6/20/2011

ஆசிரியர் இடமாற்றத்திற்கு எதிரான மாணவர் ஆர்ப்பாட்டங்கள் குறித்து விசாரணை நடத்துமாறு மாகாண கல்வி பணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றத்தை கண்டித்து கடந்த சில நாட்களாக கிழக்கு மாகாணத்தின் சில கல்வி வலயங்களில் மாணவர்கள் சீருடையுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில விசாரணை நடத்துமாறு கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம் சகல வலய கல்வி பணிப்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
குறித்த விசாரணை அறிக்கைகளை எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் பதிவு தபால் மூலம்  கிடைக்கச் செய்யுமாறு மாகாண கல்வி பணிப்பாளர் கேட்டுள்ளார்.
ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற நாட்களில் பாடசாலைகளுக்கு சமுகமளித்த அதிபர், ஆசிரியர்களின் பெயர் பட்டியல், வருகை மற்றும் செல்கை நேரங்கள், ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நேரம் என்பன விசாரணை அறிக்கை உள்ளடக்கியிருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
மாணவர்களை வீதிக்கு அனுப்பியும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவும் அனுமதித்து விட்டு, பாடசாலையின் நிருவாகத்தை சீர்குலைத்து பொறுப்பற்ற முறையில் செயற்பட்ட அதிபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது என அவர் தெரிவித்தார்.
பாடசாலைகளில் அதிபர்களும், ஆசிரியர்களும் ஒப்பமிட்டு கடமையில் ஈடுபட்டு இருக்கத்தக்கதாக, மாணவர்களாலும் சில ஆசிரியர்களாலும் இவ்வாறான அரச விரோத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பது சுற்றுநிருபங்களை மீறும் செயலாகும் என எம்.ரி.ஏ.நிஸாம் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பாக கடந்த 18ஆம் திகதி கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம் கையொப்பமிட்டு சகல வலய கல்வி பணிப்பாளர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.இக்கடித்தின் பிரதிகள் கிழக்கு மாகாண ஆளுநர், கிழக்கு மாகாண முதலமைச்சர், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

0 commentaires :

Post a Comment