7/22/2011

சர்வதேசத்தின் தீர்வு நமக்கு தேவையில்லை எமது பிரச்சினைகளை நாமே தீர்க்க முடியும்

சர்வதேசத்தின் தீர்வு நமக்குத் தேவையில்லை நமது பிரச்சினையை நாமே தீர்த்துக்கொள்ள முடியும் என பிரதமர் டி.எம். ஜயரட்ன பூநகரியில் தெரிவித்தார்.
தமிழ், சிங்கள மக்கள் தமக்கிடையில் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டால் இரு சமூகங்களுக்கிடையிலுள்ள இடைவெளி குறைந்து ஒற்றுமை வலுப்பெறும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.
கிளிநொச்சி பூநகரி பகுதிகளில் நேற்று முன்தினம் 20 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர்கள் முக்கியஸ்தர்களுடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட இப்பேரணிக் கூட்டங்களில் பிரதமர் மேலும் தெரிவிக்கையில்;
ஜனாதிபதி சகல இன, மதங்களுக்கும் மதிப்பளிக்கின்றவர். அனைவரும் கெளரவத்துடன் வாழ வேண்டும் என்று விரும்புகின்றவர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வடபகுதி அபிவிருத்தியில் அதிக அக்கறை செலுத்தி வருகிறார். வடக்கு மக்களின் வாழ்வாதாரமான விவசாய, மீன்பிடி கைத்தொழில் நடவடிக்கைகளுக்குத் தேவையான உபகரணங்களை வழங்கி அவர்களின் மேம்பாட்டுக்கு உந்துதலளிக்கின்றார். இவ்வாறு நாம் செயற்படும் போது உலகிலேயே முன்னணி நாடாக இலங்கையைக் கட்டியெழுப்ப முடியும்.
எமது எழுச்சியைத் தடை செய்வதற்கு சில சர்வதேச நாடுகளும் அமைப்புக்களும் முயற்சிக்கின்றன. நாம் ஒன்றிணைந்து செயற்படுவது முக்கியம்.
எமக்கு ஒரு பலமான அரசாங்கம் உள்ளது. பெருமளவிலான பாராளுமன்ற, மாகாண, பிரதேச அதிகாரங்கள் அரசாங்கத்திடமே உள்ளதால் உள்ளூராட்சி சபைகளும் அரசாங்கத்திடம் இருந்தால் உச்ச நன்மையை அடைய முடியும்.
பாராளுமன்றத்தினதும் மாகாண சபைகளினதும் சட்டங்களை அங்கீகரிக்கின்ற பலம் ஜனாதிபதிக்கு உண்டு என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.

0 commentaires :

Post a Comment