7/15/2011

தமிழ் மக்களின் ஆதரவினை கூட்டமைப்பினர் துஷ்பிரயோகம் பெற்ற வெற்றிகளையும் அழிவுக்கே பயன்படுத்தினர் அமைச்சர் டக்ளஸ்

தமிழ் மக்கள் ஓரணியில் நின்று ஒற்றுமையின் பலத்தை உலகுக்கு காட்ட வேண்டும் என்று கூறியே காலா காலமாக பெற்று வந்த அரசியல் பலத்தை வைத்து சுயலாப அரசியல் தலைமைகள் இதுவரை எதைச் சாதித்திருக்கின்றார்கள் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பினார்.
பெற்றிருந்த அரசியல் பலத்தை அழிவுகளுக்காக அன்றி ஆக்கத்தை நோக்கி பயன்படுத்தியிருக்கவில்லையே என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் கூறியுள்ளார்.
நேற்று திருநெல்வேலி பாற்பண்ணை வீதியில் அமைந்துள்ள கம்பர் சனசமூக நிலைய மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இக்கேள்வியை எழுப்பியுள்ளார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர்ந்தும் தெரிவிக்கையில் ;
தமிழ் மக்களின் ஒற்றுமை என்பது அவசியமானது. ஆனாலும் அதை தேர்தல் காலங்களில் மட்டும் வாக்குகளை அபகரிப்பதற்கான வெற்றுக்கோசமாக பயன்படுத்துவதையே நான் வெறுக்கிறேன்.
77 இல் ஒற்றுமையை உலகுக்கு காட்டுங்கள் என்றும் தனிநாட்டு கோரிக்கைக்கு ஆணை வழங்குங்கள் என்றும் மக்களிடம் கோரியிருந்தார்கள். தமிழ் மக்களும் இவர்களை நம்பித்தான் வாக்களித்திரு ந்தார்கள்.
இவர்களால் நரம்புகள் முறுக்கேற்றப்பட்டு உசுப்பிவிடப்பட்ட இளைஞர் யுவதிகளும் அப்பாவி மக்களும் நடுத் தெருவில் நின்ற போது இவர்கள் மட்டும் தமிழ் நாட்டிற்கு ஓடிச் சென்று தனி வீடுகள் பெற்று தமது குடும்பங்களோடு ஆடம்பர வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இது போலவே அதற்குப் பின்னரும் கிடைத்திருந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் சுயலாப அரசியல் தலைமைகள் வழங்கிய தேர்தல்கால வாக்குறுதிகளை நம்பி தமிழ் மக்கள் தமது ஒற்றுமையின் பலத்தைக் காட்டி ஏமாந்திருக்கிறார்கள்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்டிருந்த அரசியல் தீர்வினை அரசாங்கத்தோடு கலந்து பேசி தமிழ் மக்களின் அரசியலுரிமை பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு மாறாக அன்றைய எதிர்க் கட்சிகளோடு இணைந்து நின்று அந்த தீர்வுத் திட்டத்தை தெருவில் இறங்கி எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தும் நாடாளுமன்றத்தில் வைத்து எரித்து கொளுத்தியும் தமிழ் மக்களுக்கு வரலாற்று துரோகமிழைத்தனர்.
அதைத் தொடர்ந்து முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக் காலத்திலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஆட்சிக்கு வந்திருந்த போதும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தமிழ் மக்களிடமிருந்து பெற்ற அரசியல் பலத்தை அழிவுகளுக்காக அன்றி எமது மக்களின் அரசியலுரிமைக்காக ஒரு போதும் பயன்படுத்த விரும்பியிருக்கவில்லை.
2004 இல் தாம் பெற்றிருந்த 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற பலத்தை வைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எமது மக்களை அழிவுகளில் இருந்து காப்பாற்றியிருக்கலாம். எமது அரசியலுரிமை பிரச்சினைக்கு தீர்வு கண்டிருக்கலாம். அல்லது இவர்கள் கூறுவது போல் அந்த பலத்தை வைத்து சர்வதேச சமூகத்தின் ஊடாக அன்றே எமது மக்களின் தலைவிதியை மாற்றியமைத்திருக்கலாம்.
ஆனாலும் அதற்கு மாறாக தாம் பெற்ற நாடாளுமன்ற பலத்தை தமிழ் மக்களை முள்ளிவாய்க்கால் வரை இட்டு சென்று அழிவுகளையும் அவலங்களையும் மட்டுமே அவர்கள் மீது சுமத்துவதற்கு பிரதான காரணியாக தமிழ் தேசிய கூட்டமைப்பினரே இருந்திருக்கிறார்கள் என்று அமைச்சர் மேலும் கூறினார்.

0 commentaires :

Post a Comment