9/16/2011

பிரான்ஸ், பிரிட்டன் பிரதமர்கள் லிபிய தலைநகர் திரிபோலி விஜயம்

பிரான்ஸ் ஜனாதிபதி நிகொலஸ் சார்கோசி மற்றும் பிரிட்டன் பிரதமர் டேவிட் கெமரூன் ஆகியோர் கிளர்ச்சிப் படையின் கட்டுப்பாட்டில் உள்ள லிபிய தலைநகர் திரிபோலிக்கு நேற்று விஜயம் செய்தனர்.
கடும் பாதுகாப்புக்கு மத்தியில் திரிபோலி வந்தடைந்த இரு நாட்டு பிரதமர்களுக்கும் கிளர்ச்சிப்படையின் தேசிய மாற்ற கவுன்ஸில் பிரமாண்ட வரவேற்பு அளித்திருந்தது. லிபியத் தலைவர் முஅம்மர் கடாபியின் ஆட்சி லிபியாவின் பெரும்பாலான பகுதியில் இருந்து வீழ்த்தப்பட்டதன் பின்மேற்கத்தேய நாட்டு தலைவர்கள் அங்கு விஜயம் செய்யும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
திரிபோலி சென்றடைந்துள்ள பிரான்ஸ், பிரிட்டன் பிரதமர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தேசிய மாற்ற கவுன்ஸிலின் தலைவர் முஸ்தபா அப்துல் ஜலில் தெரிவித்துள்ளார். எனினும் பிரான்ஸ் பிரதமர் நிகொலஸ் சார்கோசி 160 பாதுகாப்பு வீரர்களுடனேயே லிபியா சென்றுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
திரிபோலி சென்றுள்ள இரு நாட்டு பிரதமர்களும் தேசிய மாற்ற கவுன்ஸில் தலைவர் முஸ்தபா அப்துல் ஜலீலுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இதனைத் தொடர்ந்து கிளர்ச்சியாளர்களின் தலைமையகமாக செயல்பட்ட பெங்காசிக்கு பிரிட்டன், பிரான்ஸ் பிரதமர்கள் விஜயம் செய்யவுள்ளனர். அங்குள்ள லிபர்டி சதுக்கத்தில் இருவரும் உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே தனது வட ஆபிரிக்க நாட்டு விஜயத்தை மேற்கொண்டு வரும் துருக்கி பிரதமர் தய்யிப் எரிடோகான் எகிப்து, துனீiயாவை தொடர்ந்து லிபியாவுக்கு விஜயம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போன்று எகிப்து வெளியுறவு அமைச்சர் முஹம்மத் கமாலும் திரிபோலி செல்கிறார்.
இதேவேளை, லிபியாவின் பெரும்பகுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் சிர்த், பானி வலீத், ஜூப்ரா மற்றும் சபா ஆகிய நகரங்கள் தொடர்ந்து கடாபி ஆதரவாளர்கள் வசமுள்ளது. இதில் சபா நகரில் கடாபி ஆதரவுப் படையுடன் மோதுமளவுக்கு கிளர்ச்சியாளர்களிடம் ஆயுதங்கள் இல்லை என கிளர்ச்சிப்படை குறிப்பிட்டுள்ளது. எனவே அவர்களுடன் மோதுவதற்கு ஆயுத உதவிகளை கோரி வருவதாக தேசிய மாற்ற கவுன்ஸிலின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

0 commentaires :

Post a Comment