8/29/2011

விசேட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம், இன்று மட்டக்களப்பில்

கடந்த ஒரு சில வாரங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையின் காரணமாக மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டு மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் அமைதியின்மை காணப்பட்டது.
இது தொடர்பில் மக்கள் மத்தியில் ஓர் தெளிவுபடுத்தலை ஏற்படுத்தும் முகமாக விசேட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இன்று 28.08.2011 மட்டக்களப்பு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சரும் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இடம்பெற்றது.
இக் கூட்டத்தில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த முதலமைச்சர் சந்திரகாந்தன், கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்தும் இயல்பு நிலை பாதிக்கப்பட வேண்டும் என்கின்ற எண்ணம் அரசிடம் ஒருபோதும் இல்லை. ஆனால் வெளிநாடுகளில் இருந்து கொண்டு உண்மைக்கு புறம்பாக செய்திகளை மக்களுக்கு இணையத்தளங்களின் ஊடாக வெளியிடுகின்ற ஒருசில மேலாதிக்கம் கொண்ட அவ்வகுப்பினருக்கு தொடர்ந்தும் கிழக்கு மாகாணத்தின் இயல்பு நிலை, கிழக்கு மக்களின் அரசியல் தலைமைத்துவம், மாகாணத்தின் அபிவிருத்தி என்பன சீர்குலைந்து பாதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே அவர்களது எதிர்பார்ப்பு. அப்போதுதான் அவர்கள் அங்கிருந்துகொண்டே தங்களது மாறுபட்ட அரசியல் வியாபாரங்களை அரங்கேற்ற முடியும்.
அதே நேரம் இவ்வாறான ஒரு சில சம்பவங்கள் இடம்பெற்றிருப்பது என்பதனை மறுப்பதற்கில்லை. இவ்வாறான சம்பவங்களில் ஈடுபட்டவர்களையும், இதற்கான மூல கர்த்தாக்களையும் அடையாளம் கண்டு அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய பொறுப்பு பொலிசாரையே சார்ந்தது. மாறாக உத்தியோக பூர்வமற்ற இணையத்தளங்கள் இளைஞர்களை மீண்டும் ஒரு முறை உசுப்பேற்றி அவர்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு தொடர்ந்தும் கொலைக்களம் அனுப்புவதற்கான ஆயத்தங்களை அவர்கள் மேற்கொண்டு விடுவார்களோ? என்ற அச்சம் எம் மத்தியில் நிலவுகின்றது.
இது தொடர்பில் குறிப்பாக கிழக்கு வாழ் இளைஞர் யுவதிகள் மற்றும் பொது மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். கடந்த முப்பது ஆண்டு காலமாக இழந்த இழப்புக்கள் அனைத்தையும் ஈடு செய்ய வேண்டிய பொறுப்பு எம்மிடமே இருக்கின்றது. எனவே இது தொடர்பில் ஆழ்ந்து சிந்தித்து எமது மாகாணத்தின் ஒட்டு மொத்த இருப்பையும் பேண வேண்டிய பொறுப்பு எம்மையே சார்ந்தது. ஆதலால் எங்கள் முன் எழுகின்ற ஒரு சில சவால்களை சிந்தித்து நிதானமாக கையாள வேண்டிய பொறுப்பும் எமக்கே உரியது. வன்முறைகள் அற்ற நியாயமான எங்களது எதிர்பார்ப்புக்களின் ஊடாக எமது மாகாணம் அடைய வேண்டிய இல்க்குகளை எட்டுவதற்கு மேற்குறித்த ஒரு சில கசப்பான சம்பவங்களை தடைக்கற்களாக நாங்கள் மாற்றி விடாமல் அவற்றையெல்லாம் சட்ட வரையறைக்குள் நின்று நிதானமான தூரநோக்கு சிந்தனையுடன் கையாண்டு எதிர்வரும் காலங்களில் எமது மாகாணத்தை கட்டியெழுப்ப நாம் முன்னின்று செயற்பட வேண்டும்.
தொடர்ந்தும் இனி வரும் காலங்களில் இது போன்ற அசம்பாவிதங்கள் இடம்பெறா வண்ணம் சமூக மட்டத் தலைவர்கள், பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்கள் விழிப்பாக இருப்பதுடன் இது தொடர்பான பூர்வாங்க சட்ட நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு தொடர்ந்தும் கிழக்கு மாகாணத்தின் ஜனநாயகமும் அமைதியுடன் கூடிய இயல்பு வாழ்வும் தொடர்ந்தும்  மிளிர்வதற்கு அனைவரும் இச்சந்தர்ப்பத்தில் திடசங்கர்ப்பம் பூண வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
இவ் விசேட கூட்டத்தில் கிழக்கு மாகாண சிரேஸ்ட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஜகத் அபே குணவர்த்தன, பாராளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மதப் பெரியார்கள், இராணுவ பாதுகாப்பு உயர் அதிகாரிகள், பொது அமைப்புக்கள் பிரதிநிதிகள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.


0 commentaires :

Post a Comment