6/14/2011

தூத்துக்குடிக்கும் கொழும்பிற்கும் இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து திங்களன்று இந்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜிகே வாசனால் துவக்கிவைக்கப்பட்டது.

பயணிகள் 121 பேர் மற்றும் நல்லெண்ண தூதுவர்கள் 80 பேர் என மொத்தம் 201 பேர் இன்று புறப்பட்ட தனியார் கப்பலில் பயணம் செய்கின்றனர்.
80களில் இலங்கையில் நிகழ்ந்த இனக்கலவரங்களுக்குப் பிறகு நிறுத்திவைக்கப்பட்டிருந்த கப்பல் போக்குவரத்து இப்போது மீண்டும் துவங்குகிறது.
வழமையாக ராமேஸ்வரத்திலிருந்து தலை மன்னாருக்குத்தான் பயணிகள் கப்ப்ல் செல்லும். ஆனால் இப்போது தூத்துக்குடியிலிருந்து கொழும்பிற்கு இயக்கப்படுகிறது.
ராமேஸ்வரம் தலைமன்னார் சேவையினையும் தொடங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வாசன் தெரிவித்தார்.
104 ஆண்டுகளுக்கு முன் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் முயற்சிக்குப் பிறகு இப்போதுதான் தூத்துக்குடியிலிருந்து பயணிகள் கப்பல் இலங்கைக்கு செல்கிறது என்றார் வாசன்.
முன்னதாக அவர் சொகுசுக்கப்பலைப் பார்வையிட்டு பயணிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
1044 பேர் பயணம் செய்யக்கூடிய இச்சொகுசுக் கப்பல் வாரந்தோறும் திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் தூத்துக்குடியிலிருந்து புறப்படும்.
கொழும்பிலிருந்து புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கிளம்பும்.
இலங்கை மீது பொருளாதாரத்தடை விதிக்கவேண்டும் என்று கோரும் தீர்மானம் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னணியில், மாநில தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புதுறை அமைச்சரும், தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினருமான செல்லபாண்டியன் உட்பட அஇஅதிமுகவினரும் மாவட்ட ஆட்சியரும் கப்பல் போக்குவரத்து துவக்க நிகழ்ச்சியைப் புறக்கணித்ததாக செய்திகள் கூறுகின்றன
 

0 commentaires :

Post a Comment