ஒன்றின்  மீதான மதிப்பீடுகள் என்பது எப்போதுமே நிலையான  தன்மையைக் கொண்டிருப்பதில்லை. மதிப்பிற்குரிய  ஒன்றாகவும், பிறிதொரு தருணத்தில் விமர்சனத்துக்குரிய ஒன்றாகவும்  மாறும் இயல்புக்குள்ளாகின்றது  எமது மதிப்பீடுகள்.  ஒன்றன் மீதான ஆதரவையும், ஓர் சிந்தனை மீதான நம்பிக்கையையும் கைவிட நேரும் தருணங்களையும் நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
இவ்வாறுதான்  தலித் சமூகத்தின்  பல்வேறு சமூக மேம்பாடுகளுக்கு  பின்புலமாக திகழ்ந்த    காலணிய ஆதிக்கம் குறித்த எமது மதிப்பீடுகளின் நிலையும்  அமைந்திருக்கின்றது. இந்திய தேசிய விடுதலை குறித்து வலியுறுத்தப்பட்டு காலணிய ஆட்சியை துரத்த முற்பட்ட வேளைகளில் காலணிய அதிகாரம் இந்தியாவில் தொடர்ந்து இருக்கவேண்டிய அவசியத்தை தலித் சமூகம் சார்ந்து   வலியுறுத்தியவர்களில் அம்பேத்கர்,பெரியார்  போன்ற சமூக சிந்தனையாளர்கள் மிக  முக்கியமானவர்கள் என  நாம் அறிகின்றோம். தலித் சமூகத்தின் மீதான இந்துப் பார்ப்னீய சாதிய ஒடுக்குமுறைக்  கண்ணிகளை நொருக்குவதற்கு காலணியம் ஆற்றிய பங்கு குறித்து பல்வேறு முனைகளில்  விரிவாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இவ்வாறான காலணிய ஆதிக்கத்தின் மீதான தலித் சமூகத்தின் மதிப்பீடானது பிறிதொரு முனையிலிருந்து சரிந்து நொருங்குவதையும்  நாம் காண்கின்றோம்.  அனைத்துச் சாதியினரும்  மிதித்து உதைத்து உயர்ந்து செல்வதற்கான சாதியப்படிநிலை  அமைப்பின் கடைநிலை படியாக இருப்பவாகள் அருந்ததிய சமூகத்தினர்.  அருந்ததியர் சமூகத்தின்   அவலநிலைக்கு காரணமாக இருந்ததும் காலணியம் என்கின்றபோதுதான் எமது காலணியம் குறித்த  மதிப்பீடுகள் உதிர்ந்து போகின்றது.  வர்ணாச்சிரம தர்மத்தால் வரலாற்றுவெளியில் துரத்தப்பட்டவர்களில் ஒருபகுதியினரான அருந்ததியினர் மிகவும் ஒடுக்கப்பட்டு, புறக்கணிக்கப்பட்டவர்களாக வரையறுப்பதில் காலணிய அதிகாரமே  பெரும்பங்காற்றியுள்ளது.
சக்கிலியர், பகடையர், மாதாரியர் அருந்ததியர் என அழைக்கப்படும் சமூகத்தினர் காலணிய ஆதிக்கத்திற்கு முன்பு உயர்ந்த சமூக நிலையில் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்கள் தோல் பதனிடுவதிலும்,  தோல்  மூலமான கைப்பணி வேலைகளில்  தேர்ச்சிபெற்றவர்களாகவும், போர்வீரர்களாகவும் இருந்து வந்துள்ளனர். காலணிய ஆதிக்கத்தின் வருகைக்குப்பின்பான தொழில் நுட்ப மாற்றத்தின் பிற்பாடு  இவர்கள் தூய்மைப் பணிகளிலும் குறிப்பாக மலம்வாரும் தொழிலிற்கும்  மாற்றப்பட்டார்கள். இவ்வாறான தொழில் மாற்றத்திற்கு காலணிய அதிகாரமே காரணமாக இருந்துள்ளது.  இவ்வாறு அருந்திய சமூகத்தினரின் பல்வேறு சமூகப்பரிமாணங்களையும் அதன் சமூக நியாயங்களையும் முன்நிறுத்தி   பாய்ந்து  குதித்தோடி வருகின்றது ‘வெள்ளைக்குதிரை.’
ஆம் தமிழ் நாடு சாக்கிய அருந்ததியர் சங்கத்தின் இரு மாத வெளியீடாக வருகின்றது‘வெள்ளைக் குதிரை’
“…அருந்ததியர் என்றாலே தூய்மைப் பணியாளர், செத்தமாடு அறுப்போர் என்கிற மையநீரோட்டப் புனைவுகளைத்  தகர்த்து, மாவீரர்களாகத் திகழ்ந்து, படையணி நடத்திய பகடைகளின் வரலாற்றை, தோல் தொழில் நுட்பத்தில் தனிச்சிறப்புப் பெற்ற கைவினைஞர் பண்பாட்டை, உழவுத் தொழிலுக்கு ஆதாரமாய் விளங்கிய எம்மக்களின் சமுகப்பங்களிப்பை பொது வெளியில் முன்வைக்க ஆற்றலின் குறியீடான மதுரை வீரனின் வெள்ளைக் குதிரையில் ஏற்றிப் புழுதிப் பறக்க வருகிறோம்….” என ‘வெள்ளைக் குதிரையை’ (சஞ்சிகை) அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இச்சஞ்சிகையின் ஆசிரியர்களாக கண்ணன், காலிங்கராயன், எம்.மதிவண்ணனும், நிர்வாக ஆசிரியராக கருப்புப் பிரதி நீலகண்டனும் பணியாற்றி வருகின்றனர். இவ்விதழின் அறிமுகத்தைத் தொடர்ந்து எல்.சி.குருசாமி அவர்கள் மார்ச் 7,1924 ஆம்  அண்டு  சட்டமன்றத்தில் ஆற்றிய உரையை மொழிபெயர்த்து தந்துள்ளார் கவிஞர் எம்.மதிவண்ணன் அவர்கள்.  அவ்வாண்டில் மேற்கொள்ளப்பட்ட பட்ஜெட் மீதான விவாதத்தின்போதே எல்.சி.குருசாமி அவர்க்ள அவ்வுரையை ஆற்றியுள்ளார். ஒடுக்கப்படும் தலித் சமூகத்தவர்களும், கடற்றொழில் செய்யும் சமூகத்தவர்களுமே அரசிற்கு பல்வேறு விதத்திலும் வருமானங்களை ஈட்டித்தருபவர்களாக இருந்து வந்தவர்கள். ஆனால் அவர்களது சமூகமேம்பாட்டிற்கான விடயங்களில் அரசு கவனம் கொள்ளாதது குறித்து பல்வேறு தரவுகளுடனும், புள்ளி விபரங்களுடனும் எல்.சி.குருசாமி அவர்கள் விவாதித்துள்ளார். “பார்ப்பனர் அல்லாதார் அதிகாரத்திற்கு வந்த போது தாழ்த்தப்பட்ட மக்களாகிய நாங்கள் அவர்களிடமிருந்து பெரிதாக எதிர்பார்த்தோம். எங்களுடைய பிரச்சினைகளைக் கைகளில் எடுப்பார்கள் , நாங்கள் கேட்காமலேயே அவர்களாகவே செயலில் இறங்கு வார்கள் என்று உண்மையாகவே எதிர்பார்த்தோம். தங்களது சொந்த முன் முயற்சிகளால் எங்களுக்காக ஒரு பெரும் பங்கை ஆற்றுவார்கள்  என நாங்கள்  நினைத்தோம்.” என  தமது சமூகத்தின்  எதிர்பார்ப்பின்  ஏமாற்றத்தை நினைவுறுத்தியே தனது உரையை ஆரம்பித்துள்ளார் எல்.சி குருசாமி அவர்கள்.
‘வேட்டையாளர்களால் எழுதப்பட்ட சிங்கத்தின் கதை’ எனும் தலைப்பில் குமரன்தாஸ் அவர்கள் ஓர் கட்டுரை எழுதியுள்ளார். வாசகர்கள், தலித் சமூக அக்கறையாளர்கள் அறியவேண்டிய பல தகவல்களை உள்ளடக்கியது  இக்கட்டுரை.  ‘மதுரைவீரன்’ எனும் திரைப்படத்தின் வரலாற்றுப் புனைவுகளை தகர்த்து செல்கிறது இக்கட்டுரை. அருந்ததிய சமூகத்தை சேர்ந்த மதுரைவீரன் எவ்வாறு உயர்சாதி பிம்பமாக்கப்பட்டான் அதில் எம்.ஜி ராமச்சந்திரனின் பாத்திரம் மற்றும் துணைப் பாத்திரங்கள் பற்றிய புனைவுகள் எவ்வாறு பிரயோகிக்கப்பட்டுள்ளது என்பதை ஆய்விற்குட்படுத்தியுள்ளார் குமரன்தாஸ்.
“மதுரை வீரன் ரத்தமும் சதையுமாக வாழ்ந்த ஓர் மனிதன், தமிழ்ச் சமூகத்தில் உலவிய ஓர் மாவீரன் என்ற உண்மையை நாம் தொடர்ந்து நினைவூட்டுவதும் கடவுள் தன்மையை மறுத்து மனித்தன்மையை அளிப்பதும் செயலற்ற பூஜையறைப் படம் என்ற நிலையிலிருந்து செயலூக்கம் நிறைந்த ஓர் தலைவனாக மாற்றுவதும் இன்றைய தேவையாகும். அதற்கு மதுரை வீரன் குறித்த புதிய வரலாற்றை நாம் எழுத வேண்டியதும், கடந்தகால வரலாறு எனும் சாம்பல் மேடுகளை ஊதி அதன் அடியாழத்தில் கனன்று கொண்டிருக்கும் தீக்கங்குகளை (உண்மைகளை) வெளிக்கொணர வேண்டும் என்பதும் உடனடித் தேவையாகும். அடுத்து அருந்ததியர் இன்று போலவே எல்லாக் காலங்களிலும் துப்புரவுப் பணிகளிலும் இன்னபிற தூய்மைக்கேடான பணிகளிலும் ஈடுபட்டிருந்தனர் என்று கருதுவோர்  வரலாற்றை சற்று கூர்ந்து  நோக்கினால் சில உண்மைகளைப் புரிந்து கொள்ளமுடியும். இவ்வாறான துப்புரவுப்பணி மற்றும் மலம் அள்ளுவது போன்ற வேலைகள் எல்லாம் ஆங்கிலேயர் வருகைக்குப் பின் ஏற்பட்ட வழக்கமாகும்.
அதற்கு முன் தமிழர்கள் வெட்ட வெளிகளில் தங்களது இயற்கைத் தேவைகளைப் போக்கிக் கொண்டனர் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கக்கூஸ் என்ற சொல் போர்த்துக்கீசிய மொழிச் சொல் என்பதும் குறிப்பிட்டுக் கூறவேண்டிய ஒன்றாகும். கக்கூஸ் வந்த பிறகுதான் மலத்தை எடுத்து அப்புறப்படுத்த வேண்டிய தேவை வந்தது.” என   அருந்ததிய சமூகத்தின் வாழ்வியல் மாற்றங்களின் காரணிகளையும், அருந்ததிய சமூகத்தின் தலைவனான  மதுரைவீரன் வரலாற்றை தமது வரலாறாக  புரட்டிய ஆதிக்க சாதியிரின்  சமூக அதிகாரங்களையும் கேள்விக்குள்ளாக்குகின்றது குமரன்தாஸ் அவர்களது கட்டுரை. சிங்கத்தின் கதையை சிங்கம் தான் சொல்ல வேண்டும். அருந்தியர் கதையை அருந்ததியர்தான் சொல்லவேண்டியுள்ளது.
‘வெள்ளை அறிவுஜீவி அடியாட்களும் அருந்ததியர் வரலாறும்’ எனம் தலைப்பில் எம்.மதிவண்ணன் எழுதிய கட்டுரையானது,  அருந்ததியர் வரலாற்றை எழுதிய பல ஆங்கிலேயே அறிஞர்களை கேள்விக்குள்ளாக்குகின்றது.  “…இப்போர்கள் முடிந்து ஏறத்தாழ அறுபதாண்டுகள் கழித்து ஆங்கிலேய அதிகாரிகள், அன்றைக்கு இருந்த பல்வேறு மாவட்டங்களின் வரலாறுகளைத் தொகுக்கும் பணிகளில் இறக்கிவிடப்பட்டார்கள்.
நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போன்று இவர்கள் வரலாற்று ஆசிரியர்கள் அல்லர். வஞ்சகத்தாலும் சூழ்ச்சியாலும் இந்நாட்டைக் கைப்பற்றி ஆட்சி நடத்திக் கொண்டிருந்த ஆக்கிரமிப்பாளர்களில் ஒருவராகவும், அவ்வாட்சி நிர்வாகத்தில் பங்காற்று பவர்களாகவும் இருந்தவர்களே இந்த ஆங்கில நூலாசிரியர்கள். எனவே அவர்களது நூல்களில் தங்களுக்கு எதிரான போர்களில் ஈடுபட்ட சாதிக்குழுக்கள், தமக்கு இடைஞ்சலாகவும் தொந்தரவாகவும் இருந்தவர்கள் ஆகியோர் மீது வெறுப்பும் வன்மமும் மிகவும் துலக்கமாகவே வெளிப்பட்டன. இதற்கு மிகச் சிறந்த எடுத்துக் காட்டாக, அருந்ததியர்கள் குறித்து இவ் அய்ரோப்பிய நூலாசிரியர்கள் எழுதியவை  திகழ்கின்றன….” என பல விரிவான ஆய்வுகளை சுட்டிக்காட்டி நகர்கின்றது மதிவண்ணனின் கட்டுரை.
‘சாவனூரின் முடைநாற்றம்:ஆனந்த்  டெல்டும்டே கருத்துக்களை முன்வைத்து’ எனும் தலைப்பிலான கட்டுரையை  கண்ணன் அவர்கள் எழுதியுள்ளார். வட கர்நாடகாவின் காவேரி மாவட்டத்திலுள்ள சாவனூர் எனும் கிராமத்தில் நடந்த அருந்ததியர்களின் போராட்டம் குறித்த கட்டுரை. சாவனூர் அருந்ததிய சமூகத்தினர்  தங்கள் போராட்டத்தின் குறியீட்டுச் சின்னமாக  கைகளில் ஏந்தியது சிகப்புக்கொடியோ,மீன் கொடியோ, புலிக்கொடியோ அல்ல. மலங்களைத் தமது உடல்களில் பூசியவாறே தமது போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர் என அறியும்போது பிற போராட்டக் குறியீடுகள் அனைத்தும் உருகிச் சிதைந்து போவதான உணர்வை தவிர்க்க முடியாதுள்ளது.  அத்தோடு மார்க்சிய புலமையாளரான ஆனந்த் டெல்டும்டே அவர்கள் சாதிய சமூக பாகுபாடுகளுக்கு எதிராக வர்க்க சிந்தனையில் ஒன்றிணையக் கோரும் கருத்தியலை  கேள்விக்குட்படுத்துவதாகவும்  அமைகின்றது கண்ணனது ஆய்வு.
“பிரச்சினை மிக எளிதானது, ஆதலால் சாவனூர் நகராட்சி உறுப்பினர்கள் அதனைக் கண்டும் காணாதது போல மறந்து விட்டிருக்கலாம். ஆனால் அதில் தொடர்புடைய தலித் மக்களுக்கு அது வாழ்வா? சாவா? என்கிற போராட்டம்! ஒரு வணிகப் பேரங்காடியைக் கட்டுவதற்காக தலைமுறை தலை முறையாக வாழ்ந்து வரும் தங்கள் நிலத்திலிருந்து அவர்கள் வெளியேற வேண்டும் என்று நகராட்சி உத்தரவிட்டது. அந்த உத்திரவு சட்டபடி தவறு என்ற போதிலும் அதை அதிகார வர்க்கத்திற்கு எடுத்துச் சொல்ல யாரால்தான் இயலும்? தலித்மக்கள்  தங்கள்  கோரிக்கையை உரத்துக் கதறிக் கொண்டிருந்த போதிலும் அது அந்தச் செவிடர்களின் காதுகளில் நுழையவே இல்லை. அதற்கு மாறாக இன்னமும் நெருக்கும் விதமாக நகராட்சி அலுவலர்கள்அவர்களின் குடிநீர் இணைப்பைத் துண்டித்தனர்.  தாழ்த்தப்பட்டோரிலும் தாழ்த்தப்பட்டவர்களான, தீண்டத்தகாதவரென கருதப்படுபவர்களான ஏழைச்சமூகத்தினரான பங்கிகஷீமீ வேறெங்கு சென்றும் குடிநீர் எடுக்க அனுமதிக் கப்படுவதுமில்லை. உலர்மலக் குழிகளைச் சுத்தப்படுத்தி அதில் கிடைக்கும்சில்லறைப் பணத்தில் வாழும் அவர்களால் குடிநீரைக் காசு கொடுத்து வாங்கிக் கொள்ளவும் இயலாது.
மற்றவர் களுக்கு எளிதாகத் தெரியும் விசயங்கள்அவர்களுக்கு உயிர்காவும் வேதனைகளாகும்.
அதுதான்    அவர்களை மனித மலத்தை தங்கள் உடல் முழுவதும் பூசிக் கொண்டு தன்னை வருத்திக்
கொள்ளும் நிலைக்குத் தள்ளியது.” என்பதோடு சாதியம் குறித்த ஆனந்த் டென்டுல்டே அவர்களின் மார்க்சிய சிந்தனை ஆய்வானது சமூகவிடுதலையை  வேண்டிநிற்கும்  இந்திய சமூகத்திற்கு எவ்வகையில் நிவராணமாக அமையும் எனும் அய்யப்பாட்டின் அடிப்படையில் செல்கிறது கண்ணனின் இக்கட்டுரை.
மேலும் தொடாச்சியாக எம்.மதிவண்ணனின் இரு கவிதைத் தொகுப்பை க.காசிமாரியப்பன் அவர்கள் திறநாய்வு செய்துள்ளார். நடைபெற்ற அருந்ததியர் வரலாறு மீட்பு மாநாடு நிகழ்வு குறித்த பதிவை வீரக்குமரனும்-தமிழ்மணியும் மேற்கொண்டுள்ளனர். தமிழ்ச்  சூழலும் அருந்ததியர் எழுச்சியும் எனும் கட்டுரையை ராமஜெயம் அவர்கள் எழுதியுள்ளார்.
அருந்ததியர் உள்ஒதுக்கீடு போராட்டக்குழுவின் அருந்ததியர் வராலாறு மீட்பு மாநாட்டில் எடுக்கப்பட் தீர்மானங்களையும் , ரி.வி லுவிஸின் இரண்டு கவிதைகள் காலிங்கராயனால் மொழிபெயர்க்கப்பட்டு அனைத்தையும் சுமந்தவாறு மதுரைவீரனின் ‘வெள்ளைக்குதிரை’ எம்முன்னால் நிற்கின்றது.
அருந்ததிய சமூகத்திற்கான உள்ஒதுக்கீட்டிற்கான நியாயங்களையும். எழுதப்பட்ட வரலாற்றுப் புரட்டுகளையும்  கேள்விக்குள்ளாக்கும் படைப்புகளைத் தாங்கியது‘வெள்ளைக்குதிரை’ .
‘வெள்ளைக்குதிரையின்’ அனைத்து வளாச்சிக்கும்  ஆதரவாகவும், துணையாகவும் ‘இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி’ (பிரான்ஸ்) செயலாற்றும்.