-ஜீவசகாப்தன் -
அல்டிமேட் ஸ்டார், இளைய தளபதி, இளஞ்சூரியன், சுப்ரீம் ஸ்டார் என எந்த பட்டபெயர்களும் இடப்படாத கதாநாயகன். கவர்ச்சிபுயல், செக்ஸ் பாம், கனவுக்கன்னி என எந்த கவர்ச்சிப் பெயர்களும் இட்டுக் கொள்ளாத கதாநாயகி. இவர்களைக் கொண்டு ஒரு திரைப்படம் எடுப்பதையே பெருமையாக பேசி கொள்ளும் திரைப்பட சந்தையில் திருநங்கை ஒருவர் கதையின் நாயகியாக நடித்து வெளிவந்திருக்கும் படம் 'நர்த்தகி'. திரைப்பட ஆணாதிக்க சந்தை உருவாக்கியிருக்கும் 'பொதுபுத்தி'யை உடைத்தெறிந்தற்காக இப்படத்தின் இயக்குநர் விஜய பத்மாவை பாராட்டியே ஆக வேண்டும். ஆணாகப் பிறக்கும் கதாநாயகன் தனது பதினைந்தாவது வயதில் தான் ஒரு பெண் என்பதை உணரும்போது, குடும்பமும், சமூகமும் அவனைப் புறக்கணிக்கிறது. அவ்வாறு புறக்கணித்தவுடன், மற்ற திருநங்கைகளைப் போல பிச்சைக்காரராகவோ, பாலியல் தொழிலாளியாகவோ மாறாமல் நடனக் கலைஞராகவும், சமூக சேவகியாகவும் மாறுகிறார் நமது கதையின் நாயகி 'கல்கி'.
திருநங்கைகளை சமூகத்தில் இழிநிலை மாந்தர்களாக மாற்றுவதில் நம் ஒவ்வொருவருக்கும் இருக்கும் பங்கினை ஆதங்கத்துடன் எடுத்து வைக்கிறது இத்திரைப்படம். தொடர் வண்டி நிலையங்களிலும், பேருந்து நிலையங்களிலும் நிற்கும் திருநங்கைகளைப் பார்க்கும்போது, மனதிற்குள் பகட்டாக சிரிப்பதும், நண்பர்களிடம் சாடை காட்டுவதும் போன்ற செயல்களில்தான் வெகுவான மக்கள் ஈடுபடுகின்றனர் (பெண்கள் உட்பட). இது போன்ற தருணங்களில் ஒரு திருநங்கை தன்னை நிர்வாணமாக யாரோ பார்ப்பதைப் போன்ற அவமானத்தை உணர்கிறார். ஆதிகாலத்தில் ஆதிக்க மனநிலை பெறாதவரை, மனித சமூகம் தனது சக மனிதனை அவரவருக்கான பாலியல் உடற்கூறுகளுடன் ஏற்றுக் கொள்கிற மனோபாவத்துடன்தான் இருந்திருக்கிறது. காலப்போக்கில் ஆணாதிக்க சமூக சிந்தனை ஆதிக்கம் பெற்றவுடன், பெண்களை அவர்களின் பாலியல் கூறுகளை வைத்து இழிவுபடுத்துவதும் அடிமைப்படுத்துவதும் அதிகரித்துவிட்டது. பெண்களை இழிவாக பார்க்கும் ஆணாதிக்க சிந்தனையின் நீட்சியே திருநங்கைகளையும் இழிவுபடுத்தும் தன்மை.
பொதுவாக, திரைப்படங்களில் திருநங்கைகளுக்கான பாத்திரபடைப்பு மிகவும் அருவருக்கத்தக்கதாக உள்ளது. திரைப்படங்களில் கதாநாயகன் வர்க்கப் போராளியாக இருந்திருக்கிறார். சாதி ஒழிப்பு போராளியாக இருந்திருக்கிறார். ஆனால் திருநங்கை கதாபாத்திரமோ, திருநங்கைளுக்காக போராடும் கதாநாயகனோ இதுவரை திரையில் வந்தது இல்லை. இதற்கு மாறாக திருநங்கைகளை இழிவுபடுத்தும் கதாபாத்திரங்களில் கதாநாயகன் தோன்றி இருக்கிறார். மேலும் நகைச்சுவை என்கிற பேரில் திருநங்கைளின் குரல் வளத்தையும், அவர்களது உடலசைவு மொழியையும் பகடி செய்வது போன்ற காட்சிகள் தமிழ் சினிமாவில் சர்வ சாதரரணமாக இடம்பெறுகின்றன. இது போன்ற காட்சிகளை தணிக்கை குழுவினர்களும், திரைத்துறை ஆளுமைகளும் தவிர்ப்பதற்கான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால், அதற்கு மாறாக, திருநங்கைகளின் வாழ்வியல் அவலத்தை சுட்டும் ‘நர்த்தகி’ திரைப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
நர்த்தகி திரைப்படம் பதினெட்டு வயதிற்கு உட்பட்ட அனைத்து சிறுவர், சிறுமியர்களும், குடும்பத்துடன் சென்று பார்க்க வேண்டிய படம். இரத்தகளறி காட்சிகளையும், வன்முறையை தூண்டும் வசனங்களும் அடங்கிய திரைப்படங்களுக்கெல்லாம் ‘யு’ சான்றிதழ் வழங்கி குடும்பத்துடன் பார்க்கச் சொல்கிறது திரைப்பட தணிக்கைத்துறை. ஆனால், சமூக மாற்றத்திற்கான சிந்தனையை தூண்டும் ‘நர்த்தகி’ திரைப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கி மக்களை திரை அரங்கிற்குள் செல்லவிடாமல் எச்சரித்து உள்ளது நமது தணிக்கைத்துறை. ஆனால், இத்தனை தடைகளையும் மீறி சென்னை அண்ணாசாலை திரைஅரங்கு ஒன்றில் மக்கள் கூட்டத்துடன் தான் அந்தப் படத்தை என்னால் பார்க்க நேர்ந்தது என்பது மகிழ்ச்சியான செய்தி. இப்படத்தில் காண்பிக்கப்படும் திருநங்கைளுக்கான சடங்குகள் மற்றும் அவர்களது வாழ்வியல் முறைகளை பார்க்கும்போது, நாம் எந்த அளவிற்கு அவர்களது நடைமுறை வாழ்க்கையிலிருந்து அந்நியப்பட்டு இருக்கிறோம் என்பதை உணர முடிகிறது.
படத்தில் சிறுவயது கல்கியாக வரும் சிறுவன் கதாபாத்திர தேர்விற்காகவே இயக்குனர் விஜயபத்மாவை சிறப்பாக பாராட்ட வேண்டும். தன் தந்தையிடம் சிலம்பம் கற்றுக் கொள்ளும் காட்சியில், கண்களில் நளினத்தையும், உடல் மொழியில் பரதத்தையும் அழகாக வெளிப்படுத்தியுள்ளான். இப்படத்தின் கதாநாயகியாக, திருநங்கை கல்கி நடித்திருப்பது சாலப்பொருத்தமாகும். ஆபாசம் கலக்காமல் அற்புதமாக காதல் உணர்ச்சியை வெளிப்படுத்துவதிலும், மிகைப்படுத்தாத சோகத்தை காண்பிப்பதிலும் கல்கி கலக்குகிறார். தன் சொந்த வாழ்விலும் சமூக சேவகியாக வாழ்ந்து வரும் 'கல்கி'க்கு இத்திரைப்படம் ஒரு உரிய அங்கீகாரத்தை கொடுத்திருக்கிறது. திரைச்சமூகத்திற்கும், திருநங்கை சமூகத்திற்கும் அவரது பணி தொடர வாழ்த்துக்கள்.
அரசியல், சமூகம், கல்வி, வேலைவாய்ப்பு என ஒரு மனிதனுக்கு கிடைக்க வேண்டிய அனைத்தும் திருநங்கைளுக்கு எந்தவித நியாயமும் இல்லாமல் மறுக்கப்பட்டு வருகிறது. பாலின சமத்துவம் குறித்த அறிவும், உணர்வும் பெறாத மக்களின் பொது புத்தியால் திருநங்கைகளுக்கான உலகம் திருடப்பட்டு வருகிறது. அதனை மீட்பதற்கான முதல் முயற்சியாக இத்திரைப்படத்தை நாம் வரவேற்க வேண்டும்.
நன்றி *கீற்று
0 commentaires :
Post a Comment