6/25/2011

வடக்கு, கிழக்கு நிர்வாக சேவை திட்டம்

இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிர்வாக சேவையில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு விசேட திட்டமொன்றை அரசாங்கம் அறிவித்துள்ளது.
இலங்கை நிர்வாக சேவைக்கு ஆட்களை திரட்டுவதற்காக 2009 ம் ஆண்டு இறுதியாக நடைபெற்ற தேசிய ரீதியிலான போட்டிப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் தமிழ் மொழி மூலம் அதாவது தமிழர்களோ ,முஸ்லிம்களோ தெரிவு செய்யப்படாததையடுத்தே இந்த விசேட திட்டத்தை அரசாங்கம் அறிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் இது தொடர்பாக வெளியிடப்ப்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் தமிழ் மொழியில் மட்டுமே ஆட்திரட்டலுக்கான போட்டிப் பரீட்சை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் தமிழ் மொழி மூல இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகளை தெரிவு செய்வதற்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்த விசேட திட்டம் வரவேற்கத்தக்கது எனக் கூறும் ஓய்வு பெற்ற நிர்வாக சேவை அதிகாரியும முன்னாள் அரசாங்க அதிபருமான எஸ்.புண்ணியமூர்த்தி வடக்கு கிழக்கு மாகாணங்களில் நிலவும் தமிழ் பேசும் அதிகாரிகளுக்கான பற்றாக்குறை காரணமாக தற்போது மத்திய அரசிலும் மாகாண சபைகளிலும் ஓய்வு பெற்றவர்களும் பொறுப்பான பதவிகள் வகிப்பதாகக் கூறுகின்றார்.
1990 ம் ஆண்டிலும் வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள நிர்வாக சேவை வெற்றிடங்களை நிரப்புவதற்காக விசேட திட்டமொன்று நடை முறைக்கு வந்திருந்தாலும் ஆட்தெரிவிற்காக போட்டிப் பரீட்சை மூன்று மொழிகளிலும் நடைபெற்றதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
 

0 commentaires :

Post a Comment