6/11/2011

தூத்துக்குடி-கொழும்பு பயணிகள் கப்பல்





தமிழகத்தின் தூத்துக்குடிக்கும் இலங்கை தலைநகர் கொழும்புக்கும் இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை வரும் 13ஆம் தேதி முதல் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பல தசாப்தகால இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் ஆரம்பமாகின்ற இக்கப்பல் சேவையில், முதல் கப்பல் திங்கட்கிழமை மாலை தூத்துக்குடியில் இருந்து கொழும்புக்கு புறப்பட்டுச் செல்லும் என்று தூத்துக்குடி துறைமுகப் பொறுப்புக் கழகத்தின் தலைவர் சுப்பையா பிபிசியிடம் தெரிவித்தார்.
எம்.வி.ஸ்காட்டியா பிரின்ஸ் என்று பெயர்கொண்ட இந்தக் கப்பல் கொழும்பு நகரை சென்றடைய 14 மணி நேரம் ஆகும். இக்கப்பலில் 1200 பயணிகள் பயணிக்க முடியும். இது தவிர 4 ஆயிரம் டன்கள் எடையுள்ள சரக்குகளையும் ஏற்றுமதி செய்யமுடியும் என்றும் அவர் கூறினார்.
கப்பலில் மொத்தம் 325 அறைகள் இருக்கும். பயணிகளுக்குத் தேவையான உணவு வசிதிகளும், பொழுது போக்குகளும் இதில் உண்டு என்றும் அவர் குறிப்பிட்டார்.
முதலில் வாரம் இரு முறை இயக்கப்படும் இந்தக் கப்பல் சேவை, பின்னர் தேவையைப் பொறுத்து அதிகரிக்கப்படும்.
ஒரு-வழி பயணத்துக்கு குறைந்தபட்சக் கட்டணமாக 49 டாலர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சரக்குத் துறைமுகமாக இருக்கும் தூத்துக்குடி துறைமுகத்தில் பயணிகளைக் கையாளத் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அதகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இவ்விரு நகரங்கள் இடையே முதல் முறையாக 1907 ஆம் ஆண்டு கப்பலோட்டியத் தமிழன் என்று அழைக்கப்படும் வ.உ.சிதம்பரனார் முதல் கப்பல் சேவையை 1907 ஆண்டு ஆரம்பித்தார்.
கப்பல் போக்குவரத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்யத்தை உடைக்க அப்போது அவர் அம்முயற்சியை மேற்கொண்டார்.

0 commentaires :

Post a Comment