‘இருப்பிட மாற்றம் என்பது தந்திரோபாய நகர்வு’
வெற்றி அல்லது மரணம் ஏற்படும் வரை போரிடுவேன் கடாபி ஆவேசம்
யுத்த தந்திரமாக பாப் அல் அஸிஸியா வளாகத்தில் இருந்து பின்வாங்கியதாக லிபிய ஜனாதிபதி முஅம்மர் கடாபி குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கிளர்ச்சிப் படைக்கு எதிராக வெற்றி அல்லது மரணம் வரும் வரை போராடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
முஅம்மர் கடாபி ஆட்சியின் மையமாக கருதப்பட்ட பாப் அல் அஸிஸியா வளாகத்தை கிளர்ச்சிப் படை கைப்பற்றியதைத் தொடர்ந்து கடாபி ஒலிநாடா ஊடாக இந்த செய்தியை வெளியிட்டுள்ளார். லிபிய செய்மதி தொலைக்காட்சி ஊடாக முஅம்மர் கடாபியின் உரை ஒளிபரப்பப்பட்டது. எனினும் இதனூடே அவர் எங்கு இருக்கிறார் என்ற எந்த தகவலும் வெளிவரவில்லை.
நேட்டோ படை 64 தடவைகள் தாக்குதல் நடத்திய பாப் அல் அஸிஸியா வளாகத்தில் இருந்து யுத்த தந்திரமாக தாம் பின்வாங்கியதாக குறிப்பிட்டுள்ள கடாபி, திரிபோலி மக்களிடம் இருந்து சிறிது காலம் மறைந்து இருப்பதாகவும் எனினும் திரிபோலி ஆபத்தான நிலையில் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
‘ஆண்கள், பெண்கள், கோத்திரத்தினர் என அனைவரும் இணைந்து திரிபோலியில் இருந்து நயவஞ்சகர்களை வெளியேற்ற போராடுங்கள். அவர்கள் வீடுகளிலும் குடும்பங்களுடனும் ஒளிந்து கொண்டு எம் மீது போர் தொடுக்கிறார்கள். இவ்வாறு ஒளிந்து கொண்டிருப்பவர்களை காட்டிக்கொடுப்பது மக்களின் கடமையாகும்” என்று கடாபி தனது உரையில் குறிப்பிட் டுள்ளார்.
கடாபியின் குடியிருப்பு பகுதியான பாப் அல் அஸிஸியா வளாகத்தை கிளர்ச்சிப் படை நேற்று முன்தினம் கைப்பற்றியது. திரிபோலியின் புறநகரில் உள்ள இந்த வளாகம் மிகவும் பாதுகாப்பானது. இந்த வளாகத்தைச் சுற்றி கோட்டை போன்ற மதில் அமைக்கப்பட்டுள்ளது.
அதனை இடித்து தரைமட்டமாக்கி கிளர்ச்சியாளர்கள் உள்ளே புகுந்தனர். இதன்போது கடாபி ஆதரவுப் படையுடன் மோதல் ஏற்பட்டபோதும் கிளர்ச்சியாளர்கள் பெரிய அளவில் எதிர்ப்பு இல்லாமல் இந்த பகுதியை கைப்பற்றியுள்ளனர்.
இந்த வளாகத்தில் இருந்த கடாபி ஆதரவுப் படை வீரர்கள் சிலரையும் கிளர்ச்சி யாளர்களையும் கைது செய்துள்ளனர். எனினும் இங்கு முஅம்மர் கடாபியோ, அவரது குடும்பத்தினரோ அல்லது அந்த அரசின் முக்கிய பிரமுகர்கள் எவரும் சிக்கவில்லை. இந் நிலையில் இந்த வளாகத்துக்குள் கிளர்ச்சிப் படை தொடர்ந்தும் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
0 commentaires :
Post a Comment