இறுதிக்கட்ட மோதல்களின் போது சரணடைந்து புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் 900 பேர் நேற்று விடுவிக்கப்பட்டனர். வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் இவர்கள் தமது குடும்பத்தினருடன் இணைக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிறி கஜதீர, இளைஞர்கள் விவகாரம் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும, ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுசந்த ரணசிங்க, வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி.எம்.எஸ்.
சாள்ஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர். புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் குடும்பத்தினருடன் ஒப்படைக்கப்பட்டதுடன், விடுவிக்கப்பட்டவர்கள் விவசாயம் செய்வதற்கான பொருட்களும் கையளிக்கப்பட்டன.
புனர்வாழ்வளிக்கப்பட்ட 900 பேரில் குறிப்பிட்டவர்கள் நேற்றையதினம் விடுவிக்கப்பட்டதுடன், விடுவிப்பதற்கான ஆவணங்கள் பூர்த்திசெய்யப்படாத எஞ்சியவர்கள் இன்றும், நாளையும் விடுவிக்கப்படவுள்ளதாக அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இவ்வருட இறுதிக்குள் புனர்வாழ்வளிக்கப்பட்ட எஞ்சிய 3000ற்கும் அதிகமானவர்களை விடுவிப்பதே அமைச்சின் பிரதான இலக்கு என மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிறி கஜதீர நேற்றைய நிகழ்வில் குறிப்பிட்டார்.
விடுவிக்கப்பட்டவர்கள் தமது சொந்த இடங்களுக்குச் செல்வதற்கான விசேட போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. விடுவிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சியை வெளியிட்டிருந்தமையைக் காணக்கூடியதாகவிருந்தது.
இதேவேளை, எதிர்வரும் டிசம்பர் முதலாம்திகதிக்கு முன்னர் புனர்வாழ்வளிக்கப்பட்ட 3,200 எல்.ரி.ரி.ஈ. போராளிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை சீர்திருத்த அமைச்சர் சந்திரசிரி கஜதீர தெரிவித்துள்ளார்.
இவ்விதம் விடுவிக்கப்பட்ட முன்னாள் எல்.ரி.ரி.ஈ. போராளிகள் அனைவருக்கும் வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுப்பதுடன் அவர்களுக்கு விவசாயம் செய்ய விருப்பம் இருப்பின் காணிகளையும் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் இவர்களுக்கு புதிதாக நிர்மாணிக்கப்படும் வீடுகளும் அவர்களின் தேவைக்கேற்ப கொடுக்கப்படும் என்றும் கூறினார்.
இவர்களுக்கு சுய வேலைவாய்ப்புக்களை ஆரம்பிப்பதற்கு 10 ஆண்டு காலத்தில் மீளச் செலுத்தக்கூடிய வகையில் மிகவும் குறைந்த வட்டியுடனான கடனுதவியை வழங்குவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இவ்விதம் புனர்வாழ்வு பெற்ற எல்.ரி.ரி.ஈ. போராளிகள் மீண்டும் பிரிவினைவாத ஆயுதப் போராட்டங்களில் ஈடுபடுவதை தவிர்க்கும் முகமாகவே இத்தகைய சலுகைகளும் வாழ்வாதாரங்களும் அரசாங்கத்தினால் பெற்றுக்கொடுக்கப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்தார். அவசியம் ஏற்படின் இவர்களுக்கு சுய வேலைவாய்ப்புக்களை ஆரம்பிப்பதற்கான தொழிற் பயிற்சிகளும் பெற்றுக்கொடுக்கப்படும்.
இவர்களைவிட கடந்த சனிக்கிழமை புனர்வாழ்வளிக்கப்பட்ட 906 முன்னாள் எல்.ரி.ரி.ஈ போராளிகளை விடுவிப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் இவர்களுக்குரிய விடுதலைப் பத்திரங்கள் இப்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும் நாளை இந்த 906 பேரும் விடுவிக்கப்படுவார்கள் என்றும் கூறினார்.
0 commentaires :
Post a Comment