7/05/2011

தாய்லாந்து பொதுத் தேர்தல்: முன்னாள் பிரதமர் தக்ஷினின் தங்கை அமோக வெற்றி முதல் பெண் பிரதமராக பதவி ஏற்கிறார்

தாய்லாந்து பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சியான ப்யூதாய் கட்சி அமோக
வெற்றியீட்டியுள்ளது. இக்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமர் தக்ஷின் சினவாத்திராவின் சகோதரியுமான யிங்லக் சினவாத்திரா தாய்லாந்தின் முதல் பெண் பிரதமராக தேர்வு செய்யப்படவுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுத் தேர்தலில் மொத்தமுள்ள 500 இடங்களில் 264 இடங்களை ப்யூதாய் கட்சி கைப்பற்றியுள்ளது.
ஆளும் ஜனநாயக கட்சிக்கு 160 இடங்கள் கிடைத்துள்ளன. இதனைத் தொடர்ந்து தற்போதைய பிரதமர் அபிசிட் விஜாஜிவா யிங்லக் சினவாத்திராவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதோடு தனது கட்சி தலைமை பதவியில் இருந்தும் விலகிக் கொண்டுள்ளார். அத்துடன் இந்த தேர்தல் முடிவை அந்நாட்டு இராணுவம் ஏற்றுக்கொண்டுள்ளது.
44 வயதான யிங்லக் சினவாத்திரா தாய்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமரும், தொலைத் தொடர்பு துறையின் கோடீஸ்வரருமான தக்ஷின் சினவாத்திராவின் தங்கை ஆவார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற இராணுவ புரட்சியின் போது பிரதமராக இருந்த தக்ஷின், தாய்லாந்தில் இருந்து தப்பியோடி டுபாயில் தஞ்சமடைந்தார். அவர் மீது பல ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
தற்போது நடந்து முடிந்த தேர்தலில் அவருடைய தங்கை யிங்லக் வெற்றி பெற்றுள்ளதால் தக்ஷின் மீண்டும் தாய்லாந்திற்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, நான்கு சிறிய கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து ஆட்சி அமைக்கவுள்ளதாக யிங்லக் சினவாத்திரா தெரிவித்துள்ளார். அத்துடன் நாட்டின் உடனடித் தேவையாக மீள் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார். யிங்லக் சினவாத்திராவுக்கு இதற்கு முன்னர் அரசியல் அனுபவம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 commentaires :

Post a Comment