நேட்டோ தாக்குதலால் லிபியாவின் இதுவரை 718 பொதுமக்கள் கொல்லப் பட்டுள்ளதாகவும் 4,067 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் அதிலும் 433 பேர் படுகாயத்திற்கு உள்ளாக்கியுள்ளதாகவும் லிபியா அரசு அறிவித்துள்ளது.
திரிபோலியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பேசிய லிபிய அரசின் பேச்சாளர் முஸ்ஸா இப்ராஹிம் இந்த தகவலை வெளியிட்டார்.
நேற்று தாக்குதல் ஆரம்பமான கடந்த மார்ச் 19ஆம் திகதி முதல் மே 26 ஆம் திகதி வரையான காலப்பிரிவிலேயே நேட்டோ தாக்குதலால் மேற்படி 718 பொது மக்கள் கொல்லப்பட்டதாக முஸ்ஸா இப்ராஹிம் குறிப்பிட்டார். இதில் இராணுவ வீரர்கள் சேர்க்கப்படவில்லை என்றும் சிவிலியன்கள் கொல்லப்பட்ட தொகையே இதுவென்று அவர் குறிப்பிட்டார்.
எனினும் இந்த தகவலை நேட்டோ படை முற்றாக மறுத்தது. கடாபி ஆதரவுப் படையின் தாக்குதலில் இருந்து அங்கிருக்கும் பொதுமக்களை காப்பதற் காகவே தாம் லிபியா மீது தாக்குதல் நடத்துவதாக நேட்டோ கூறியுள்ளது.
இதனிடையே லிபிய தலைநகர் திரிபோலியில் நேட்டோ படையினர் நேற்று முன்தினமும் வான் தாக்குதல் நடத்தியது. இதன்போது திரிபோலியில் நான்கு பயங்கர வெடிப்புச் சத்தம் கேட்டதாக அங்கிருக்கும் ஏ.எப். பி. செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று முன்தினம் இரவு 9.45 மணியளவில் முதலிரண்டு வெடிப்பு சத்தங்கள் கேட்டதாகவும் தொடர்ந்து 10 நிமிட இடைவேளையில் மேலும் இரண்டு வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகவும் அந்த செய்தியாளர் கூறியுள்ளார்.
0 commentaires :
Post a Comment