6/20/2011

வவுனியா நகரசபைக்கு தலைவரை நியமிப்பதில் த.தே.கூ. திண்டாட்டம்

வவுனியா நகர சபைக்கு தகுதிவாய்ந்த ஒரு தலைவரை நியமிக்க முடியாது கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இலங்கை தமிழரசு கட்சி தடுமாறிவருவது குறித்து வவுனியா நகர சபைக்குட்பட்ட குடியிருப்பாளர்களும் வர்த்தகர்களும் கடும் விசனம் அடைந்துள்ளனர்.
கட்சி எடுக்கும் தீர்மானத்திற்கு நகர சபையின் தமிழரசு கட்சி உறுப்பினர்கள் முதலில் இணக்கம் தெரிவிக்கின்றனர். ஒரு சில தினங்களின் பின்னர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் பின்னணியில் சிலர் செயல்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது.
தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட மூவரடங்கிய குழு சமீபத்தில் வவுனியா வந்து சகல தரப்பினருடனும் கலந்துரையாடி ஒரு அறிக்கையினை தலைமைப் பீடத்திற்கு சமர்ப்பித்திருந்தது.
இதில் சில ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டிருந்தன. உடனடியாக சபையை இயங்க வைக்கவேண்டும். அதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் அவசியமென குறிப்பிடப் பட்டிருந்தது. இதன் பின்னர். தலைவரை நியமிக்கலாம் என்ற முன்மொழிவு இடம் பெற்றுள்ளது. அதற்கு எதிரணியினுடைய ஒத்துழைப்பினையும் கேட்டிருந்தனர்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் ஐந்து கட்சிகள் இடம்பெற்றிருந்த போதிலும் இலங்கை தமிழரசு கட்சியை வளர்க்கவே சில பாராளுமன்ற உறுப்பினர்கள் முயற்சியெடுத்து வருகின்றன என்ற குற்றச்சாட்டும் வருகின்றன.
அதேநேரத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பினை அரசியல் கட்சியாக பதிவு செய்ய எடுக்கப்படும் முயற்சிகளும் தாமதமடைந்து வருகின்றது.
வடக்கு மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. அதன் பின்னர் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினை கட்சியாக பதிவு செய்யலாமென தற்போது உள்ள மூத்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளதாக அறியப்படுகின்றது.

0 commentaires :

Post a Comment