9/08/2011

தில்லி குண்டுத் தாக்குதலில் குறைந்தது 11 பேர் பலி

இந்தியத் தலைநகர் தில்லியில்,உயர்நீதிமன்ற வளாகத்தின் வாசலில் நடந்த ஒரு குண்டுத் தாக்குதலில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டனர், 60 பேர் காயமடைந்துள்ளனர்.
நீதிமன்ற வளாகத்திற்குள் வருவோர் சோதனை செய்யப்படும் வாசலில் ஒரு சூட்கேசில் இந்த குண்டு வைக்கப்பட்டிருந்ததாக நம்பப்படுகிறது.

இந்தக் குண்டுத் தாக்குதலை தாங்களே செய்ததாக ஹர்க்கத் உல் ஜிகாத் இஸ்லமி என்ற தீவிரவாதக் குழு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியிருக்கிறது.
காலை 10.17க்கு இந்தத் தாக்குதல் நடந்தது.

அந்த மின்னஞ்சலில் இந்திய நாடாளுமன்றத் தாக்குதலில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அப்சல் குருவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படக் கூடாது என்று கூறியிருப்பதாக தெரிகிறது.
இதை மிகவும் கவனத்துடன் எடுத்துக்கொள்வதாக இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.

பிரதமர் கண்டனம்

சம்பவ இடம் பாதுகாப்பு படையினரால் சூழப்பட்டுள்ளது.
தில்லியில் நடந்த இந்தத் தாக்குதலை, தற்போது வங்கதேசம் சென்றுள்ள இந்தியப் பிரதமர் மன்மோஹன் சிங் , கண்டனம் செய்திருக்கிறார்.
கோழைகளின் செயல் என அவர் இத்தாக்குதலை வருணித்துள்ளார்
"இது ஒரு நீண்ட யுத்தம், இதில் இந்தியாவின் அனைத்து அரசியல் கட்சிகளும், மக்களும் ஒன்றுபட்டு நின்று, பயங்கரவாதம் என்ற நோயை அழிக்கவேண்டும்" என்றார் மன்மோஹன் சிங்.
தடயவியல் நிபுணர்கள் இந்த குண்டுவெடிப்பு நடந்த இடத்தை ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள்.
விசாரணைகளில் உதவக்கூடிய முக்கிய தடயங்கள் சம்பவ இடத்திலிருந்து கிடைத்திருப்பதாக அவர்கள் சொல்கின்றனர்.
தில்லி மற்றும் மும்பை நகரங்களில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இரண்டாவது தாக்குதல்

தில்லியின் மையப் பகுதியில் இந்த உயர்நீதிமன்ற வளாகம் அமைந்துள்ளது.
இந்த இடத்தில் ஒரு சில மாதங்கள் இடைவெளியில் நடந்துள்ள இரண்டாவது குண்டுவெடிப்பு இது.

மே மாதம் வெடித்திருந்தது சிறிய குண்டு. அது பீதியைக் கிளப்பியிருந்ததே ஒழிய அதில் யாரும் காயம்படவைல்லை.
மேலும் கடந்த ஜூலையில் நாட்டின் வர்த்தகத் தலைநகர் மும்பையில் தொடராக பல குண்டுகள் வெடித்து இருபது பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

சிதம்பரம் விளக்கம்

இந்த தாக்குதல் ஒரு பயங்க்ரவாத தாக்குதலெனத் தெரிவதாக நாடாளுமறத்தில் தெரிவித்த நாட்டின் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், ஆயுதக் குழுக்களிடம் இருந்து தொடர்ச்சியாக இருந்துவரும் அச்சுறுத்தல்களை சமாளிக்க உளவுத்துறை எடுத்துவரும் முயற்சிகள் பற்றி விளக்கினார்.
"தில்லி பொலிஸின் வல்லமை மேபடுத்தப்பட்டிருந்தும், அவர்கள் மிகவும் உஷாராக இருந்திருந்தும் இந்த பாதகச் செயல் நடந்துவிட்டது" என்று அவர் கூறினார்.

ஹுஜி பின்னணி

இத்தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ள ஹர்க்கதுல் ஜிஹாத் இ இஸ்லமி அமைப்பு சுருக்கமாக ஹுஜி என்று சொல்லப்படுகிறது
அல் கயீதாவுடன் தொடர்பு வைத்திருப்பதாக நம்பப்படும் இந்த அமைப்பு, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் தாக்குதல்களை நடத்தியிருப்பதாக அமெரிக்க ராஜாங்கத் துறை கூறுகிறது.
ஹைதராபாத்தில் 2007ம் ஆண்டு மசூதி ஒன்றில் நடந்த தாக்குதலையும் , அதற்கு முன்னர் 2006ல் வாரணாசியில் நடத்தப்பட்ட தாக்குதலையும் இந்த அமைப்புதான் நடத்தியது என்று அமெரிக்க ராஜாங்கத்துறை கூறுகிறது.
இந்த அமைப்பின் தலைவர் இலியாஸ் காஷ்மீரி, கடந்த ஜுன் மாதத்தில் வடமேற்கு பாகிஸ்தானில் நடத்தப்பட்ட ஒரு ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தார்.

0 commentaires :

Post a Comment