தமிழ் பேசும் மக்களுக்கான நியாயமான தீர்வை பெற்றுக் கொடுப்போம், சுய நிர்ணய உரிமையை மீட்டெடுப்போம் என்று குறிப்பிடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நியாயமான தீர்வு என்ன என்பதை தமிழ் மக்களுக்கு வெளிப்படையாகக் குறிப்பிட வேண்டும்.
தமிழ் பேசும் சமூகம் 60 ஆண்டுகளாக அரசியல் ரிதியாக ஏமாற்றப்பட்டு வந்த நிலையில் கிழக்கு மாகாண சபை அமைக்கப்பட்ட பிற்பாடு தமிழ் பேசும் மக்களின் உரிமையையும் அபிவிருத்தியினையும் ஒண்றிணைக்கும் வகையில் ஜனநாயக பாதையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பயணிக்கிறது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினையும் கிழக்கு மாகண சபையின் செயற்பாடுகளையும் ஆங்காங்கே விமர்சித்துவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் பேசும் மக்களுக்கான தீர்வு என தங்களால் குறிப்பிடும் விடயம் இதனை அடைவதற்கான வழிகளையும் வெளிப்படையாக மக்களுக்கு குறிப்பிடப்பட வேண்டும். இது மர்ம தேசமும் அல்ல சிதம்பர ரகசியமும் அல்ல. தீர்வுகள் என்பது பாதிக்கப்பட்ட சமுதாயத்திற்கு கிடைக்க வேண்டியதொன்று. அது நீண்ட தூரப் பயணம்கொண்டது. முதலாம் தலைமுறை, இரண்டாம் தலைமுறை, மூன்றாம் தலைமுறை என தலைமுறைகளாக கடத்தப்பட வேண்டிய ஒன்று வெளிப்படையாக அமைய வேண்டும். கடந்த காலங்களைப் போல் இன்றும் இலக்கில்லாமல் தமிழர்கள் பயணிப்போமாகயிருந்தால் மாகாண சபை அதிகாரங்களைக் கூட தன்னகத்தே வைத்துக் கொள்ள முடியாத நிலை தோன்றும்.
வரலாற்று அனுபவங்கள் தமிழ் பேசும் மக்களுக்கு ஓர் சிறந்த அனுபவத்தினைத் தந்துள்ளது. கிடைத்திருப்பதனை வைத்துக்கொண்டு தமிழ் பேசும் சமூதாயத்தினை மீண்டும் எவ்வாறு வலுவான பாதைக்கு இட்டுச் செல்லலாம் என்பதனை திட்டமிட வேண்டும். தேர்தல் காலங்களில் குறிப்பிடுவது போல் அரசியல் பேசி அடம் பிடிப்பதை விடுத்து தமிழ் பேசும் மக்களுக்கான வலுவான பாதைகளுக்கு அனைத்து அரசியல் தலைமைகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். அமைச்சர் பதவிகளையும் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளையும் வைத்துக் கொண்டு எவ்வாறு பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண மக்களின் மீட்சிக்கு வித்திடலாம் என்பதனை சிந்திக்கின்ற காலமே இது. மாறாக தொடர்ந்தும் எமது தமிழ் மக்களை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்ல யாரும் முனையக் கூடாது. எல்லாவற்றிலும் வெளிப்பாட்டுத்தன்மை மேலோங்கி இருக்க வேண்டும்.
வாக்குகளுக்காக வார்த்தை ஜாலங்களை பாவிப்பதும் மக்களைக் குழப்புவதுமான செயற்பாடுகளை குறித்த சில அரசியல் தலைமைகள் கைவிட்டு யதார்த்த ரீதியான நியாயங்களுக்கு துணை நிற்க வேண்டும் எனக் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் அவர்கள் குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாண முதலமைச்சரின் நிதியின் மூலம் அமைக்கப்பட்ட இருமாடிக் கட்டடத்தினை திகிலிவெட்டை கிராமத்தில் முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் அவர்கள் உரையாற்றிய போது குறிப்பிட்டார்.
இந் நிகழ்வில் கல்குடா வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் ரவி, கோட்டக் கல்விப் பணிப்பாளர் குணலிங்கம் போன்ற பலர் கலந்து சிறப்பித்தனர்.
0 commentaires :
Post a Comment