6/29/2011

ரிஸானாவை காப்பாற்றுங்கள் சவூதி அரேபியாவிடம் ஹக்கீம்

சவூதி அரேபியாவில் மரண தண்டனைக் கைதியாக இருக்கின்ற ரிஸானா நபீக்குக்கு கருணை காட்டி மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் நேற்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ரிஸானா நபீக்குக்கு மரணதண்டனை நிறைவேற்றிவிடப் போவதாக வெளியாகியுள்ள செய்தியை அறிந்ததும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இந்த வேண்டுகோளை விடுத்தார்.
ஆசிய, ஆபிரிக்க சட்ட ஆலோசனை அமைப்பின் 50வது வருடாந்த அமர்வு கொழும்பில் நடைபெறுகிறது.
இந்த அமைப்பின் புதிய தலைவராகப் பதவியேற்றுள்ள அமைச்சர் ஹக்கீம், இச்செய்தியை அறிவித்ததும் இலங்கைக்கான சவுதி அரேபிய பதில் தூதுவர் பாரூக் வkர் அலி, இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகம, ஆசிய ஆபிரிக்க சட்ட ஆலோசனை மாநாட்டில் பங்குபற்றியுள்ள சவூதி அரேபியக் குழுவுக்கான தலைவர் மன்ஸ¥ர் அலி கப்பாரி ஆகியோரை அழைத்து நீண்ட நேரம் கலந்துரையாடினார்.
இக்கலந்துரையாடலின் போது அமைச்சர் ஹக்கீம், நாம் சவூதி அரேபியாவின் ஷரியா சட்டங்களை மதிக்கிறோம். உங்களது நீதித்துறையில் நாம் தலையிட விரும்பவில்லை. என்றாலும், மனிதாபிமான அடிப்படையில் கருணைகாட்டி மரணதண்டனைக் கைதியாகவிருக்கும் ரிஸானா நபீக்குக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யவேண்டும். இதற்காக குழந்தையின் பெற்றோர் முன்வரவேண்டும். கோத்திரத் தலைவர்கள் ஊடாக அப்பெற்றோரை சந்தித்து கருணைகாட்டி ரிஸானாவை விடுதலை செய்ய சவூதி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அந்தப் பெற்றோருக்கு உயிரிழப்புக்கான நஷ்ட ஈட்டை (பிளட் மணி) வழங்கவும் இலங்கை அரசாங்கம் தயாராகவுள்ளது. தேவைப்படும் பட்சத்தில் அமைச்சர்கள் அடங்கிய உயர்மட்டக் குழுவொன்றை சவூதி அரேபியாவுக்கு அனுப்பி பெற்றோரை அணுகி கலந்துரையாடவும் நாம் தயாராகவுள்ளோம்.
ரிஸானாவுக்கு கருணை அடிப்படையில் மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு கோரி அக்குழந்தையின் பெற்றோருக்கு நான் ஏற்கனவே கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளேன். ரிஸானாவுக்கு மரணதண்டனை வழங்கப்போவதாக வெளியாகியிருக்கும் செய்தி இலங்கை முஸ்லிம் மக்களுக்கு மாத்திரமன்றி முழு நாட்டு மக்களிடையேயும் பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறினார்.
இக்கலந்துரையாடலின் போது வெளிவிவகார அமைச்சின் ஊடாக சவூதி அரேபியாவுக்கு அவசரக்கடிதமொன்றை அனுப்பி வைக்கவும் தீர்மானிக்கப் பட்டுள்ளது.

0 commentaires :

Post a Comment