7/22/2011

யாழ். குடா: 36 பாடசாலைகளில் புதிய கட்டடங்கள் ஜனாதிபதியால் திறப்பு இலங்கை வரலாற்றில் முதற்தடவை; ஒரு கோடி 30 இலட்சம் ரூபா செலவு

யாழ். குடா நாட்டில் வரலாற்றில் முதற் தடவையாக 36 பாடசாலைகளின் கட்டிடங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நேற்று முன்தினம் திறந்து வைக்கப்பட்டன.
வட மாகாண மக்களின் கல்வித்துறை மேம்பாட்டை கருத்திற் கொண்டு ஒரு கோடி 30 இலட்சம் ரூபா இந்த திட்டத்திற்கென செலவிடப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் உத்தரவின் பேரில் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், முக்கிய அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு நேற்று முன்தினம் காலை 10 மணியளவில் ஒரே நேரத்தில் பாடசாலை கட்டிடங்களை திறந்து வைத்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை தென்மராட்சிப் பகுதியில் புதிய வலையக் கல்விப் பணிமனையும் நேற்று உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை பிரதியமைச்சரினால் நேற்று திறந்து வைக்கப்பட்டது. பொருளாதார அபிவிருத்திய மைச்சு வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தினூடாக யாழ். மாவட்டத்திலுள்ள பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் நோக்கில் பாடசாலைகளுக்குத் தேவையான விஞ்ஞான ஆய்வு கூடம் செயற்பாட்டு அறைகள் சங்கீத மற்றும் நடன மண்டபங்கள் ஆகியவற்றை அமைத்துக் கொடுத்துள்ளன.
யுத்தத்தினால் அழிவடைந்துள்ள பாடசாலைகளை அரசாங்கம் புனர்நிர்மாணம் செய்தும் புதிய கட்டிடங்களை அமைத்தும் வருகின்றது.
யாழ். மாவட்டம் சாவகச்சேரி பகுதியிலுள்ள நான்கு பாடசாலைகளின் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு நேற்று பல்வேறு கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டன.
சாவகச்சேரி தென்மராட்சிப் பகுதியில் இதுவரைக் காலமும் நிரந்தர கட்டிடமின்றி வாடகை செலுத்தி இயங்கி வந்த கல்விப் பணிமனைக்காக 20 மில்லியன் ரூபா செலவில் புதிய கட்டிடம் நேற்று அமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டது. இதேவேளை, மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயத்தில் 16 இலட்சம் ரூபா செலவில் செயற்பாட்டறையும் திறந்து வைக்கப்பட்டது. அத்துடன் ஸ்ரீ பாரதி வித்தியாலயத்தில் இது வரைக்காலமும் இல்லாமலிருந்த விஞ்ஞான ஆய்வு கூடம் 2 கோடி ரூபா செலவில் புதிய கட்டிடமொன்று நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டது.
யுத்தத்தினால் மீளக்குடியேறிய அநேகமான பொது மக்களின் பிள்ளைகள் நாவற்குழி மகா வித்தியாலயத்தில் கல்வி பயில்கின்றனர். இவ் வித்தியாலயத்திற்கு 20 இலட்சம் ரூபா செலவில் விஞ்ஞான ஆய்வு கூடமும் முத்து குமாரசுவாமி வித்தியாலயத்திற்கு செயற்பாட்டறையும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் பிரதியமைச்சர் இந்திக்க பண்டாரநாயக்கவி னால் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் மற்றும் மாகாண சபை, பிரதேச சபை ஆகியவற்றின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். யாழ். மாவட்டத்தில் நேற்று ஆரம்பிக்கப் பட்ட இந் நிகழ்வுக்கு அமைச்சர் எஸ். எம். சந்திரசேன பிரதியமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ், பிரதியமைச்சர் ரோஹித்த அபயகுணவர்தன உட்பட மேலும் பல அமைச்சர்கள் இப்பாடசாலைகளை திறந்து வைத்தனர்.

0 commentaires :

Post a Comment