப்பு தான், எவ்வாறு எனில் கடந்த ஜனாதிபதித்தேர்தலில் முன்னால் இராணுவ தளபதி சரத்பொன்சேகாவை ஆதரித்ததன் மூலம் யுத்த கால இராணுவத் தளபதியும், இராணுவமும் போர்குற்றம் புரியவில்லை என்பதை, அவருக்கு பெற்றுக்கொடுத்த வாக்குகளின் ஊடாக TNA ஏற்றுக்கொண்டது, இராணுவதளபதியும், இராணுவமும் போர்குற்றம் புரியவில்லை என்றால் போர் குற்றம் புரிந்தது யார்? பாதுகாப்பு அமைச்சருமான ஜனாதிபதியும், பாதுகாப்பு செயலாளருமா? இலங்கைக்கு எதிரான போர் குற்ற விசாரனை கோசமானது இலங்கையை மேற்கத்திய நாடுகளிடம் மண்டியிட வைக்கும் முயற்சியே தவிர தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கான தீர்வுக்கான முயற்சி அல்ல
அமெரிக்க, மேற்கத்திய நாடுகளின் கேந்திர நலனுக்கான களமாக இலங்கை மாறி விட்டால் போர்குற்ற கோசமானது புஸ்வாணம் ஆகிவீடும். முதலாளித்துவ மேலாதிக்க, பிராந்திய ஏகாதிபத்திய போட்டியில் இலங்கை முக்கியத்துவத்திற்காகவே போர்குற்ற விசாரணை, மனித உரிமை மீறல் கோசங்களெல்லாம் எழுப்பப்படுகின்றது. இஸ்ரேல் மேற்கொள்ளாத மனித உரிமை மீறலா? அமெரிக்கா தனது நலனுக்காக இன்று வரை அதனை பாதுகாத்து வருகின்றது.
வியாபார ரீதியிலான ஒரு போராட்டத்தின் கருத்துக்களோ, செயற்பாடுகளோ மக்களின் இன்றைய தேவை அல்ல. புலிகளின் ஆயுத ரீதியான போராட்டமானது இறுதிக்கட்டத்தில் வணிகமயப்படுத்தப்படதுதான் உண்மை. புலிகளின் போராட்ட சித்தாந்தங்களான தனி ஈழம், தியாகம், அர்ப்பணிப்பு போன்ற கோட்பாடுகள் புலிகளுக்குள்ளேயே தோற்கடிக்கப்பட்டது. இறுதிக்கட்டத்தில் புலிகளின் முக்கிய தலைவர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான புலி உறுப்பினர்கள் இராணுவத்தினரிடம் சரணடைந்தமை, முள்ளிவாய்க்காலுக்கு பின்னர் இதுவரை ஒரு துப்பாக்கி சன்னமாவது வெடிக்காமை போன்றன புலிகளின் போராட்டம் உணர்வு ரீதியானது அல்ல என்பதை கட்டியம் கூறுகின்றது.
மக்களின் பலதரப்பட்ட பிரச்சனைகளை நன்கு உணர்ந்து வணிக ரீதியிலான போராட்டத்தின் குரல்களாக ஒலிப்பதை விட குறைந்த பட்ச தீர்வுக்காகவது அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்று பட வேண்டிய காலம் இது. அவ்வாறு நோக்கின் காணி, நிர்வாக அதிகாரங்களுடனான மாகாண சபை முறைமை குறைந்தபட்ச தீர்வுக்கான சிறந்த தெரிவாகும். அண்மைய டெல்லி மாநாடு போல தமிழ் கட்சிகள் மீண்டும் வார்த்தை ஜாலங்களுக்காகவோ, தென்னிலங்கை ஐயப்படும் சொற்பதங்களுக்காகவோ தங்களுக்குள் முரண்படுவதை தவிர்க்க வேண்டும். அத்துடன் தமிழ் மக்களின் பிரச்சனைகள் இலங்கை அரசாங்கத்துடன் பேசித்தீர்க்கப்பட வேண்டிய ஒன்றென்பதையும், இதில் இந்தியா உள்ளிட்ட சர்வதேசத்தின் பங்கு தங்களின் பிராந்திய நலனை தாண்டி உதவாது என்பதையும் அரசியல் கட்சிகளை தாண்டி மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதற்காக ஊடகங்கள் நடுநிலையானவர்களின் கருத்துகளுக்கும் விமர்சனங்களுக்கும் வாய்பளிக்க வேண்டும்.
கொழும்பின் இராஜதந்திர அணுகுமுறையின் முன் தமிழர் தரப்பு எப்போதும் தோல்வியை சந்தித்துள்ளது. “கல் தோன்றா காலத்துக்கு முன் தோன்றிய மூத்த குடி” என்று தம்மை புகழ்ந்துரைத்து சிங்கள மக்களை “மோட்டுச்சிஙகளவர்” என்று இகழ்ந்து உரைக்கும் ஒரு தவறான போக்கு தமிழ் மேட்டுக்குடி அரசியல் மட்டத்தில் உண்டு. “மோட்டுச்சிங்களவர்” என்ற கண்மூடித்தனமான வார்த்தையை பிரயோகிப்பவர்கள் உணரவேண்டிய உண்மை யாதெனில் ஒரு சிறிய பாக்கு நீரினையால் பிரிக்கப்படுகின்ற இந்தியாவுக்குக் கீழ் அமைந்துள்ள சிறிய தீவான இலங்கை அந்தப்பிரமாண்டமான உபகண்டத்தின் பிடியில் அகப்பட்டு கரைந்து போகாமல் 2500 ஆண்டுகளுக்கு முன்னால் தப்பி ஓடி தமது அரச பண்பாடு, பாரம் பரியங்களுடன் வாழக்கூடிய திறமை சிங்கள சமூகத்திடம் உண்டு. இந்த பிரமாண்டமான இந்தியாவால் வரலாறு தொட்டு இன்று வரை சிங்கள அரசையும் கலாச்சாரத்தையும் தோற்கடித்து தம்முடன் இணைக்க முடியவில்லை. மிகவும் இராஜதந்திரத்துடனும் புத்தி சாதித்தியத்துடனும் இந்தியாவை பல நூற்றாண்டு காலமாக கையாண்டு வருவதில் சிங்கள தலைமைகள் வெற்றி பெற்றுள்ளன அதே போன்று சர்வதேசத்தின் நாடித்துடிப்புக்கு ஏற்ப அது தனது இராஜதந்நிர பாதைகளை மாற்றியமைத்து தனக்கு பக்க பலமாக ஏதோ ஒரு சக்தியை அழைத்துச் செல்கின்றது.
அமைச்சர்கள் சம்பிக்க ரணவக்க, விமல் வீரவன்ச போன்றோர் மூலம் தமிழருக்கு எதிரான இனவாதக்கருத்துகளை வெளிப்படுத்தும் அதே வேளை அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸவித்தார, டி. யு. குணசேகர போன்றோர் மூலம் தமிழ் மக்களுக்கு ஆதரவான கருத்துக்களை வெளியிடுகின்றது. மறு பக்கம் இந்தியாவையும் மேற்கத்திய சமூகத்தையும் சமாளிக்க அவசரகால சட்டத்தை நீக்கும் அதே வேளை அச்சட்டத்தில் உள்ள முக்கிய சரத்துக்களை மறைமுகமாக பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் கொண்டுவர எத்தனிக்கின்றது.
எனவே இவ்வாறான தந்திர செயற்பாடுகள் கொண்ட சிங்கள அரச தலைமையுடன் அரசியல் ரீதியாக மோத முட்படும் தமிழ்த்தலைமைகள் தமது மக்களுக்கான குறைந்தபட்ச அரசியல் தீர்வு விடயத்திலாவது ஒன்று படாவிட்டால் கொழும்பிடம் இருந்து எதனையும் பெறமுடியாது. தமிழ் மக்களுக்கான தீர்வினை தங்க தட்டில் வைத்து தென்னிலங்கை சமூகம் தரப்போவது இல்லை. தமிழர் தரப்பிடம் காணப்படும் பலவீனங்களே இனப்பிரச்சனைத்தீர்வுக்கான பெரும் முட்டுக்கட்டைகள் ஆகும்.
இவ்வாறான நிலைமையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தொடர்ந்தும் தமிழ் மக்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற கட்சி எனும் தோற்றப்பாடு தமிழர் தரப்பின் பலவீனங்களின் ஒன்றாகவே இருக்கும். புலிகளின் நேரடி ஆதரவை பெற்று இருந்த, தமிழ் கடும் போக்காளர்களைக் கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ந்தும் தேர்தல்களில் தமிழர்கள் பகுதியில் வெல்வது தென்னிலங்கை இராஜதந்திரத்துக்கு உவப்பான விடயமே. இதற்கு மாற்றாக தமிழர் பிரச்சனையை யதார்த்தமாகவும் தமது தரப்பு பலவீனங்களை உணர்ந்து காலத்திற்கு ஏற்பபயணிக்கக்கூடிய அரசியல் தலைமைகள் தமிழ் மக்களின் இன்றைய உடனடி தேவையாக உள்ளது இன்றைய நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மாற்றீடாக வடக்கில் EPDP யும் கிழக்கில் TMVP யும் உள்ளன. ஆனால் இவ்விரு கட்சிகளும் ஆயுதக் குழுக்கள் எனும் பார்வையிலே நோக்கப்படுகின்றன. எனவே இக்கட்சிகள் தம்மிடையே சுய விமர்சனத்துடன் கட்சி கட்டமைப்பையும் மாற்றவேண்டும். படித்த யதார்த்தவாதிகளுக்கு இடம் வழங்க வேண்டும். அத்துடன் தம்மை முழுமையான ஜனநாயகக்கட்சிகள் என்று மக்களை உணரச்செய்வதிலே இவர்களின் எதிர்கால இருப்பும் தங்கியுள்ளது.
எனவே தமிழ் மக்களின் இனப்பிரச்சனை தீர்வுக்கு புதிய தலைமையின் கீழ் புது முகவரி கொடுக்க வேண்டிய காலகட்டம் மக்கள் முன் உள்ளது. தன்னாட்சி அதிகாரம், சுயாட்சி போன்ற தென்னிலங்கை விரும்பாத சொற்பதங்களை தவிர்த்து. தமது பலவீனங்களை உணர்ந்து மக்களின் நலனுக்காக குறைந்த பட்ச அரசியல் தீர்விலாவது ஒன்றுபட்டு அதனை பெற முயல வேண்டும்.
0 commentaires :
Post a Comment