6/09/2011

மரணிக்கும் வரை போராடுவேன் ஜனாதிபதி கடாபி ஆவேசம்


லிபிய ஜனாதிபதி முஅம்மர் கடாபி தனது நாட்டுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை எதிர்த்து மரணிக்கும் வரை போராடப் போவதாகவும் மரணத்தை வரவேற்பதாகவும் அறிவித்துள்ளார்.
லிபிய அரச தொலைக்காட்சிக்கு அவர் தொலைபேசியில் நேரடியாகக் கருத்துத் தெரிவித்த போதே இவ்வாறு கூறினார். நோட்டோ படைகள் நேற்றைய தினத்திலும் லிபிய தலைநகர் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்தே கடாபி தொலைக்காட்சிக்கு தனது செய்தியை வெளியிட்டுள்ளார்.
“குண்டுகளுக்கும், வானைச் சுற்றும் விமானங்களுக்கும் இடையிலேயே பேசுகிறேன். எனது முடிவு இறைவனின் கையிலுள்ளது. வாழ்க்கையையும் மரணத்தையும் பற்றி நான் கவலைப்படவில்லை.
நாம் மரணிக்கும் வரை இந்த மண்ணிலேயே இருப்போம். நாம் அடிபணியப் போவதில்லை. உங்களின் ஏவுகணைகளை விடவும் நாம் பலமானவர்கள். உங்களது விமானங்களை விடவும் பலமானவர்கள். லிபிய மக்களின் குரல் உங்கள் குண்டு சத்தத்தைவிடவும் வலுவானது என்று இதன்போது முஅம்மர் கடாபி கூறினார்.
இந்த உரையில் அவர் தனது ஆதரவாளர்களை திரிபோலியிலுள்ள இல்லத்தில் கூடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அத்துடன் தம்மிடம் உள்ள 250,000 முதல் 500,000 படைகளைக் கொண்டு லிபியாவிலுள்ள ஆயுத கும்பல்களை ஒழிக்கத் தயாராக உள்ளதாகவும் கடாபி கூறியுள்ளார்.
இதேவேளை, நேட்டோ படையின் தாக்குதல்கள் லிபியாவில் தீவிரமடைந்துள்ளன. தொடர்ச்சியாக நேற்றைய தினத்திலும் லிபிய தலைநகர் திரிபோலி மீது நேட்டோ படை தாக்குதல் நடத்தியது. லிபிய ஜனாதிபதி முஅம்மர் கடாபியின் வீடு அமைந்துள்ள பகுதியான பாப் அல் அkஸியாவில் நேட்டோ குண்டு மழை பொழிந்தது. இதனால் அந்த பகுதி தீப்பற்றி எரிவதோடு புகைமண்டலமாகக் காணப்படுகிறது.
இந்நிலையில் நேட்டோ படையின் தாக்குதலினால் 31 பேர் கொல்லப்பட்டதாகவும் நேற்றைய தினத்தில் மாத்திரம் 60க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நேட்டோபடை நடத்தியதாகவும் லிபிய அரசின் பேச்சாளர் மூஸா இப்ராஹிம் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் திரிபோலியில், அமைந்துள்ள கடாபியின் ரகசிய பொலிஸ் தலைமையகம் மற்றும் இராணுவ புலனாய்வு கட்டிடங்கள் மீதே நேட்டோ படை தாக்குதல் நடத்தியதாக பிரிட்டன் பாதுகாப்பு அலுவலகம் கூறியுள்ளது.

0 commentaires :

Post a Comment