6/28/2011

ஆசிய, ஆபிரிக்க சட்ட ஆலோசனை அமைப்பின் தலைவராக அமைச்சர் ஹக்கீம்

ஆசிய - ஆபிரிக்க சட்ட ஆலோசனை அமைப்பின் புதிய தலைவராக இலங்கை நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்று தெரிவு செய்யப்பட்டார்.

ஆசிய, ஆபிரிக்க சட்ட ஆலோசனை அமைப்பின் 50 ஆவது வருடாந்த செயலமர்வின் போது புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் பதவியேற்ற பின் நிகழ்வுகளுக்கு தலைமை தாங்குவதை படத்தில் காணலாம். (படம்: பாலமுனை நிருபர் றிபாஸ்)

ஆசிய - ஆபிரிக்க சட்ட ஆலோசனை அமைப்பின் ஐம்பதாவது வருடாந்த அமர்வு கொழும்பு சினமன்லேக் சைட் ஹோட்டலில் நேற்று ஆரம்பமானது.
நேற்று முதல் ஜுலை மாதம் முதலாம் திகதி வரையும் நடைபெறவிருக்கும் இந்த சர்வதேச அமர்வை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்றுக் காலை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். இந்த சர்வதேச அமர்வில் ஆசிய ஆபிரிக்கக் கண்டங்களிலுள்ள 47 நாடுகளின் இருநூறு பிரதிநிதிகள் பங்குபற்றியுள்ளனர்.
இவர்களில் ஒன்பது நாடுகளின் நீதியமைச்சர்கள், சர்வதேச நீதிமன்றத்தின் தலைவர் ஹிஸாஸி ஓவாடா, ஆறு நாடுகளின் சட்டமா அதிபர்கள் அடங்கியுள்ளனர்.
இச்சர்வதேச அமர்வை ஜனாதிபதி அங்குரார்ப்பணம் செய்து வைத்த பின்னர் நடைபெற்ற பிற்பகல் அமர்வின்போது இந்த அமைப்பின் தலைவராக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவு செய்யப்பட்டார்.
இந்த அமைப்பின் தலைவராக அமைச்சர் ஹக்கீம் தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து அவ்வமைப்பின் பதவி விலகிச் செல்லும் தலைவரான தன்ஸானியா நாட்டு அரசியல் விவகார, நீதியமைச்சர் செலினா கும்பானி அமைப்பின் தலைமைப் பொறுப்புக்களை அமைச்சர் ஹக்கீமிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்.
இந்த ஆசிய, ஆபிரிக்க சட்ட ஆலோசனை அமைப்பின் ஸ்தாபக நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். இந்த அமைப்பு நான்காவது தடவையாக தனது வருடாந்த அமர்வை இம்முறை இலங்கையில் நடாத்துகின்றது- ஏற்கனவே 1960 ஆம், 1971 ஆம், 1981 ஆம் ஆண்டுகளிலும் இந்த அமைப்பு தனது வருடாந்த அமர்வுகளை இந்நாட்டில் நடத்தியுள்ளது.

0 commentaires :

Post a Comment