6/17/2011

இலங்கைத் தமிழர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

ஐக்கிய ராஜ்ஜியத்தில் அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட ஒரு தொகுதி தமிழர்கள் சிறப்பு விமானம் மூலம் வியாழன் மாலை இலங்கை கொண்டு செல்லப்படுகின்றனர்.
மனித உரிமை அமைப்புக்கள் இது தொடர்பாக வெளியிட்ட கவலைகளை மீறி
தஞ்சம் நிராகரிக்கப்பட்ட ஐம்பதுக்கும் மேற்பட்டோர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கடைசி நேரம்
இலங்கை அனுப்பப்படுவதற்காக விமானத்தில் ஏற்றப்பட்ட ஒருவரின் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை நாடி தடை உத்தரவு பெற்றதையடுத்து அவர் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டார்.
அந்த நபர் தமிழோசையிடம் பேசுகையில், விமானத்தில் 48 ஆண்களும் 6 பெண்களும் இருந்ததாக குறிப்பிட்டார். விமானம் மாலை 6 மணி அளவில் லண்டன் கேட்விக் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றதாகவும் அவர் கூறினார்.
மேலும் தன்னோடு விமானத்தில் ஏற்றப்பட்ட வேறு இரண்டு நபர்களும் இறக்கிவிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். அதே நேரம் விமானத்துக்குள் ஏற்றப்பட்ட பெண்கள் கதறி அழுததாகவும் அவர் கூறினார்.
ஆனால் இது குறித்து பிரிட்டிஷ் அரசு தரப்பு விவரங்களை எம்மால் பெறமுடியவில்லை.
எதிர்ப்பு
அகதித் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களை மீண்டும் அங்கு அனுப்பப்படக் கூடாது என்று மனித உரிமை அமைப்புக்களோடு பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினரும் இணைந்து குரல் எழுப்பியிருந்தாலும், இது தொடர்பில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை. காரணம் ஏதும் தெரிவிக்கப்படாமல் ஒரு சிலரை திருப்பி அனுப்பும் நடவடிக்கை இறுதி நேரத்தில் கைவிடப்பட்டுள்ளது.
இருந்தும் பெரும்பான்மையானோர் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட உள்ளார்கள். இந்த விடயம் தொடர்பாக பிரிட்டிஷ் நாடாளுமன்ற மக்களவையில் ஒரு விவாதத்துக்கு தான் விடுத்த கோரிக்கையை, சபாநாயகர் ஏற்க மறுத்துவிட்டார் என்று மக்களவை உறுப்பினர் சியோபான் மெக் டோனா தமிழோசையிடம் தெரிவித்தார்.
திருப்பி அனுப்பப்படுபவர்களில் ஒரு சிலரின் பாதுகாப்புக்கு பங்கம் வரலாம் என்று, தான் அஞ்சுவதாகவும் அவர் தெரிவித்தார்.
தான் இலங்கைக்கு அனுப்பப்படுவதை எதிர்த்து 30 வயதுடைய தமிழ் இளைஞன் ஒருவர் தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக அவரின் வழக்கறிஞர்கள் தமிழோசையிடம் தெரிவித்தனர்.
ஐக்கிய ராஜ்ஜியம் தனது சர்வதேசக் கடமைகளை மிகவும் முக்கியமாக எடுத்துக் கொள்வதாகவும், ஒரு நபர் தனக்கு சர்வதேச பாதுகாப்பு வேண்டும் என்பதை உணர்த்தினால் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்று குடியரவுத் துறை அமைச்சர் டேமியன் கிரின் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு சென்றால் தமக்கு பாதிப்பு வரும் என்று தமிழோசையிடம் தெரிவித்த சில தஞ்சம் கோரிகள், அங்கு தமக்கு கருணா குழுவால் அச்சம் ஏற்படும் என்றும் தெரிவித்திருந்தனர்.
ஆனால் அது போன்ற அச்சங்கள் தேவையற்றது என்று அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

0 commentaires :

Post a Comment