6/22/2011

ஆசிரியர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் பாடசாலைகளுக்;கு ஆசிரியர்கள் பெற்றுக் கொடுப்பதே எனது நோக்கம். – முதலமைச்சர் சந்திரகாந்தன்

கிழக்கு மாகாணத்தின் கல்வி வளர்ச்சியிலே மாகாண முதலமைச்சர் என்றவகையில் முழுமையான கவனம் செலுத்த வேண்டியது எனது கடமையாகும். அதே நேரம் மேலதிகமாக இருக்கின்ற ஆசிரியர்கள் பற்றாக் குறையாக உள்ள பாடசாலைகளுக்கு இடமாற்றுவதன் ஊடாகவே அவர்களை சமப்படுத்தி சீரான கல்வி வளர்ச்சியினை எய்த முடியும் என்ற நோக்கிலேயே குறித்த இடமாற்றம் இடம்பெற்றது.
ஆயினும் தவிர்க்க முடியாத காரணத்தினால் ஜனாதிபதி உத்தரவுக்கமைய குறித்த ஆசிரியர் இடமாற்றம் பிற்போடப்பட்டள்ளது. ஆனால் உண்மையிலே பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை அனுப்ப வேண்டிய கடமை இருக்கிறது. எனவே எதிர் காலத்தில் எந்தவித குழப்பங்களும் இடம்பெறாமல் மிகவும் அவதானத்துடன் குறித்த ஆசிரியர்கள் இடமாற்றம் இடம்பெறும். அப்போது இதனை யாரும் இடைநிறுத்தாத அளவிற்கு மிகவும் அவதானமாக குறித்த இடமாற்றம் செய்யப்படும். இதனூடாக பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு உதவ முடியும் என கிழக்குமாகாண முதலமைச்சர் சி. சந்திரகாந்தன் தெரிவித்தார்.
குறித்த இடமாற்றம் தொடர்பில் கடிதங்கள் கிடைக்கப்பெற்ற ஆசிரியர்கள் 60 வீதமானவர்கள் கடமையினைப் பொறுப்பேற்றிருக்கின்றார்கள். இதனை வைத்து பார்க்கும் போது குறிப்பிட்ட சில ஆசிரியர்கள் சமூகத்தின் ஒட்டமொத்த நலன் மற்றும் மாகாணத்தின் நன்மை கருதி செயற்பட்டிருப்பதனை அறிய முடிகிறது. இருந்த போதும் குறித்த இடமாற்றத்தில் ஒருசில தவறுகள் நடந்திருப்பதனால் அவை முழுமையாக பிற்போடப்பட்டுள்ளது. எது எவ்வாறிருப்பினும் உண்மையில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும் கல்வி சமூகத்தினருக்கும் உண்மையான தீர்வினை பெற்றுக் கொடுக்க வேண்டியது மாகாணத்தின் அக்கறை கொண்ட அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் பொறுப்பு எனவே எதிர் காலத்தில் இதனைக் கருத்திற் கொண்டு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் அவர்; கேட்டுக் கொண்டார்.

0 commentaires :

Post a Comment