8/31/2011

முருகன், சாந்தன், பேரறிவாளன் தூக்குத் தண்டனை இடைநிறுத்தம் ஆயுள் தண்டனையாக குறைக்க தமிழக சட்ட சபையில் ஏகமனதான தீர்மானம்

முன்னாள் இந்திய பிரதமர் ரஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை 8 வாரங்களுக்கு இடைநிறுத்தி வைக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதேவேளை இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று தமிழகச் சட்டசபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்ற ப்பட்டுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகியோரை எட்டு வாரங்களுக்குத் தூக்கிலிடக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் நேற்று இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும் தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை நிறுத்தக் கோரி தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் நாகப்பன், சத்யநாராயணன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், தூக்குத் தண்டனையை 8 வாரங்களுக்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர். மேலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆணை அனுப்பி விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டனர்.
டெல்லியிலிருந்து பிரபல வக்கீல்கள் ராம்ஜேத்மலானி, மோஹித் செளத்ரி, காலின் கோன்சாலின் ஆகியோர் வழக்கில் ஆஜராகினர்.
மூவரின் வக்கீல்களான துரைசாமி, சந்திரசேகர் ஆகியோரும் அவர்களுடன் ஆஜராகின்றனர். ம. தி. மு. க. பொதுச் செயலாளர் வைகோ, பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட வக்கீல்கள் ஆஜராகினர்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் குழு அதை விசாரணைக்கு ஏற்பதாக அறிவித்து 8 வார இடைக்காலத் தடையை அறிவித்தது. உற்சாக வெள்ளத்தில் ஸ்தம்பித்தது உயர் நீதிமன்றம்.
இதைக் கேட்டதும் வக்கீல்கள் உற்சாகக் குரல் எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் உயர் நீதிமன்ற வளாகத்தில் திரண்டிருந்த வரலாறு காணாத மிகப் பெரிய வக்கீல்கள் குழு, தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள் கூட்டமும் பூரிப்பில் மூழ்கியது. அனைவரும் பரஸ்பரம் மகிழ்ச்சி தெரிவித்து முழக்கமிட்டதால் உயர் நீதிமன்றமே ஸ்தம்பித்துப்போனது.
தமிழகம் முழுவதும் கொண்டாட்டம் தூக்குத் தண்டனை 8 வாரங்களுககு நிறுத்தி வைக்கப்பட்டமை தமிழகம் முழுவதும் காட்டுத் தீ போல பரவியது. இதையடுத்து ஆங்காங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சி முழக்கமிட்டும் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டனர்.
பொதுமக்களுக்கும் இந்த உத்தரவு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. 21 வருடமாக சிறையில் கிட்டத்தட்ட ஆயுள் தண்டனையை அனுபவித்தவர்களுக்கு தூக்குத் தண்டனை என்பது இரண்டு தண்டனை கொடுப்பதற்குச் சமம்.
இது நியாயமற்றது என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர். இதேவேளை ரஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று கோரி முதல்வர் ஜெயலலிதா நேற்று தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தார்.
இந்த தீர்மானத்தை அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஒருமனதாக ஆமோதித்து நிறைவேற்றினர்.
தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்தத் தீர்மானம் கொண்டு வரப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா நேற்று காலை சட்ட சபை கூடியதும் இந்தத் தீர்மானத்தைத் தாக்கல் செய்தார். பின்னர் அவர் பேசுகையில், மூன்று பேருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்படவுள்ளமை தமிழக மக்களை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. மக்கள், அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புக்கள் இந்தத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்று கோரி வருகின்றனர்.
எனவே, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்தத் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுமாறு குடியரசுத் தலைவரை இந்த சபை கேட்டுக் கொள்கிறது என்றார்.
இதையடுத்து அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களும் ஒருமித்த குரலில் தீர்மானத்தை ஆதரித்து அதை நிறைவேற்றினர்.
இந்தத் தீர்மானத்தை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் இந்த தீர்மானத்தை ஏற்றால் 3 பேரின் தூக்குத் தண்டனையும் இரத்தாகும் வாய்ப்புள்ளது.
முன்னதாக நேற்று முன்தினம் சட்டசபையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, மூவரையும் காப்பாற்றும் அதிகாரம் தனக்கு இல்லை என்று கூறியிருந்தார். மேலும் குடியரசுத் தலைவர்தான் அவர்களைக் காப்பாற்ற முடியும் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில், தற்போது அதிரடியாக அவர் நிறைவேற்றியுள்ள தீர்மானம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது மூவரின் விடுதலைக்காக கடுமையாக போராடி வருவோருக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

0 commentaires :

Post a Comment