9/27/2011

சிறுவர் போராளிகள் சமூகத்தில் இணைப்பு: பிரான்ஸ் மனித உரிமை அமைப்பு பாராட்டு

எல். ரி. ரி. ஈ. இயக்கத்தின் முன்னாள் சிறுவர் போராளிகளுக்கு புனர்வாழ்வு கொடுத்து, அவர்களை மீண்டும் சமுதாயத்தில் சாதாரண சிறுவர்களாக இலங்கை அரசாங்கம் இணைத்திருப்பது ஒரு பாராட்டக்கூடிய விடயமென்று பிரான்ஸ் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் பிரன்சுவா சிமேரே தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு பிள்ளைக்கும் தன்னுடைய இளம் பராயத்தை சுதந்திரமாக அனுபவிப்பதற்கான உரிமை இருக்கின்றது என்று தெரிவித்த அவர், அவர்களுக்கு கூடிய வகையில் இந்த உரிமையை அனுபவிப்பதற்கு வசதிகள் செய்து கொடுத்தல் அவசியமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இராணுவ நடவடிக்கைகளுக்காக சிறுவர்களை இராணுவ சேவையில் சேர்த்துக் கொள்வது ஒரு இராணுவக் குற்றமாக கருதப்பட்டு சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்க வேண்டுமென்றும் பிரான்சின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் பிரன்சுவா சிமேரே கூறினார்.
2007 ஆம் ஆண்டில் பாரிஸ் நகரில் நடந்த மகாநாட்டில் சிறுவர்களை போராளிகளாக பயன்படுத்துவது ஒரு தண்டனைக்குரிய குற்றமென்ற தீர்மானம் எடுக்கப்பட்டது. சிறுவர்களை போராளிகளாக சேர்த்துக் கொள்வதற்கான தடையை மீறி செயற்படும் அரசாங்கங்களுக்கும், ஆயுதக்குழுக்களுக்கு எதிராகவும் கடுமையான பொருளாதார தடைகளை விதிப்பது அவசியமென்றும் அவர் தெரிவித்தார்.
பிரான்ஸின் வெளிவிவகார அமைச்சு, பெருமளவு பணத்தை சிறுவர் போராளிகளை விடுவித்து அவர்களை சாதாரண வாழ்க் கையை ஆரம்பிப்பதற்கு உதவக்கூடிய வகையில் பல்வேறு நலன்புரித் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.
இது தொடர்பாக உகண்டாவில் தமது அரசாங்கம் மேற்கொண்ட முயற்சி நல்ல வெற்றி அளித்திருக்கிறதென்று தெரிவித்த பிரன்சுவா சிமேரே, அங்கு யுத்த முனை யில் போராடிக் கொண்டிருந்த சிறுவர்களை இப்போது தங்களால் போர் முனையில் இருந்து விடுவித்து சாதாரண வாழ்க்கைக்கு மீட்டெடுக்க முடிந்ததாக தெரிவித்தார்.
மியன்மார், கொலம்பியா, இலங்கை அல்லது கொங்கோ ஆகிய நாடுகளில் நாங்கள் மாற்று வழிகளை கையாண்டு சிறுவர் போராளிகளை சமூகத்தில் ஒன்றி ணைப்பதில் வெற்றி கண்டுள்ளதாகவும் அவர் கூறினார். இன்று உலக நாடுகளில் சுமார் 2 இலட்சத்து 50 ஆயிரம் சிறுவர் போராளிகள் இருப்பதாக ஐக்கிய நாடுகள் செய்துள்ள மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 commentaires :

Post a Comment