இலங்கைத் திருநாட்டின் இதயமாக விளங்கும் ஊவா மாகாணத்தின் மத்தியில் அமைந்துள்ள பிரதேசத்தின் மேற்காக அமைந்துள்ள தம்பானைக் கிராமத்தில் வசிக்கும் ஆதிவாசிகளின் வரலாறு அனைவரின் மனங்களையும் கவரும் சுவாரசியமான அம்சங்கொண்டது.
இவர்களின் பாரம்பரியத்தின் ஆரம்ப சரித்திரம் வரலாற்றுக் கதைகளிலும், பூர்வீக விவரணங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் வசித்த இயக்கர் கோத்திரத்தைச் சேர்ந்த குவெனி என்னும் பெண்ணோடு இந்நாட்டுக்கு வருகை தந்த விஜயன் என்னும் அரச குமாரன் செய்து கொண்ட விவாகத்தின் பலனாக அவர்களின் சந்ததியின் மூலம் இப்பாரம்பரியம் ஆரம்பமானதாக சொல்லப்பட்டாலும், தொல்பொருள் சம்பந்தப்பட்ட தகவல்களின்படி மேற்குறிப்பிட்ட பாரம்பரியம் இலட்சக்கணக்கான வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த பலாங்கொடை மனித பாரம்பரியத்தோடு தொடர்புடையதென கண்டுபிடிக்கப்பட்டுள்ளது உண்மையாகின்றது.
பெரும் வேடர்களின் ஊராக கருதப்படும் விந்தனை போன்று அனுராதபுரம், பொலநறுவை ஆகிய மாவட்டங்களில் மட்டுமல்லாமல் கிழக்கு மாகாணத்தில் வாகரை, பனிச்சங்கேணி, பால்சேனை, வெருகல் போன்ற கரையோரப் பிரதேசங்களிலும் வேடுவர்கள் வாழ்ந்த வரலாறுகளும் சான்று பகர்கின்றன.
இப்பொழுதும் தம்பானை, சோனிகலை, திபுலாகலை, ரதுகலை, பெல்லேபெத்த, வாகரை, மட்டக்களப்பு பிரதேசங்களிலும் இவர்களின் குடியிருப்புக்கள் காணப்படுகின்றன. ஓர் எளிய வாழ்வு முறைக்கு உரிமைகோரும் இவ்வேடர்களின் மொழி மிகவும் சுவையானது.
ஒரு மட்டுப்படுத்தப்பட்ட வசனக் கோவைக்கு உள்ளடக்கிய இம்மொழி அவர்களுக்குரித்தான ஒரு மொழியாகும். தன்னையும் அதேபோல் மற்றவர்களையும் அழைக்கும்போது முதற் பெயருடன் ‘அத்தே’ எனும் கெளரவத்தையளிக்கும் சொல்லை உபயோகிப்பது விஷேடத்தன்மையாகும்.
பின்வரும் வேடுவமொழியும் அதன் தமிழ் அர்த்தங்களும்,
யானை - பொடகதா
முயல் - பொக்கி
மரை - கங்குனா
தண்ணீர் - தியராச்சா
பறவை - வப்பி
தாய் - அம்மி லாத்தோ
தகப்பன் - அப்பி லாத்தோ
சோறு - தெபட்டுள்ளான் தென
இவ்வாறு வாழும் இவர்களிடம் மிகவும் இறை பற்றுதலும் உண்டு. இயக்கர் குலத்தைச் சேர்ந்த இப்பாரம்பரியம் தமது இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்வது வனாந்திரங்களோடு மட்டுமல்ல மலைக்குன்றுகள், சோலைகள், கற்கள், விருட்சங்கள் ஆகியவற்றை ஆட்கொண்ட மஹா ஆயுள்பலம் கொண்ட பேய்கள், (வேதாளங்கள்) உடனாகும்.
தனது பரம்பரையை சேர்ந்தவர்கள் இறப்புக்குப் பிறகு அவர்கள் பேய்களாக நடமாடுவதாக (தமது தெய்வங்களாக) சந்தேகமின்றி நம்புகின்றார்கள்.
முன்னைய தலைவர் திசாஹாமி |
இவ்வாறு கூறப்படும் பேய்களுள் கந்தே முல்பொலவன்னியா, களுபண்டார தெய்வம், இதிகொல்லைப் பேய்கள், எல்லை சார்ந்த பேய்கள், கற்களைச் சார்ந்த பேய்கள், பிரதானவைகளாகும். பேய்கள், வேதாளங்கள், தெய்வங்கள் இராட்சதங்கள், நாச்சிமார்கள், கிரிஅம்மாக்கள் என பூஜிக்கப்படுபவை இறந்து போன ஆத்மாக்களாகும்.
முன்பு பூரணமான வேட்டையில் ஈடுபட்டிருந்த ஓர் இனமாக இவர்கள் இருந்தனர். இயற்கைச் சூழலுக்கு அடிபணிந்தவர்களாக அதை விரும்பியவர்களாகவும் இவர்களைக் காணமுடியும்.
அம்பு, ஈட்டி மூலம் மிருகங்களை வேட்டையாடுவது உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மட்டுமே ஆகும். ஆயினும் ஊனமுற்ற, கர்ப்பமாகிய மிருகங்களையோ, தண்ணீர் அருந்தும் அல்லது புல் தின்னும் மிருகங்களையோ, அதன் குட்டிகளையோ ஒருபோதும் வேட்டையாடவில்லை. வேட்டையாட அனுமதிப்பதும் இல்லை.
தம் இனத்தைச் சேர்ந்த இறந்தவர்களுக்கு நேர்த்தியாக கொல்லப்படும் மிருகங்களின் சுட்ட இறைச்சியை, காயவைத்த இறைச்சியை கொண்டு பூஜை செய்தபின் ஆசனபங்கு, வைத்தியர் பங்கு, தலைவர் பங்கு என (இறைச்சி) வெவ்வேறாக பிரிக்கப்பட்டு அவைகளை கிராமத்திற்கு கொண்டுபோய் பிரித்துக்கொடுத்தும் அளவுக்கு அவர்கள் உலோபித்தனம் அற்றவர்களாக இருந்தார்கள்.
இவர்களுக்கு மிகவும் பிடித்த சுவையான உணவு தேனில் இடப்பட்ட வேட்டையாடிய இறைச்சியாகும். தேன் போலவே குளவித்தேனும் வேடுவர் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட மிகச் சுவையான போசணை மிகுந்த ஓர் மருத்துவ குணம் கொண்ட உணவாகும். இவர்களின் மிக விருப்பமான உணவாகக் கருதப்படும் இது இறைச்சிபோல் வேறு சில கனி வகைகளைப் பதனிட்டு வைத்துக் கொள்வதற்கு உபயோகப்படும். தேன் எடுக்கச் செல்வது ‘பெனி பெதியாமய்’ செல்லும் நேரம் ஆகும். ‘அனுதடயாமய’ பயணம் குளவிகள் சென்ற பாதையில் செல்வதாகும்.
காவிய இலக்கியம் இவர்களுக்கான ஓர் தனி இடத்தைத் தருகிறது. வேட்டை கீதம், காதல் கீதம், சோககீதம், கொலு கீதம் என வகைப்படுத்த முடியும். தனியே அல்லது ஜோடியாக பாடப்படும் இக்கீதங்களில் ததனத தந்தன ததினானே தெனதெதினானே தெதினானே’ என்னும் தாளங்கள் பாவிக்கப்படுவது வழமையாகும். கற்குகைகளில் உருவங்களின் மூலம் எழுத்துக்கள் குறிக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள வசனப் பிரயோக கீத இலக்கியத்தை நோய்க்கு பரிகாரமாக வழங்க அனுகூலமாக இருந்தார்கள் என்பதனை ஊகிக்க முடிகின்றது.
இவ்வாறான காடுகளையும் மேடுகளையும் அனுபவ வாயிலாகக் கற்றுணர்ந்த மூதாதை வேடுவர்களின் தலைவரான ஊருவரிக்கே வன்னிய (லெத்தோ) தமது உறவுகளைத் தேடிச் சேர்க்கும் பணி பற்றியும் விவரித்தார். தம்மையும் தமது இனத்தினையும் பற்றி இத்தாலிய தேசத்தில் அல்பெங்கா நூலகத்தில் ‘வேடர்கள்’ என்ற புத்தகத்தைப் படித்து அறிந்து பின்னர் எம்மைத் தேடிவந்து எம்முடன் நீண்டகாலமாக வாழ்ந்து தமது திருமணத்தையும் எமது கானகத்தில் நடாத்தியவர் தான் இத்தாலியரான கொரிசியோ கொருடிரோ என்பவராவார்.
இந்நிலையில் அவரது துணைவியாரது அன்பான வழிகாட்டுதல் இம்மிங்டில்பினே என்பதும் அவரது துணைவர்களதும் இணைந்து எமது இனத்தவர்களைத் தேடும் பணியில் பயணிக்கும்போது ஆலங்குளம் பாடசாலை அதிபராக இருந்த இரமேஷ் கலைச் செல்வன் என்பவரைச் சந்தித்தோம்.
அப்போது எம் உறவுகள் பற்றிய தகவல்களைப் பெற்றோம். அதனூடாக புதிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வேடுவத் தலைவர் தெரிவித்தார்.
நடந்து முடிந்த யுத்தத்தின் பின்னர் தமது உறவுகளைத் தேடிச் சேர்க்கும் நடவடிக்கையின் ஒரு படியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கறளின் ஆசிர்வாதம் பெற்றோம். அவரது ஆலோசணைகளுக்குத் தலைவணங்கி அவ்வழி செயற்பட்டு எம்மக்களை ஒன்றிணைத்து புதியதோர் அத்தியாயத்தில் கால் பதிக்க திடசங்கற்பம் பூண்டுள்ளதாக வேடுவத் தலைவர் கூறினார். இது தொடர்பான மாநாடு எதிர்வரும் 30, 31 திகதிகளில் வாகரையில் ஜனாதிபதியின் பங்கேற்புடன் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
0 commentaires :
Post a Comment