~~புலிகளின் பணப்பலத்தால் சோடிக்கப்பட்டதே விவரணக் காட்சிகள்”’''
இலங்கையில் நடந்த இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாக சித்தரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள சனல் - 4 இன் விவரண படம் முற்றிலும் பொய்யானதென இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சின் பணிப்பு க்கமைய, லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகம் இது தொடர்பாக அறிக்கையொன்றை நேற்று வெளியிட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, சட்டவிரோத ஆயுதக் குழுவொன்றினால் பலாத்காரமாக பணயக் கைதிகளாக்கப்பட்ட அப்பாவி பொதுமக்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட இலங்கை இராணுவம் இதுவரைக்கும் உலகெங்கிலுமே நடைபெற்றிராத பாரிய மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்டது. உயிர்களைக் கையில் பிடித்துக் கொண்டு வாழ்வது நிச்சயமற்றதென்ற நிலையில் புலிகளால் மனிதக் கேடயங்களாகப் பாவிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்களை மீட்கும் பணியில் இலங்கை இராணுவம் ஆற்றிய பங்கு அளப்பரியது. இதனால் இலங்கையின் கீர்த்தியும், புகழும் உலகம் முழுதும் வியாபித்தது.
இதைத் தாங்கிக்கொள்ள இயலாத புலிச் சார்பு ஊடகங்களே சனல் 4 விவரணப் படத்தில் இலங்கைக்கு எதிராக பாரிய புரளியை கிளப்பி விட்டுள்ளது. யுத்தத்துக்குப் பின்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள இன உறவையும் புரிந்துணர்வையும் சீர்குலைத்து மீண்டும் இங்கு பிரிவினைவாதம் பயங்கரவாதத்தை தூண்டி அதனூடாக ஆதாயம் காண முயல்வோரின் கெட்ட வேலைகளே இவை. நாட்டின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் நல்லிணக்க ஆணைக்குழு இதுவரைக்கும் இரு நூறுக்கும் மேலான மக்கள் சந்திப்புக்களை நடத்தியுள்ளது. எனினும் இலங்கை இராணுவத்துக் கெதிரான எந்த முறைப்பாடுகளும் இதுவரை முன்வைக்கப்படவில்லை. அவ்வாறு முன்வைக்கப்பட்டு அவை நிரூபணமானால் உரிய நடவடிக்கை எடுக்கவும் நல்லிணக்க ஆணைக்குழு தயாராகவுள்ளது- பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ள வடக்கு, கிழக்கு மக்களின் புனர்வாழ்வு, உட்கட்டமைப்பு அபிவிருத்தி வேலைகளை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது. சட்ட இறைமையுள்ள அரசொன்று செய்ய வேண்டிய பணிகளே இலங்கையின் கடைசி யுத்தத்தில் செய்யப்பட்டன.
சனல் - 4 விவரணப் படம் ஒளிபரப்பிய காட்சிகள் அனைத்தும் புலிகளின் தரப்பால் வழங்கப்பட்டவை. அதிநவீன தொழில்நுட்ப உதவிகள், புலிகளின் பண வசதிகளைக் கொண்டு நன்கு கச்சிதமாக சோடிக்கப்பட்டவை. சனல் 4 விவரணக் காட்சிகளின் உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளதால் பெரும்பாலான நாடுகள் இதை நம்பத் தயாராக இல்லை.
ஆனால் வெளிநாடுகளிலுள்ள சில புலிச் சார்பு குழுக்களே தங்களது சொந்த நலனுக்காக இதைத் தூக்கிப் பிடிக்கின்றன. இவ்விடயத்தில் இலங்கை அரசு அதீத அக்கறை செலுத்தி வருகின்றது.
பயங்கரவாதப் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட மக்கள் சுதந்திரமாகவும், நிம்மதியாகவும் வாழுகின்ற இன்றைய சூழலில் இவ்வாறான போலி விவரணக் காட்சிகள் அம்மக்களின் சந்தோஷம், சுதந்திரம் என்பவற்றை மேலும் சிக்கலுக்குள்ளாக்குகின்ற முயற்சியாகவே இதை மக்கள் கருதுவதாக அரசாங்கம் கருதுகின்றது.
0 commentaires :
Post a Comment