7/12/2011

நெஞ்சில் மூண்ட தீயை நினைவில் இறக்கிய நாள் —எஸ்.எம்.எம்.பஷீர்

எவனொருவன் தானே சரணடையாமல், மற்றவர்களின் இச்சைப்படி செயல்படாமல், எதனையும் சோதனைக்குட்படுத்தி அறிவு வெளிச்சத்தில் அலசி ஏற்கின்றானோ அவனே சுதந்திர மனிதன்.”– அம்பேத்கார்
தோழர் யோகரத்தினத்தின் “தீண்டாமை கொடுமைகளும் தீமூண்ட நாட்களும்” நூல் வெளியீடு -ஒரு பார்வை
பிரான்சிலுள்ள லா சப்பால் என்னுமிடத்தில் சென்ற ஞாயிற்றுக்கிழமை (3.07.2011) இடம்பெற்ற தோழர் யோகரத்தினம் எழுதிய “தீண்டாமை கொடுமைகளும் தீமூண்ட நாட்களும்” எனும் நூல் வெளியீட்டு விழா இலங்கையின் இடதுசாரி மூத்த தலைவர்களில் ஒருவரும் இன்றைய இலங்கை அரசின் தேசிய மொழிகள் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சருமான தோழர் வாசுதேவா நாணயக்காரா சிறப்பு அதிதியாக கலந்துகொண்ட நிலையில் சிறப்பாக மூவின மக்களின் பிரசன்னத்துடன் வெற்றிகரமாக நடைபெற்றது என்பது வெறுமனே ஒரு நூல் வெளியீட்டு நிகழ்வு என்பதற்கப்பால் ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தின் குரலாக ஒரு போராளி தான் வாழ்ந்த காலத்தை வரலாற்று பதிவாக்கிய ஒரு முக்கிய வரலாற்று நிகழ்வாக பதிவு செய்யப்பட வேண்டும்.
இன்றுவரை தான் நம்புகின்ற “நாம் இலங்கையர்” என்ற பொதுமைக் கோட்பாட்டில் நம்பிக்கை கொண்ட தோழர் யோகரத்தினம் தான் இக்கோட்பாட்டில் தன்னையும் இணைத்து தனக்கு ஆத்மார்த்த ரீதியாக உறுதுணையாகவிருந்து புலிகளால் கொல்லப்பட்ட தனது அருமை நண்பரான சட்டத்தரணி வினோதனையும் அவர் இந் நிகழ்வில் கண்ணீர் மல்கி நினைவு கூர்ந்ததும் இந் நிகழ்வுக்கு ஒரு உணர்வுபூர்வமான ஒரு முகத்தையும் வழங்கியது.
இன்று புலம் பெயர் சூழலில் காணப்படும் நாடுகடந்த தமீழீழ தமாஷா மற்றும் பயங்கரவாத அழிப்பு போரின் விளைவுகளால் அநியாயமாக உயிரிழந்த மக்கள் தொடர்பில் இலங்கை அரசை சர்வதேச கூண்டில் நிறுத்தி தமிழீழம் பெற்றுவிடலாம் என்று போரின் போது மக்களை வன்னியை விட்டு வெளியேறாது தடுத்த தமிழ் வீரம் பேசிய புலி சார்பு புலம் பெயர் தமிழ் சமூகம் இப்போது அதே மக்களை அரசு கொன்றதாக கூறும் குற்றச்சாட்டுக்கள் சர்வதேச மட்டத்தில் குறிப்பாக மேற்கு நாடுகளில் தீவிரம் பெற்று வரும் நிலையில் இலங்கை அரசின் அமைச்சர் ஒருவரை அழைத்து ஒரு சமூகத்தின் மிக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வொன்றினை நடத்தியிருப்பது ஒரு பாரிய சவாலாகவே தலித் சமூக முன்னணிக்கு இருந்திருக்கிறது.
இந்நிகழ்வு நடக்காது என்று ஆரூடம் பலர் கூற நடக்கக்கூடாது என்று பலர் பிரார்த்தனை செய்ததாகவும் அறியமுடிகிறது. எவ்வாறெனினும் இக்கூட்டத்தினை வெற்றிகரமாக நடத்தி முடித்தியிருக்கிரார்கள் சோபா சக்தி சொன்னதுபோல் அதுவும் லா சப்பாலில் நடத்தி முடித்திருக்கிறார்கள். உண்மைதான் பிரான்சிலே புலிகள் துப்பாக்கி தூக்கி ஏந்தி சுட்ட வீதிகளிலே மாற்று கருத்தாளர்களை அடித்து நொறுக்கிய இறுதில் புலி தோற்ற பின்பும் தமிழ் செல்வனுக்கு சிலை வைத்த நாட்டில் துணிச்சலாக இலங்கையின் ஒரு பிரதான ஒரு சிங்கள அமைச்சரை அதிதியாக்கி இந்நிகழ்வினை நடத்தி முடித்திருக்கிறார்கள் தலித் முன்னணியினர். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட கருத்துரையாளர்கள் சிலர் நூல் விமர்சனத்துக்கப்பால் தமது அரசியல் கருத்துக்களை முன்வைத்ததும் புலம் பெயர் சமூக இலக்கிய பரப்பில் தலித் சமூகத்தில் மிக நன்கு அறியப்பட்ட அருந்ததி ஆசிரியர் இந்நிகழ்வில் கலந்து கொள்ளாமல் போனமை ஏமாற்றத்தை தரவில்லை என்று என்னால் சொல்லமுடியாதுள்ளது.
இந் நிகழ்வில் கலந்து கொள்வதன் மூலம் இந்நிகழ்வுக்கு மிகுந்த முக்கியத்துவத்தை அளித்துவிடக்கூடாது என்று சிலர் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் உட்பட செயற்பட்டதாக சொல்லப்படும் பின்னணியில் இந்நிகழ்வு மூலம் தோழர் யோகரத்தினம் ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் தமிழர்களுக்குள் உள்ள ஆதிக்க சாதியின் அடக்குமுறைக்குள்ளான இன்னுமொரு தமிழ் சிறுபான்மை சமூகத்தின் வரலாற்றை துணிச்சலுடன் வெளிக்கொண்டு வந்ததன் மூலம் தோழர் யோகரத்தினம் வரலாற்றில் வாழும் ஒரு மனிதராக தன்னை நிலை நிறுத்திக்கொண்டுள்ளார்.
http://www.bazeerlanka.com/

0 commentaires :

Post a Comment