பேராசிரியர் மூக்கையா உட்பட ஐவர் குழு நாளை விஜயம்
நாடு முழுவதும் 96 % வாக்காளர் அட்டைகள் விநியோகம்
யாழ். குடாநாட்டில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலைக் பார்வையிடும் பணியில் சிரேஷ்ட சிவில் சமூகக் குழுவொன்றை ஈடுபடுத்துவதற்கு பெப்ரல் அமைப்பு முடிவு செய்துள்ளது.
பேராசிரியர் எம். எஸ். மூக்கைய்யா, விமல் பெர்னாண்டோ, ஜோவில்லியம், உபெக்ஸி பெர்னாண்டோ, ராஜா செனவிரட்ன ஆகிய ஐவரை உள்ளடக்கிய இந்த சிரேஷ்ட சிவில் சமூகக் குழு நாளை 19ம் திகதி யாழ் குடாநாட்டுக்குப் பயணமாகும் என்று பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி நேற்றுத் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும், ஜே. வி. பி.யினரும் தெரிவிக்கின்ற புகார்களின் அடிப்படையிலேயே யாழ் குடா நாட்டில் சிரேஷ்ட சிவில் சமூக குழுவை தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளோம். நாளை யாழ். குடாநாட்டுக்குப் பயணமாகும்.
இக்குழுவினர் அங்குள்ள சகல பிரதேசங்களுக்கும் நேரில் சென்று நிலைமைகளை அவதானிப்பர். தேர்தல் தினத்தன்று தேர்தல் கண்காணிப்பு பணியில் இவர்கள் ஈடுபடுவர். இக்குழுவினர் எதிர்வரும் 24ம் திகதி கொழும்பு திரும்புவர். அதனைத் தொடர்ந்து யாழ். குடாநாட்டு உள்ளூராட்சி தேர்தல் அவதானிப்பு தொடர்பாக அறிக்கை கையளிப்பர்.
அதேநேரம் யாழ். குடா நாட்டிலும், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள 19 உள்ளூராட்சி மன்றங்களுக்கு எதிர்வரும் 24ம் திகதி தேர்தல் நடக்கவிருக்கின்றது.
இத்தேர்தலுக்கென யாழ். குடா நாட்டில் 459 வாக்கு சாவடிகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் 95 வாக்குசாவடிகளும், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆறு வாக்குச்சாவடிகளும் அமைக்கப்படவிருக்கின்றன.
இந்த 560 வாக்குச் சாவடிகளிலும் எமது பிரதிநிதிகளும் தேர்தல் தினத்தன்று வாக்குச் சாவடிகளினுள் இருந்தபடி கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவர்.
இப்பணிக்கென சுமார் 600 பிரதிநிதிகளுக்குப் பயிற்சி அளிக்கப்படுகின் றன. இதேவேளை ஒரு உள்ளூராட்சி சபைக்கு ஒரு வாகன அடிப்படையில் ஒரு வாகனங்களில் நடமாடும் கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம்பெறும் என்றார்.
வாக்காளர் அட்டைகள் 96 சதவிகிதம் விநியோகம்
உள்ளூராட்சி சபை தேர்தல்களுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளில் 96 சதவீதம் இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் செயலக அலுவலகம் தெரிவித்துள்ளது.
தபாலில் இதுவரை வாக்காளர் அட்டைகள் கிடைக்காத வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் தமது அடையாளத்தை உறுதி செய்து தமக்குரிய தபால் நிலையங்களின் அவற்றை பெற்றுக்கொள்ள முடியும் என்று தேர்தல் செயலக அலுவலக அதிகாரியொருவர் கூறினார்.
வாக்காளர் அட்டை கிடைக்கப்பெறாத வர்கள் எதிர்வரும் 23ஆம் திகதி வரை தபால் நிலையங்களில் இருந்து வாக்காளர் அட்டைகள் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் கூறினார்.
875 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 65 உள்ளூராட்சி சபைகளில் நடைபெறும் மேற்படி தேர்தலில் வாக்களிக்க 26 இலட்சத்து 30 ஆயிரத்து 985 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
0 commentaires :
Post a Comment