8/29/2011

ஹசாரேயின் 12 நாள் போராட்டத்திற்கு வெற்றி: பாராளுமன்றில் தீர்மானம் நிறைவேற்றியது அரசு

பலமான லோக்பால் மசோதா வேண்டும் என வலியுறுத்தி, தொடர்ந்து 12 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த அன்னா ஹசாரேக்கு, வெற்றி கிடைத்துள்ளது. லோக்பால் மசோதா தொடர்பான அவரது கோரிக்கைகள் நேற்று முன்தினம் பாராளுமன்றின் இரு சபைகளிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு, தீர்மானமாக நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து ஹசாரே நேற்று காலை தன் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.
பலமான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்கும் அன்னா ஹசாரே, மத்திய அரசுக்கு மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார். இது குறித்து நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிக்கை அளித்தபின் விவாதம் நடத்துவது என, மத்திய அரசு முடிவெடுத்தது.
இதை, பா.ஜ. ஏற்றுக் கொண்டதையடுத்து பாராளுமன்றத்தின் சபைகளிலும், பலமான லோக்பால் விவகாரம் குறித்து, நேற்று அனல் பறக்கும் விவாதம் நடந்தது. பெரும்பாலான கட்சிகள், பலமான லோக்பால் மசோதா, பாராளுமன்றில் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தின. ஹசாரேயின் கோரிக்கைகளுக்கும் ஆதரவு தெரிவித்தன.
மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பா.ஜ.மூத்த தலைவரும், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவருமான அருண் ஜெட்லியுடன் நேற்று முன்தினம் அவசர ஆலோசனை நடத்தினார். பார்லிமென்டில் நடைபெறும் விவாதத்தின் இறுதியில் தீர்மானம் நிறைவேற்றுவது என்றும் முடிவெடுக்கப்பட்டது. இது குறித்த தகவல், ஹசாரே தரப்புக்கும் தெரிவிக்கப்பட்டது.
தீர்மானத்தை வாசித்த, நிதி அமைச்சர் பிரணாப் பேசியதாவது: ஹசாரேயின் மூன்று கோரிக்கைகளை இந்த சபை ஏற்கிறது. பலமான சட்ட நடைமுறைகளை கொண்டு வந்தாலும், ஊழலை அடியோடு ஒழிக்க முடியாது. 40 ஆண்டுகளாக, லோக்பால் மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை.
இதில் அரசுக்கும் பொறுப்பு உள்ளது. தற்போதைய நடைமுறையில் மாற்றம் தேவைப்படுகிறது. தற்போது நிறைவேற்றப்படும் இந்த தீர்மானம், அடுத்த கட்டமாக பாராளுமன்ற நிலைக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.
இதைத் தொடர்ந்து ஹசாரேயின் மூன்று அம்ச கோரிக்கைகளை ஏற்பது குறித்த தீர்மானம் இரு சபைகளிலும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. குரல் வாக்கெடுப்பு இல்லாமல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது உறுப்பினர்கள் மேசையைத் தட்டி ஆரவாரம் செய்தனர். இந்த தீர்மானம் குறித்த விவரம், லோக்சபா சபாநாயகர் மீரா குமார் மூலம், அன்னா ஹசாரேயிடம் தெரிவிக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
பலமான லோக்பால் மசோதாவுக்காக தொடர்ந்து 12 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த ஹசாரேயின் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்தது. மசோதா தொடர்பாக அவர் முன்வைத்த கோரிக்கைகள் பாராளுமன்றில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டதன் மூலம் ஊழலுக்கு எதிரான அவரது போராட்டத்திற்கு பலன் கிடைத்துள்ளது.

0 commentaires :

Post a Comment