8/29/2011

தடுத்து வைக்கப்பட்டுள்ளோரை விடுவிக்க சட்ட நடவடிக்கை சாதாரண சட்டத்தின் கீழ் விசாரிக்கலாம் - அமைச்சர் வாசுதேவ சட்டமா அதிபருடன் பேசத் தீர்மானம் - நீதி அமைச்சின் செயலர்

அவசரகாலச் சட்டம் முற்றாக நீக்கப்பட்டிருக்கிறது. இந் நிலையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் நிலை என்ன? இது தொடர்பாக அமைச்சர்கள், சட்ட வல்லுனர்களுடன் நாம் கலந்துரையாடினோம்.
அவர்களுடைய கருத்துக்கள் வருமாறு: அவசரகால விதிமுறைகள் அகற்றப்பட்ட போதிலும் பயங்கரவாத செயற்பாடுகளின் கீழ் கைது செய்யப் பட்டுள்ள சந்தேக நபர்கள் விடுதலையா வதற்கு சட்டத்தில் இடமில்லை என்று சட்ட அறிஞர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் முறையான சான்றுகளுடன் கைது செய் யப்பட்டவர்களும், கிரிமினல் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களும் சாதாரண சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படும் சாத்தியம் இருப்பதாக பெரும்பாலான சட்ட அறி ஞர்கள் கருதுகின்றனர்.
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் (ஜிஹிதி) கைது செய்யப்பட்டவர்கள் தொடர்ந்தும் தடுப்புக் காவலிலேயே வைக் கப்படுவார்கள். அவர்கள் மீது தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா கூறு கிறார்.
அவசரகால சட்டத்தில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட அல்லது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக அரசாங்கம் புதிய சட்ட விதியொன்றை கொண்டு வருமா என்று கேட்டபோது அவ்வாறான ஒரு நடவடிக்கை பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று அமைச்சர் பதிலளித்தார்.
அவசரகால சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்பட மாட்டாது என்பதை வரவேற்ற அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இந்த நடவடிக்கை ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்தும் என்றும் குறிப்பிட்டார்.
அவசர கால சட்டம் நீக்கப்பட்டுள்ள நிலையில் அந்த சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று தான் கருதுவதாகவும் அவர் மேலும் கூறினார்.
எனினும் குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் சாதாரண சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.
அதேவேளை அரசியலமைப்பு விற்பன்ன ரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான ஜயதிஸ்ஸ டி கொஸ்தா கருத்துக் கூறுகை யில்; அவசர கால சட்டம் பல்வேறு வழி களில் பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த அதிகாரிகளுக்கு உதவியுள்ளது. தற்போது பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதால் அதனை நீக்கியது சரியான வழியில் எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கை எனக் குறிப்பிடுகிறார்.
கிரிமினல் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு நாட்டின் சாதாரண சட்டம் போதுமானதாகும் என்று கூறினார்.
விடுதலைப் புலிகள் இயக்கம் தற்போது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கு நிதி உதவி வழங்குபவர்களும் உதவுபவர்களும் சாதாரண சட்டத்தின் கீழேயே விசாரிக்கப்படலாம் என்று அவர் மேலும் கூறினார்.
அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் தொடர்பாக சட்ட மா அதிபருடன் பேசப்போவதாக நீதிமன்றம் சட்ட சீர்திருத்த அமைச்சின் செயலாளர் சுஹத கம்லத் கூறியுள்ளார்.
சட்டமா அதிபருடன் இவ் விடயம் தொடர்பாக கலந்தாலோசித்த பின்னர் தமது கருத்தை தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

0 commentaires :

Post a Comment