6/04/2011

அரசியல்வாதிகள் இம்மாத முடிவுக்குள் சொத்து விபரங்களை அறிவிக்க வேண்டும்

சகல அரசாங்க உத்தியோகத்தர்களும் ஜூன் மாதம் 30ம் திகதிக்கு முன்னர் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு தங்கள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை அறிவிக்க வேண்டுமென்று கைலஞ்ச மோசடி மற்றும் ஊழல்கள் பற்றிய விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மி ஜயவிக்கிரம அறிவித்துள்ளார்.
1975ம் ஆண்டின் சொத்து மற்றும் பொறுப்பு விபரம் முதலாம் இலக்க சட்டத்தின் கீழ் அரசாங்க உத்தியோகத்தர்கள் இந்த விபரங்களை அறிவிப்பது அவசியமாகும். இலஞ்ச ஆணைக்குழுவின் அதிகாரிகள் ஜனாதிபதியின் செயலாளருடன் நடத்திய பேச்சுவார்த்தைகளை அடுத்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக இலஞ்ச ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
இந்த சட்டத்தின் கீழ் அரசியல்வாதிகள், கூட்டுத்தாபனங்களின் தலைவர்கள், திணைக்களங்களின் பணிப்பாளர்கள், நீதிபதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் தங்கள் சொத்து மற்றும் பொறுப்புக்கள் பற்றிய விபரங்களை அறிவிக்க வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களை பாராளுமன்றத்தின் சபாநாயகரிடமும், கூட்டுத்தாபனங்கள், திணைக்களங்களின் தலைவர்கள் தங்களுக்கு பொறுப்பாக இருக்கும் அமைச்சுகளின் செயலாளர்களிடமும், நீதிபதிகள் ஜனாதிபதியிடமும், அரசாங்க ஊழியர்கள் தங்களுக்கு நியமனம் வழங்கிய உயர் அதிகாரிகளுக்கும் இந்த விபரங்களை அறிவிக்க வேண்டும்.
இவர்கள் தங்கள் நிலையான நடமாடும் சொத்துக்கள் பற்றி அறிவிக்கும் போது உள்ளூரில் இருப்பவை குறித்தும் வெளிநாட்டில் இருக்கும் சொத்துக்கள் குறித்தும் தெரியப்படுத்த வேண்டுமென்று இலஞ்ச ஆணைக்குழுவின் தலைவர் லக்ஷ்மி ஜயவிக்கிரம தெரிவித்தார்.
குறிப்பிட்ட திகதிக்குள் இந்த விபரங்களை அறிவிக்க வேண்டுமென்றும் எவராவது தவறான தகவல்களை இதன்மூலம் தெரிவிப்பது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டால், சொத்து விபரங்கள் மற்றும் பொறுப்புக்கள் சட்டத்தின் 9வது பிரிவின் கீழ் சம்பந்தப்பட்டவர் மீது வழக்கு தொடரப்பட்டு அவருக்கு அபராதம் அல்லது ஒரு வருடத்துக்கு குறைவான தண்டனை வழங்க முடியுமென்றும் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

0 commentaires :

Post a Comment